திரை விமர்சனம்

ஆகஸ்ட் 31, 2008

பெங்களூரில் பெர்க்மன் வாரம்!

இங்க்மார் பெர்க்மன் நினைவு திரைப்பட வாரம் பெங்களூரில் இன்று துவங்கியது. சுஜித்ரா திரைப்பட சமூகத்தின் திரையரங்கில் வைல்டு ஸ்டராபரீஸை மீண்டும் பார்த்து ரசித்தேன். ஸ்வீடன் தூதரகம் மற்றும் பாலடோர் திரைப்பட நிறுவனத்தின் ஆதரவுடன் இந்த திரைப்பட வாரம் நடைபெறுகிறது. வருகிற சனிக்கிழமை முடிவடையும்.

வைல்டு ஸ்டராபரீஸுக்கெல்லாம் விமர்சனம் எழுதவேண்டிய அவசியமிருப்பதாய் தெரியவில்லை. கடந்த ஆண்டு மறைந்த பெர்க்மனின் படங்களிலேயே மிகவும் இலகுவான படம். நான் பார்த்த அதிசிறந்த படங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள படம்! அவ்வளவுதான்.

வரும் மாதத்தில் நிகழவிருக்கிற இரண்டு திரைப்பட விழாக்கள் பற்றி இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ‘தண்ணீரிலிருந்து எழும் ஒலிகள்‘ என்னும் தண்ணீர் பற்றிய விவரண திரைப்பட விழா மற்றும் அரசு சாரா அமைப்புகளின் கூட்டம் செப்டம்பர் 13 அன்று துவங்குகிறது.

லூமியர் கொண்டாடங்கள் என்னும் அமைப்பு நடத்தும் மலையாள திரைப்படத் திருவிழா செப்டம்பர் 19 அன்று துவங்குகிறது. லாவண்யா திரையரங்கில் நாலு பெண்கள், மரண சிம்மாசனம் உள்ளிட்ட படங்களைப் பார்த்து ரசிக்கலாம்.

முதலில் இங்கு பதியப்பட்டது.

ஆகஸ்ட் 24, 2008

மாத்தி மாய் (என் அம்மா)

பெங்களூரு திரைப்பட சமூகம் சார்பாக திரையிடப்பட்ட மாத்தி மாய் என்னும் மராத்தி மொழி படத்தை சனிக்கிழமையன்று பார்த்தேன். மகேஷ்வேத்தா தேவி வங்காள மொழியில் எழுதிய புதினத்தை சித்ரா பாலேகர் மராத்தியில் எடுத்திருக்கிறார். இறந்த குழந்தைகளை புதைக்கும் சோகமான வேலை செய்யும் ஒரு பெண் தாயாவதும், அதனால் நிகழும் விபரீதங்களும் படத்தின் கதை.

அதுல் குல்கர்னி, நந்திதா தாஸ் விளம்பரத்துக்கென நாயகர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். பாவம் இயக்குனரைச் சொல்லி குற்றமில்லை. செத்துப்போன மராத்தி திரைப்பட உலகில் படமெடுத்ததற்கே அவரை பாராட்டவேண்டும்! படம் பார்க்க வந்திருந்த கிரீஷ் கர்னாட், படத்தின் இசை குறித்து இயக்குனரிடமே குறை சொன்னது மிகவும் ரசக்குறைவாக இருந்தது.

சித்ரா பாலேகர் பேசும்போது, “நாம் பிரஞ்சு மொழி திரைப்படங்களை திரையிட்டாலும் இந்தியாவின் பிறமாநில மொழிப் படங்களை திரையிடமாட்டோம்” என்றார். ம்… ஒரே நாளில் ஐந்தாறு மொழிப்படங்கள் திரையிடப்படும் பெங்களூருக்கு இந்த விமர்சனம் பொருந்தாதுதான். ஆனால் இன்றிரவு இருநூறு ருபாய் கொடுத்து Far North என்னும் படுசுமாரான படத்தை பார்த்தபோது, என்.டி.டிவி லூமியர் நிறுவனம் இந்திய மொழித் திரைப்படங்களையும் விநியோகிக்கலாம் என்று தோன்றியது.

சாவதற்கு முன் பார்க்கவேண்டிய 50 படங்கள்‘ என்கிற சவடாலோடு (பிரதி வெள்ளி இரவு 11 மணிக்கு) யு.டிவி உலகத் திரைப்பட அலைவரிசையில் ஒரு தொடரை ஆரம்பித்திருக்கிறார்கள். முதல் வாரத்தில் ஹீரோ என்கிற ஹாங் காங் படத்தை திரைடயிட்டார்கள். இது நான் சாவதற்கு முன் பார்க்கவேண்டிய படமா? Crouching Tiger, Hidden Draganனை மீண்டுமெடுக்க செய்யப்பட்ட இந்த வீண் முயற்சியைப் பார்த்து எவனாவது சாகாமலிருந்தால் சரி!

முதலில் இங்கு பதியப்பட்டது.

ஆகஸ்ட் 20, 2008

Expired (2007): சிந்திக்கவைக்கின்ற காதல் கதை.

கோப்பு வகை: ஆங்கிலத் திரைப்படம், திரைப்படம் — bmmaran @ 9:55 பிற்பகல்

சாதாரணமாக காதல் படங்கள் என்றால் அவை chick-flick (பெண்கள் மட்டும் விரும்பிப்பார்க்கும் படம்) என்று முத்திரை குத்தப்படுவது வழமை. நிச்சயமாக அந்த வரையறையை தப்பி நிற்கிறது இந்தப்படம். வீதியோர கார் தரிப்பிடங்களை நெறிப்படுத்தும் வேலை Claireவினது. தவறாக தரிக்கப்பட்ட கார்களிற்கு தண்டம் விதிப்பது Jay’யின் வேலை. வாழ்கையின் நடுப்பகுதியில் ஒண்டைக்கட்டையாக நிற்கும் இருவரும் அடிப்படையில் முரண்பட்ட மனம் கொண்டவர்கள். மிகவும் மென்மையான Claire, வாயைத்திறந்தாலே அடுத்தவரை சொற்களால் காயம்படுத்தும் Jay, இவர்கள் இடையில் காதல் மலர்வதும், அதை தக்கவைத்துக்கொள்ள இருவரும் படும் பாடுகளும் கதை. படம் பார்த்து முடிய, காதல் ஒன்று மலர்வதற்கு அடிப்படையாக என்ன தேவை என்பது பற்றிய உங்கள் எண்ணங்களை மீளாய்வு செய்யத்தோன்றும். வாழ்வின் இளமையில் எழும் காதலிற்கும், இளமையைத்தொலைத்த பின்பு உருவாகும் காதலிற்கும் இருக்கும் வித்தியாசத்தை அழகாகக்காட்டியிருக்கின்றார்கள். படத்தின் பிரதான இருபாத்திரங்களும் பொதுவாக ரசிக்க முடியாத குணாதியத்தைக் கொண்டிருக்கிறார்கள். அப்பிடி இரு பாத்திரங்களை பிரதானமாக வைத்து படம் எடுத்திருப்பது துணிச்சலான விடயம். நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ, சொல்லவந்ததை சொல்லிவிட்டு படத்தை முடித்திருக்கிறார்கள். துணிச்சலான ஒரு காதல் படம்! என்றாலும் சிறுவர்களோடு பார்ப்பதற்கு ஏற்றதல்ல.

“Expired” IMDB இணைப்பு

The Hunting Party (2007): போரின் கொடுமைகளும், அரசியலும்.

கோப்பு வகை: ஆங்கிலத் திரைப்படம், திரைப்படம் — bmmaran @ 9:10 பிற்பகல்

போரின் கொடுமையையும், சர்வதேச அரசியலின் அவலங்களையும் எடுத்துக்காட்டும் படம். சோகம், நகைச்சுவை, திகில், விறுவிறுப்பு என்று பலவித உணர்வுகளையும் அவ்வப்போது கலந்தாலும், சொல்லவந்த விடயத்தின் தீவிரத்திலிருந்து சற்றும் விலகாமல் அழகாக படத்தை எடுத்திருக்கின்றார்கள்.

உலகில் நடக்கும் போர்களின் நடுவில் சென்று தகவல் திரட்டும் செய்தியாளர் Simon Hunt (Rechard Gere); கூடவே ஒளிப்பதிவாளர் Duck (Terrence Howard). சிறப்பாக செயற்பட்டுக்கொண்டு வரும் இந்த இருவர் கூட்டணி Bosniaவில நடக்கும் ஒரு இனப்படுகொலை சம்பவததைப்பற்றிய செய்தியைத் திரட்டுவதற்காக வந்து சேருகின்றது. அந்த நிகழ்வின் கொடுமையினால் மிகவும் பாதிக்கப்ப்டுகின்ற Simon, நேரடி ஒளிபரப்பில் தண்ணியடித்துவிட்டுவந்து சொதப்புகின்றார். விளைவு பதவி நீக்கம். சோடியை இழந்த Duck களவேலையை விட்டுவிட்டு அமெரிக்காவிற்குத் திரும்பிவிடுகின்றார். ஐந்து வருடம் ஓடுகின்றது. இப்போது Bosniaவின் இனப்படுகொலைகள் ஓய்ந்துவிட, அமைதியை நிலைநாட்ட தங்கி நிற்கும் ஐ.நா துருப்புகள் இனக்கொலைகளில் ஈடுபட்ட போர்க்கால குற்றவாளிகளை (war criminals) தேடுவதாக சொல்லிக்கொண்டு நிற்கிறது. இவ்வாறான Bosniaவின் புதிய அமைதிக்கோலத்தை படம் பிடிக்கவென்று வந்து சேருகின்றார் Duck. இவர் எதிர்பாராத விதமாக, சடுதியாக இவரது முன்வந்து நிற்கின்றார் பலவருடங்களாக தொடர்பற்றுப்போன Simon. பழைய கவர்ச்சித் தோற்றத்தை முற்றுமுழுதாக தொலைத்துவிட்டு கரடுமுரடாக இருக்கும் Simon, பிரதானவொரு போர்க்கால குற்றவாளி இருக்கும் இடம் தனக்குத் தெரியும் என்றும், அவனைப் பேட்டி காண்பதற்கு தனக்கு உதவி செய்தால் தனது வாழ்வை தான் மீண்டும் கட்டியெழுப்பலாம் என்றும் கேட்கின்றார். Simonமீது இரக்கப் படும் Duck அதற்கு சம்மதிக்கின்றார். பேட்டிக்காக Bosniaவின் ஆபத்தான பகுதிக்குள் சென்றுகொண்டிருக்கும் வழியில், அந்த குற்றவாளியை பேட்டி காண்பது தனது நோக்கமல்ல, அவனை சிறைப்பிடிப்பதே தனது உண்மையான நோக்கம் என்பதை வெளிப்படுத்துகின்றார் Simon. Simonஇன் திட்டம் முட்டாள்த்தனமானது என்றாலும், பழைய நட்புக்காகவும், வேறு சிலகாரணங்களிற்காகவும் Simonனோடு ஒத்துப்போகின்றார் Duck. இவர்களது இலட்சியத்தை நோக்கிய பயணம் எவ்வாறு செல்கின்றது, எவ்வாறு முடிகின்றது என்பதை படம் விபரிக்கின்றது.

படத்தின் கதை உண்மை தகவல்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அடிக்கடி இலங்கையில் நடக்கும் போரினை ஞாபகப் படுத்துகின்றது. Terrence Howard தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை மீண்டும் நிலைநாட்டியிருக்கின்றார். என்றாலும் படம் கதையை சொல்லும் விதம்தான் கவனத்தை மிகவும் கவருகின்றது. கொஞ்சம் seriousஆன படம். பார்க்கலாம். (கடைசி எழுத்தோட்டத்தையும் கொஞ்சம் பார்க்கவும்)

“The Hunting Party” IMDB இணைப்பு

Horton Hears a Who! (2008): “எல்லாரது வாழ்வுமே முக்கியாமானதுதான்”

அண்மைக்காலத்தில் நகைச்சுவை நடிகர்கள் Jim Carreyஐயும் Steve Carellஐயும் பலர் ஒப்பிட்டுப் பார்த்ததுண்டு. இந்த காட்டூன் படம் இந்த இருவரின் பின்னணிக்குரலையும் பிரதானமான கதாபாத்திரமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இருவரும் தங்கள் தங்கள் பாத்திரத்தை அழகாக உயிரேற்றியிருக்கின்றார்கள்.

மிகவும் விசுவாசமான, வெள்ளையுள்ளம் கொண்ட யானை Horton (Jim Carrey). ஒரு ஒதுக்குப்புறமான ஒரு குகைக்குள் படிந்திருக்கும் ஒரு அற்பமான துகள் ஒன்றையே தமது நகரமாகக் கொண்டிப்பது who (அதுதான் அந்த இனத்தின் பெயர்) மனிதர்கள். இந்த whovilleஇற்கு ஒரு தலைவர் (mayor) (Steve Carell). தாங்கள் வசிப்பது ஒரு அற்பமான துகள் என்றோ, அதற்கு வெளியால் பெரியதொரு உலகம் இருக்கின்றதென்பதோ அறியாமல் இருக்கும் whoக்களில் உலத்தை ஒரு காற்று அடித்துக்கொண்டு வந்து Horton’இன் உலத்தில் போட்டுவிடுகின்றது. தங்கள் உலகத்தில் பெரியதொரு மாற்றம் வந்திருப்பதை whoville தலைவரைத்தவிர எவரும் உணர்வதாகவோ ஏற்பதாகவோ இல்லை. அதே சமயம் whoville தலைவரின் குரல் பெரியதொரு காதைக்கொண்டிருக்கும் Hortonஐத் தவிர எவருக்கும் கேட்பதாகவும் இல்லை. அவரவர் உலகத்தில் மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளமுடியாத கதைகளை நிலைநாட்ட முயன்று தோல்வியைத்தழுவிய பின்பு whoville தலைவரிற்கு உதவநினைக்கும் Horton, whovilleஐ அதன் பழைய இடத்திற்கு கொண்டுசேர்க்க தீர்மானிக்கின்றது. அதன் முயற்சிகள், அதற்கு வரும் தடங்கல்கள், whovilleஇல் தலைவர் படும் அவஸ்தைகள் என்பவற்றை படம் விபரிக்கின்றது.

படம் பரவாயில்லை. குழந்தைகள் ரசிப்பார்கள். நகைசுவைகள் கதைவசனத்திலும்விட பட ஓட்டத்தில்தான் இருக்கின்றது. பார்க்கலாம்.

“Horton Hears a Who!” IMDB இணைப்பு

ஆகஸ்ட் 14, 2008

Flawless (2007): சுவார்சியமான வைரக்கொள்ளை.

கோப்பு வகை: ஆங்கிலத் திரைப்படம், திரைப்படம் — bmmaran @ 6:32 பிற்பகல்

நீண்ட காலத்தின் பின்னர் Demi Moore‘இன் ஒரு படம். படம் 1960ஆம் ஆண்டில் லண்டனில் நடப்பதாக எடுக்கப்பட்டுள்ளது. “London Diamonds” என்பது உலகின் பிரதான வைரக்கல் மையம். தென்னாபிரிக்காவின் பல சுரங்கங்களிருந்தும் வைரக்கல்லை கொள்ளூபடி செய்து உலகின் பலபாகங்களிற்கும் சந்தைப்படுத்தும் நிறுவனம். மில்லியன் கணக்கில் காசு புரளும் இந்த நிறுவனத்தில் பகுதி நிர்வாகியாக இருப்பவர் Laura (Demi Moore). வேலையில் முன்னேறுவதற்காக லௌகீக வாழ்க்கையைத் துறந்து வாழ்வில் நடுப்பகுதியில் தனிமரமாக நின்றாலும், பெண்ணென்ற ஒரே காரணத்திற்காக வேலையில் இவரது முன்னேற்றம் தொடர்ந்து ஓரம் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றது. கடைசியாக நிர்வாகத்தின் சுயநலத்திற்காக இவரை வேலையிலிருந்து தூக்கவும் திட்டம் தீட்டப்படுகின்றது. இவ்வாற தருணத்தில் “London Diamonds”ஐ சூறையாடுவதற்கான திட்டத்தோடு வருகின்றார் Mr. Hobbs (Michael Caine). இவர் அதே நிறுவனத்தில் கூட்டித் துடைக்கும் வேலை பார்க்கும் வயது போன ஒரு தொழிலாளி. வாழ்க்கையில் விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் Laura இதற்கு சம்மதிக்கின்றார். இவர்களது திட்டமிடல், கொள்ளை, அதற்கு பின்பு வரும் சுவார்சியமான திருப்பம் என்று படம் போகின்றது.

படத்தின் இரு பிரதான நடிகர்கள்களும் நேர்த்தியாக தங்கள் பணிகளைச் செய்திருக்கின்றார்கள். கதையில் வரும் அந்த ஒரு திருப்பம் மிகவும் நன்றாக இருந்தாலும், அதிலிருக்கும் மர்மத்தை அவிழ்ப்பதற்கு எனக்கு நேரம் எதுவும் எடுக்கவுல்லை. ஏன் தான் படத்தில் இருக்கும் அத்னை பேரும் அவ்வளவு குழம்பியிருக்கின்றார்களோ தெரியாது. அலுப்பில்லாத படம், ஆனால் மிகவும் விறு விறுப்பான படம் என்றும் சொல்லுவதற்கில்லை.

படத்தில் முதிய Demi Mooreஇன் ஒப்பனை அந்தமாதிரி. இளம் Demi Mooreஐக் காட்டும் முதலாவது காட்சியில் வரும் பின்னணி இசை ஏதோ ஒரு பாடலை ஞாபகப் படுத்தியது – எதுவென்று இனங்கண்டுகொள்ள முடியவில்லை. உங்கள் யாருக்கேனும் தெரிந்தால் சொல்லவும்.

“Flawless” IMDB இணைப்பு

Young People F**king (2007): உடலுறவின் ஆறு படிகள்.

கோப்பு வகை: ஆங்கிலத் திரைப்படம், திரைப்படம் — bmmaran @ 5:44 பிற்பகல்

படத்தின் பெயர்தான் படத்தின் கதை. என்றாலும் ஒரு நீலப்படம் என்ற தோற்றத்திலிருந்து வெகுவாக தள்ளி நிற்கிறது படம் (வழமைக்கும் அதிகமாக நிர்வாணக் காட்சிகள் இருந்தாலும் கூட). அந்நியோன்னியமான நண்பர்களான ஒரு ஆண்-பெண், ஒரு தம்பதியினர், விவாகரத்து செய்த ஒரு தம்பதியினர், datingஇன் முதல்நாளில் இருக்கும் ஒரு சோடி, தனது காதலியுடனான உடலுறவில் பங்குகொள்ள room mateஇற்கு அழைப்பு விடுகின்ற தோழன் இப்படியாக ஐந்து சோடிகளது ஒரு நேர உடலுறவு நிகழ்வுகளை ஒட்டிப் போகின்றது கதை. படம் பாதி நகைச்சுவை, பாதி பாலியல் என்று போனாலும், அதில் மிகவும் அழகாக இழையோடியிருக்கும் மனித உறவுகள் பற்றிய ஆராய்வு மிகவும் நன்றாக இருக்கின்றது. படத்தில் கனேடிய முத்திரை தெளிவாகத் தெரிகின்றது. சுதிக்கு என்றால் என்ன, கதைக்கு என்றால் என்ன படம் இலகுவாக மனதைக் கவர்கின்றது. தாம்பத்தியத்தில் இருப்பவர்களும், காதலில் இருப்பவர்களும் பார்க்க வேண்டிய படம்.

“Young People F**king” IMDB இணைப்பு

Meet Bill (2007): வாழ்க்கையில் விரக்தியடைந்திருப்பவர்களிற்கு…

கோப்பு வகை: ஆங்கிலத் திரைப்படம், திரைப்படம் — bmmaran @ 5:16 பிற்பகல்

சலிப்படைந்துபோன வேலை, மனைவி வழி மாமனாரின் கையில் மாட்டிப்போன சொத்துக்கள், கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் மனைவி, உப்பிக்கொண்டுபோகும் வயிறு, படிய மறுக்கும் தலைமயிர் என்று வாழ்க்கையில் முற்றுமுழுதாக சலிப்படைந்து இருக்கும் Bill (Aaron Eckhart), மாமனாரின் கட்டாயத்தில் தனது பழைய பாடசாலையில் மாணவன் ஒருவனிற்கு mentor (வழி நடைப்படுத்துபவர்) ஆக இருக்க சம்மந்திக்கிறார். இந்த மாணவனுடனான இவரது தொடர்பு எவ்வாறு அவரது சொந்த வாழ்க்கையை பாதிக்கின்றாது என்பது கதை.

இப்படியான கதையோடு முன்பு வந்த படங்களைப்போல இந்தப்படமும் கதையை நகைச்சுவையுடன் கலந்து சொல்கிறது. என்றாலும் படத்தில் நகைச்சுவை வாய்விட்டு சிரிக்க வைக்கின்ற மாதிரியோ, பெரிதாக புத்திசாலித்தனமாகவோ இல்லை. Bill’இன் மனைவிக்கு வரும் Elizabeth Banks சிக்கென்று இருக்கிறார்; கூடவே உதிரி அழகிற்கு Jessica Alba. நடிப்பென்று சொல்வதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. படம் அலுப்பில்லை, என்றாலும் பெரிதாக ஆர்வம் ஊட்டுவதாகவும் இல்லை. படத்தை முடிவில்லாமல் முடித்திருப்பது, தமிழ்பட ரசிகர்கள் பெரும்பகுதியினரிற்குப் பிடிக்காது. ஆடைக்குறைப்புகள், வயதுக்குவந்தவர்களிற்கான நகைச்சுவைகள் இருப்பதால் படம் குடுபத்தோடு பார்ப்பது அவ்வளவு ஏற்றதல்ல.

“Meet Bill” IMDB இணைப்பு

ஆகஸ்ட் 10, 2008

The Russell Girl (2008): கைக்குட்டை அவசியம்

கோப்பு வகை: திரைப்படம் — bmmaran @ 5:14 மு.பகல்

Hallmark என்று சொன்னால் வாழ்த்து அட்டை செய்யும் நிறுவனம் என்றுதான் பலருக்குத்தெரியும். ஆனால் அது திரைப்படங்களையும் தயாரிப்பதுண்டு. Hallmark திரைப்படங்கள் எல்லாவுமே மிகவும் மென்மையானதாகவும், அன்பு, குடும்பம், சமுகம் என்பவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகவும் இருக்கும். அத்துடன் மனித உணர்வுகளின் வெவ்வேறு பரிணாபங்களையும் கிண்டிப்பார்ப்பதாக இருக்கும். The Russell Girl உம் அவ்வாறாகவே ஒரு மிகவும் மென்மையான ஒரு படம்.

சிறுவயதில் தவறுதலாக செய்த மிகவும் பாரதூரமான ஒரு பிழைக்காக பல ஆண்டுகளிற்குப் பின்பும் மனம் புளுங்கிக்கொண்டிருக்கும் இளம் பெண் Sarah (Amber Tamblyn). இவளின் வாழ்வில் இடியாக வந்து விழுகின்றது தனக்கு இரத்தப்புற்றுநோய் என்னும் செய்தி. தான் சிறுவயதில் செய்த பிழைக்கான பரிகாரம்தான் இது என்று நினைக்குகும் Sarah, நோய்க்கான வைத்தியத்தில் இறங்காது சொந்த ஊரில் இருக்கும் தனது பெற்றோரின் வீட்டிற்கு செல்கின்றாள். இவள் சம்பந்தப்பட்ட அந்த சர்ச்சைக்குரிய விபத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பது ஊரில் இவளது முன் வீட்டுக்குடும்பம் – முக்கியமாக முன் வீட்டு அம்மா (Jennifer Ehle). தனது நோய்யைப் பற்றி எவரிடமும் கூறாமல், முன் வீட்டு அம்மாக்காரியுடன் சமரசம் செய்யமுனைகின்றாள் Sarah. ஆனால் அந்த அம்மாவோ இவளைக் கண்டாலே செத்தவீடு என்று நிற்கின்றார். Sarahவின் குற்றவுணர்வுக்கு பரிகாரம் என்ன என்பதே படத்தின் மூலக்கரு.

இந்தியப்படங்களில்தான் சென்டிமென்ற் அதிகம் என்பவர்கள் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். படத்தின் இரு பிரதான பெண் பாத்திரங்களும் நிமிடத்திற்கு நிமிடம் கண் கலங்க வைக்கின்றார்கள். Amber Tamblyn வளர்ந்துவரும் நல்லதொரு நடிகை; Sarah பாத்திரம் இவரிற்காகவே வடிவமைக்கப்பட்டது போலவிருக்கிறது. நல்லதொரு படம் எடுக்க வில்லன் கதாபாத்திரம் தேவையில்லை என்பது Hallmark படங்களில் தெரியும்; இந்தப்படத்திலும் அவ்வாறே. படத்தில் பிடித்த இன்னொரு அம்சம் கதைவசனம் – நறுக்கென்ற வசனங்கள். உதாரணத்திற்கு: “Bad things happen to good people all the time”.

குடும்பத்தோடு பார்ப்பத்ற்கு அருமையான படம்.

“The Russell Girl” IMDB இணைப்பு

பெங்களூரில் ஜெர்மன் திரைப்பட வாரம்

கூதே மையம், ஜெர்மன் திரைப்பட நிறுவனம், சுஜித்ரா திரைப்பட சமூகம் ஆகியோர் சேர்ந்து நடத்தும் ஜெர்மானிய திரைப்பட வாரம், பெங்களூரில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8 ) முதல் நடந்துவருகிறது.

நேற்று Grave Decisions, The Edge of Heaven மற்றும் Head-On ஆகிய திரைப்படங்களைப் பார்த்தேன். நல்ல தரமுள்ள படங்கள். வரும் வியாழக்கிழமை வரை திரையிடப்படவிருக்கும் 21 படங்களில் (7 குழந்தைகள் திரைப்படங்கள்) 10 படங்களை பார்த்து விடுவதாக உத்தேசம்! அடுத்த வாரம் ஒற்றைவரி விமர்சனங்கள் எழுதுகிறேன்.

ஜெர்மானிய படங்கள் பிரஞ்சு, போலந்து நாட்டு படங்களைப் போல ஆழமில்லாதவை என்ற என் கருத்தை இந்த திரைப்பட விழா மாற்றவேண்டும். பார்க்கலாம்! நீங்கள் பெங்களூரில் இருந்தால் சிவாஜி நகர் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் லாவண்யா திரையரங்கத்திற்கு விரையுங்கள்!

முதலில் இங்கு பதியப்பட்டது.

செப்டம்பர் 3: மேலே கூறிய மாதிரி ஒரு வரி விமர்சனம் எழுதும் ஆர்வம் போய்விட்டது! அதனால் இந்த விழாவில் நான் பார்த்த மற்ற படங்களின் பெயர்களை மட்டும் குறிப்பிடுகிறேன். Requiem, Ghosts, Nothing but Ghosts, Distant Lights, War Child.

ஆகஸ்ட் 9, 2008

Forgetting Sarah Marshall (2008): காதல் தோல்வியிலிருந்து மீள்வதற்கு…

கோப்பு வகை: ஆங்கிலத் திரைப்படம், திரைப்படம் — bmmaran @ 9:56 பிற்பகல்

தயாரிப்பாளர் Judd Apatowஇன் இன்னுமொரு சினம்பிடிக்கவைக்கின்ற நகைச்சுவைப்படம். என்னதான் பாராட்டுப்பட்ட படம் என்றாலும் என்னால் பெரிதாக ரசிக்க முடியவில்லை: ஒன்று உதவாக்கரை கதாநாயகன், அடுத்தது அருவருக்க வைக்கின்ற நகைச்சுவைகள். Chick-flick இல்லாமல், ஆண்களும் ரசிக்கின்றமாதிரி ஒரு காதல்படம் எடுக்க வேண்டும் என்றால், இப்படித்தான் எடுக்கவேண்டும் என்று தீர்மானித்திருக்கின்றார்கள் போலவிருக்கிறது.

ஐந்து வருடக் காதலை காதலி Sarah முன்னெச்சரிக்கை இல்லாமல் முறித்துவிட்டுப் போக, அந்த மன உடைவிலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றான் Peter. ஒரு தொலைதூர விடுமுறைதான் நல்லது என்று கடைசியாக முடிவு செய்து Hawaiற்கு வந்து சேர்ந்தால், இவர் தங்கி நிற்கும் அதே விடுதியில் புதுக்காதலனுடன் Sarah. இவரது புண்பட்ட மனதைப்பார்த்து இரங்கி இவரது துணைக்கு வருகின்றார் விடுதி வரவேற்பளராக வேலை செய்யும் Rachel. இனி என்ன, வழமையான புளித்துப்போன முக்கோண காதல் கதைதான்!!

தேவையில்லாமல் ஆண், பெண் நிர்வாணக்காட்சிகள் திணிக்கப் பட்டிருக்கின்றன. கூடவே நிறைய sex நகைச்சுவைகள்வேறு. இவை எனக்குப் புதிது இல்லை என்றாலும் சினமூட்ட வைக்கின்றன. உங்களில் சிலபேருக்கு இது நன்றாக பிடிக்கலாம்; எனக்கென்றால் பிடிக்கவில்லை.

“Forgetting Sarah Marshall” IMDB இணப்பு

My Sassy Girl (2008): ஒரு முட்டாள்தனமான காதல் கதை

கோப்பு வகை: ஆங்கிலத் திரைப்படம், திரைப்படம் — bmmaran @ 9:26 பிற்பகல்

ஒரு கொரியன் படத்தின் மீள்வடிவம் (remake). வாழ்க்கையில் எல்லாவற்றையும் திட்டமிட்டு, முறைப்படி செய்துகொண்டிருக்கும் Charlie, கண்டதும் காதல் என்று விழுகின்றான் Jordanஉடன். காட்டுப்பறவைபோல் இருக்கும் Jordanஆல் Charlieயின் வாழ்வு தலைகீழாகின்றது. பல்வேறு கோமாளிக்கூத்துகளிற்குப் பிறகும், காதலை தக்கவைத்துக்கொண்டிருக்கிறான் Charlie. எல்லாக்கூத்துக்கும் உச்சக்கட்டமாக, காரணம் ஏதுமின்றி, ஒரு வருடம் நாங்கள் சந்திக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு தலைமறைவாகின்றாள் Jordan. Jordan Charlieயின் வாழ்வில் அடிக்கின்ற கூத்து 90% படம். மிச்சத்திற்கு, அந்த ஒரு வருடப் பிரிவுக்கான (அபத்தமான) காரணத்தை சொல்லிவிட்டு, யாவும் சுபம் என்று படத்தை முடிக்கின்றார்கள். ஒரு பைத்தியக்காரத்தனமான காதல் கதை (காதல் என்றால் அப்பிடித்தான் என்று சொல்லிக்கொண்டு யாரும் வர வேண்டாம்!). என்னவென்றுதான் எங்கள் கோலிவூட்காரர்கள் இந்தக்கதையை தவறவிட்டார்களோ தெரியாது!! நீங்கள் யாரும் Elisha Cuthbert (“24″ தொலைக்காட்சித்தொடரில் Jack Bauerஇன் மகளாக வருபவர்) ரசிகர் என்றால் இதைப் பார்க்கலாம்; மற்றப்படி waste!

“My Sassy Girl” IMDB இணப்பு

ஆகஸ்ட் 6, 2008

In Bruges (2008): யாரை யார் கொல்வது?

கோப்பு வகை: ஆங்கிலத் திரைப்படம், திரைப்படம் — bmmaran @ 4:19 பிற்பகல்

மிக மிக வித்தியாசமான படம். அது ஏனென்று விபரிப்பது மிகவும் கடினம். படத்தைப் பார்த்துத்தான் நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும்.

காசிற்காக கொலைசெய்வது Rayஇன் (Colin Farrell) வேலை. ஒரு கொலை நிகழ்வின்போது தற்செயலாக ஒரு சிறுவனையும் சேர்த்து கொலை செய்து விடுகின்றான் Ray. உடனடியாக இவனையும் இவனது கூட்டாளியான Kenஐயும் (Brendan Gleeson) பெல்ஜியம் நாட்டிலிருக்கும் புறூஜ் (Bruges) என்னுமிடத்திற்கு அனுப்பி வைக்கின்றார் இவர்களது தலைவர் Harry (Ralph Fiennes). புறூஜின் அழகை ரசிக்கும் Ken, தான் செய்த தவறினை எண்ணி எண்ணி விரக்தியடைந்துபோகும் Ray – இப்படியாக இவர்கள் தமது நாட்களை கழித்துக்கொண்டிருக்கும்போது Rayஐக் கொல்லச்சொல்லி Harryயிடமிருந்து ஆணை வருகின்றது Kenற்கு. இந்த முக்கோண விளையாட்டை விபரிக்கின்றது படம்.

குற்றவுணர்வு, நட்பு, விசுவாசம், நன்றிக்கடன், கொள்கையை நிலைநாட்டல் என்று பல sentiment படத்திலுண்டு. எண்ணிப்பார்த்தால் சமிபகால தமிழ்ச் சினிமாவில் வரும் கதை போலக்கூடத் தோன்றும். ஆனால் படத்தை எடுத்த விதத்தில் மிகவும் வித்தியாசம் காட்டியிருக்கின்றார்கள். ஒரு seriousஆன கதையோட்டத்தோடு, படத்தில் கடி ஜோக்குகளை அள்ளி விதைத்திருக்கின்றார்கள். கடைசிக்கட்ட திரத்தல் காட்சியைத் தவிர படத்தில் முழுக்க கதைவசனம்தான். எனவே விறுவிறுப்பான படம் என்று கூறமுடியாது, ஆனால் கவனத்தை சிதறவிடாது கதை போகின்றது. ஆக்ஸன் படம், மர்மப் படம் என்று இதைப் பார்க்க முடியாது. ஆனால் சாதாரண வரையரைக்குள் நிற்காத வித்தியாசிமான படங்களை நீங்கள் ரசிப்பவரானால் இதை மிகவும் ரசிப்பீர்கள்.

“In Bruges” IMDB இணைப்பு

The Bank Job (2008): கொள்ளைக்கு பின்பும் திட்டம் தீட்டவும்

கோப்பு வகை: ஆங்கிலத் திரைப்படம், திரைப்படம் — bmmaran @ 3:29 பிற்பகல்

1971ம் ஆண்டு நடந்த லண்டன் லொயிட்ஸ் வங்கி கொள்ளையை மையமாக வைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கின்றார்கள். நிலத்திற்கடியில் சுரங்கம் கிண்டி வங்கியின் பாதுகாப்பு பெட்டக அறைக்குள் (safety deposit box vault) நுழைந்து கொள்ளை அடித்திருக்கின்றார்கள். கொள்ளைபோன பொருட்களின் மதிப்பு இற்றைவரைக்கும் தெளிவாகத்தெரியாது, ஏனெனில் அங்கு கணக்கு வைத்திருந்த பெரும்பாலானோர் தாங்கள் என்ன பொருட்களை பாதுகாப்புப் பெட்டியினுள் வைத்திருந்தார்கள் என வெளியிடவில்லை. இதிலும் விட மர்மம் என்னவெனில் கொள்ளை நடந்து நான்கு நாட்களில் இங்கிலாந்து அரசாங்கம் அந்தக் கொள்ளையை ஒரு அரசாங்க பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விடயம் என அறிவித்து, அது சம்பந்தப்பட்ட செய்திகளையெல்லாம் ஒட்டு மொத்தமாக செய்தியூடகங்களிலிருந்து நீக்கியமை! இந்த மர்மங்களை மையமாக வைத்து கற்பனையை நேர்த்தியாக புகுத்தி மிகவும் ரசிக்கக் கூடியவாறு படத்தை எடுத்திருக்கின்றார்கள்.

இங்கிலாந்து அரச குடும்பத்தினர் ஒருவரின் காமக்களியாட்டத்தை புகைப்படம் பிடித்து விடுகின்றான் மைக்கேல் என்பவன். இங்கிலாந்தில் வெளிப்படையாக மிகவும் அட்டூழியம் செய்துகொண்டிந்தாலும், இந்தப் புகைப்படங்களை துருப்புச் சீட்டாக வைத்திருப்பதால், அரசு இவனை ஏதும் செய்ய முடியாது இருக்கின்றது. ஒருவாறாக இந்தப் புகைப்ப்டங்ள் லொயிட்ஸ் வங்கியிலிருக்கும் இவனது பாதுகாப்புப் பெட்டியில் இருப்பதை அறிகின்றது அரசு. பொதுமக்களின் கவனத்தை தவிர்க்க வேண்டும் என்றால் இந்தப் விடயத்தை நேரடியாக அணுக முடியாது. இதனால் இங்கிலாந்து உளவுத்துறை MI6இன் கையில் இந்த வேலை கொடுக்கப்படுகின்றது.

பழைய கார்களை வாங்கி திருத்தி விற்கும் வேலை Terryயினது. வியாபாரம் சரியாகப் போகவில்லை என்பதால் கடனில் மூழ்கி நிற்கின்றார், கூடவே கல்யாணம் கட்டி இரு குழந்தைகள் வேறு. Terryயின் பழைய காதலி Martine (ஓம், இது பெண் பெயர்தான்) – Terry குட்டி குட்டி கொள்ளைகள், மோசடிகள் செய்து கொண்டிந்த நேரத்தில் பழக்கமானவர். Terry பழைய வாழ்வைவிட்டு விலகி வந்து விட்டாலும், Martine இன்னமும் அதே வழியில்தான் இருக்கின்றார். இவரிற்கூடாக Terryயை வளைக்க திட்டமீட்டுகின்றது MI6. போதைப்பொருள் கடத்தும் Martineஐ திட்டமிட்டு பிடிக்கிறது MI6. சிறையிலிருந்து தப்பிக்கவேண்டும் என்றால் வங்கியுடைப்புச் செய்யவேண்டும் என்பது நிபந்தனை. கடனில் சிக்கித் தவிக்கும் Terryயை கொள்ளைக்கு சம்மதிக்கவைக்கின்றார் Martine. ஆனால் Terryக்கு கொள்ளையின் உண்மைக்காரணம் தெரிவிக்கப்படவில்லை. Terryயும் அவரது நண்பர் குழுவும் மிகவும் அழகாக கொள்ளைக்கு திட்டம் போடுகின்றனர். அது வெற்றியடையும் நேரத்தில் Martineஇன் செய்கைகளை கூர்மையாக அவதானிக்கும் Terry கொள்ளையின் உண்மைக்காரணத்தை அறிகின்றார். புகைப்படங்கள் MI6இடன் கைமாறிய பின்னர் அந்தப் படங்களை பார்த்த தமது உயிர்களிற்கு உத்தரவாதம் இல்லை என்று உணர்ந்து கொள்ளும்Terry, MI6 இடமிருந்து தலைமாறைவாகின்றார். இதில் அடுத்த சிக்கல் என்னவென்றால், அதே வங்கியில் அதே பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த இன்னொரு பிரபல்ய அட்டூழியக்காரனின் ஆவணங்களும் அதே கொள்ளையில் இணைந்து விடுகின்றது. இப்போது சமூகத்தின் இரண்டு பாகங்களிலிருந்தும் தேடப்படுகின்றார் Terry. இவர்களோடு Terry ஆடும் கண்ணாம் பூச்சிவிளையாட்டு படத்தின் மிச்சப்பாகம்.

படத்தில் Terry மற்றும் அவரது கொள்ளைக்குழு கற்பனைப்பாத்திரங்கள். மற்றப்ப்டி, அந்தக்கொள்ளை, அது நடந்தவிதம், படத்தில் வரும் மற்றைய பாத்திரங்கள் அனைத்தும் நிஜமானவை. உண்மைச் சம்பவங்களை தமது கற்பனையைக் கொண்டு அழகாக பின்னி கதையை அமைத்திருக்கின்றார்கள். கதையை பல கோணங்களிலிருந்து ஆரம்பித்து கடைசியாக ஒன்றாக கொண்டுவந்து முடிச்சுப்போடுவது புதிதில்லை என்றாலும் மிகவும் நன்றாக இருக்கின்றது. கடைசி வரை விறுவிறுப்பாகக் கொண்டு போயிருக்கின்றார்கள்.

படத்தில் சில நிமிடங்கள் (தேவையற்ற) நிர்வாணக்காட்சிகள் உண்டு. கூடவே வன்முறை, கெட்டசொற் பிரயோகங்களும உண்டு. எனவே படம் சிறுவர்களிற்கு ஏற்றதல்ல. மற்றப்படி ரசிக்கக் கூடிய படம்.

“The Bank Job” IMDB இணைப்பு

ஆயுதம் செய்வோம்

கோப்பு வகை: தமிழ்த் திரைப்படம், திரைப்படம் — Nilofer Anbarasu @ 12:23 மு.பகல்
1980களில் வந்திருந்தால் ஒரு வேலை மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்திருக்கலாம். இன்றைய சூழலில் ஒரு படம் வெற்றிப்படமாக அமையவேண்டுமானால் ஒன்று அதிநவீன டெக்னிகல் சமாச்சாரங்களுடன் நேர்த்தியான முறையில் வரவேண்டும். அல்லது, யதார்த்தத்தை மீறாமல் ரத்தமும் சதையுமாக சொல்லவேண்டும். சில இயக்குனர்கள் இந்த இரண்டு வகையிலும் சேராமல் ஒரு நாடகத் தன்மையோடு இயக்கிவிடுவதுண்டு, அப்படி வந்த படம் தான் ‘ஆயுதம் செய்வோம்’.

காந்தியிசம் என்று சொல்லக்கூடிய அகிம்சையை மையமாக வைத்து கத்தியின்றி ரத்தமின்றிய யுத்தமே நல்ல தீர்வை தரும் என்று சொல்லியிருக்கீறார்கள். ஹீரோவை உயர்வாக காட்டவேண்டுமென்றால் வில்லனை கொடூரமாக சித்தரிக்கும் சராசரி தமிழ் சினிமாவைப்போல், அகிம்சையை உயர்திப்பிடிப்பதற்க்காக வன்முறையை அதிகமாக காட்டியிருக்கீறார்கள். கூடவே இரட்டை அர்த்த வசனம் வேறு. காந்தி மியூசியத்தில் கூட்டத்தை வரவழைப்பதற்கு, மாளவிகாவை வைத்து விளம்பரம் செய்வது மிகவும் அபத்தம். இந்த அபத்தமான காட்சியையும் வசனத்தின் மூலம் சரி என்று சொல்லியிருப்பது இயக்குனரின் திறமையே. அந்த வசனத்தின் ஒரு பகுதி…..

……காந்திய பத்தி நீங்க சொன்னா என்ன, நான் சொன்ன என்ன, அந்த நடிகைதான் சொன்ன என்ன, நல்ல விதையை யார் விதைத்தாலும் நல்ல செடிதான் தாத்தா முளைக்கும். யார் விதைச்சாங்குறது முக்கியமில்ல எத விதைசோங்குறதுதான் முக்கியம்……கடவுளே தெருவுல ஊர்வலம் போகும்போது சப்பரத்துக்கு எதிர்த்தாப்புல கவர்ச்சியா கரகாட்டம் வானவேடிக்கையின்னு வச்சாத்தான் நாலு பேரு வீட்டுக்குள்ள இருந்து வெளிய வந்து வேடிக்கை பாக்குறாங்க, சைலெண்ட்டா போச்சுன்னு வையுங்க சாமி வந்துட்டு போனது யாருக்குமே தெரியாம போயிரும். கடவுளுக்கே பப்ளிசிட்டி தேவைப்படும் போது அதுக்கு equalலா வச்சு கும்புடுற காந்தி தாதாவுக்கு பப்ளிசிட்டி தேவைப்படாத……காந்திய பத்தி எல்லோரும் தெருஞ்சுக்கணும் தான் அவர் படத்தை ரூபா நோட்டுல அச்சு அடுச்சிருக்காங்க. லஞ்சம் வாங்குறவனும் அந்த ரூபாயைத்தான் லஞ்சமா வாங்குறான், அநாதை
இல்லத்திற்கு நன்கொடை குடுக்குறவனும் அதே ரூபாயத்தான் கொடுக்குறான். …

இந்த வசனத்தை தவிர படத்தில் ஒன்னும் சரியில்லை. வன்முறையை விட்டு ஹீரோ அகிம்சைக்கு மனம் மாறும் காட்சியை இன்னும் யதார்த்தமாக எடுத்திருக்கலாம். மணிவண்ணன், விஜயகுமார், நெப்போலியன், நாசர், சுகன்யா என்று ஒரு கூட்டம் இருந்தாலும் விஜயகுமாரை தவிர எந்த கதாபாத்திரமும் அழுத்தமாக இல்லை. குறிப்பாக என்கவுண்டர் எழுமலையாக வரும் நெப்போலியன் சுத்த வேஸ்ட்.
இப்படித்தான் வாழ வேண்டும் என்று சொன்ன காந்தியின் கொள்கையை, எப்படி சொன்னால் என்ன காந்தியின் கொள்கையைதானே சொல்லுகிறோம் என்று எடுத்திருக்கிறார்கள். குத்துப்பாட்டு, இரட்டை அர்த்த வசனங்கள் போன்றவற்றையும், மாளவிகா, விந்தியா போன்றவர்களையும் தவிர்த்து எடுத்திருந்தால் காந்தியிசத்தை இன்னும் மென்மையாக சொல்லியிருக்கலாம்.
கொசுறு: இன்றைய தேதியில் B & C சென்டரில் நன்றாக ஓடும் படங்கள் சுந்தர்.சி படங்கள்தானாம். இவர் படத்திற்கு மினிமம் கியாரண்டி உண்டாம். இந்த படத்திற்குப் பிறகு அவருடைய சம்பளம் 60 லட்சத்தில் இருந்து ஒன்னேகால் கோடியாக உயர்ந்திருக்கிறதாம்.

—-
Nilofer Anbarasu
http://kick-off.blogspot.com

ஆகஸ்ட் 5, 2008

3.10 to Yuma (2007)

கோப்பு வகை: ஆங்கிலத் திரைப்படம் — mayooresan @ 1:08 பிற்பகல்

கைது செய்யப்பட்ட கொள்ளைக்காரன்

ஒரு பயங்கரமான மலைப்பள்ளத்தாக்கு கொள்ளைக்காரன். அவனுக்காக உயிரையும் விடும் துணிவுள்ள ஏவலர்கள். இவனை கைது செய்யும் சட்ட துறையினர் 3.10 க்கு யூமா செல்லும் புகையிரதத்தில் இவனை ஏற்ற முயற்சிக்கின்றனர். இந்து முயற்சிக்கு துணை புரிய வருகின்றார் டானியல் இவன்ஸ். தனது மந்தையையும் நிலத்தையும் பாதுகாத்துக்கொள்ளவும் தனது குடும்பத்திற்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கவும் என்று 200 டாலர்களை இதற்காகப் பெற்றுக்கொள்வதாக ஏற்பாடாகின்றது.

பயனத்தில் வழியை கெள்ளைக்காரனில் மனதின் மறுபகுதியும், இவர்களிற்கிடையிலான ஒரு குழப்பமான நிலைமையையும், இவர்களை தொடர்ந்து வந்து தம் தலைவரை மீட்க முயலும் கூட்டத்தையும் சுற்றிக் கதை சொல்கின்றது. ஒரு கொள்ளைக் காரனாக ரசல் குரோ நடித்திருக்கின்றார். அருமையான நடிப்பு. இவர் நடிப்புக்கு கிளாடியேட்டர் போன்ற திரைப்படங்கள் சாட்சி. முதலில் இந்த கொள்ளைக் காரன் வேடத்துக்கு டொம் குரூஸ் நடிப்பதாக இருந்த்தாம் ஆயினும் அவர் நடிக்கிவில்லை.

200 டாலருக்காக கொள்ளைக்காரனை புகையிரத நிலையம் உள்ள இடத்துக்கு கூட்டிப்போகும் அங்கவீனமான குடும்பத்தலைவராக Christian Bale நடித்துள்ளார். இவர்தான் அண்மைய பட்மான் திரைப்பட நாயகன் என்பதைச் சொல்லித்தெரியவேண்டியத்தில்லை. அமெரிக்க சிவில் யுத்தத்தில் கால் ஊனமான இவரின் நடிப்பும் அருமையாக இருந்ததது.

ஆகஸ்ட் 4, 2008

Vantage Point (2008): விறுவிறுப்பு, பல கோணங்களில்…

கோப்பு வகை: ஆங்கிலத் திரைப்படம், திரைப்படம் — bmmaran @ 4:00 பிற்பகல்

ஒரு சம்பவம் நடக்கும்போது, அவரவர் நிற்கும் இடத்தைப் பொறுத்து, ஒவ்வொருவரும் அந்தச் சம்பவத்தைப் வெவ்வேறுவிதமாகப் பார்க்கின்றார்கள். இந்த ஒவ்வொருவரின் பார்வைக் கோணத்தையும் vantage point என்று சொல்வார்கள். இந்தகோட்பாட்டை வைத்தே இந்த விறுவிறுப்பான படத்தை எடுத்திருக்கின்றார்கள்.

ஸ்பெயினில் ஒரு சர்வதேச கூட்டத்தில் கலந்து கொள்ள வருகின்றார் அமெரிக்க ஜனாதிபதி. இவரைத் தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டுகின்றது ஒரு பயங்கரவாதக் குழு. இந்தக்கொலை முயற்சி, அதை சூழ்ந்து நிற்கும் மர்மம் இவற்றைச் சுற்றிப் படம் போகின்றது. இந்தக் கொலைமுயற்சியை எட்டுப்பேரின் vantage pointஇலிருந்து காட்டியிருக்கிறார்கள்.

படத்தின் எண்ணப்பாடு என்னவோ புதிதானதுதான். என்றாலும் அதை எடுத்தவிதம் கொஞ்சம் அலுப்படிக்கிறது. மொத்தமாக கிட்டத்தட்ட 30நிமிடங்கள்தான் படத்தில் நடக்கும் கதை. என்றாலும் எட்டுப்பேரின் vantage point’ஐக் காட்டுவதற்காக அதை ஐந்து தரம் rewind பண்ணியிருக்கின்றார்கள் – அது கொஞ்சம் சினமூட்டுகின்றது. என்றாலும், ஒவ்வொருக்காலும் rewind பண்ணும்போதும் கதையில் ஒரு புது முடிச்சு விழச்செய்திருப்பது நன்றாக இருக்கின்றது. இந்த rewind பிரச்சனையை விட்டால், படம் மற்றப்படி விறுவிறுப்பாகப் போகின்றது – முக்கியமாக தொடக்கமும், முடிவும். அவ்வளவு பேரை சுட்டு, குண்டு வைத்து கொன்றுவிட்டு, படத்தை முடித்தவிதம் வித்தியாசமாக இருக்கின்றது.

அலுப்பில்லாமல் பார்க்கலாம். படத்தை இணையத்திலிருந்து இறக்குவதாகவிருந்தால், subtitles இருக்கின்றதா என அவதானித்துக்கொள்ளுங்கள். படத்தில் சில பகுதிகள் spanish கொழியில் இருக்கின்றது.

“Vantage Point” IMDB இணைப்பு

Miss Pettigrew Lives for a Day (2008): இதயத்திற்கு குளிர்ச்சி

கோப்பு வகை: ஆங்கிலத் திரைப்படம், திரைப்படம் — bmmaran @ 3:27 பிற்பகல்

1939, இரண்டாம் உலகப்போரின் வாயிற்படியில் நிற்கின்றது London. Miss Pettigrew (Frances McDormand) ஒரு நடுத்தர வயதடைந்த, ஒண்டிக்கட்டையான governess – ஒரு குடும்பத்தின் தேவைகளை மேற்பார்வை செய்யும் வேலை (சாதாரண வேலைக்காரியின் வேலையைவிட சற்றே உயர்ந்த பதவி). ஒரு பாதிரியாரால் வளர்க்கப்பட்ட இவர் சாதாரண மக்களின் நெறிகெட்ட வாழ்க்கைகளை ஏற்பதாக இல்லை. தனது கண்ணியங்களை தனது எஜமானர்கள்மீது திணிக்கமுற்படுவதால் இவரை வேலைக்கு எடுக்க எவரும் தயாராக இல்லை. வேலையில்லை, வீடில்லை, சாப்பிடுவதற்கு காசில்லை என்ற நிலையில், புதியவொரு governess வேலையை ‘களவெடுத்துக்கொண்டு’ Delysiaவிடம் வந்து சேருகின்றார் Pettigrew. இளமையின் உச்சக்கட்டத்தில் இருக்கும் வெகுளியான Delysia (Amy Adams) தனது அழகைக் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற முயன்றுகொண்டிருக்கிறாள். சொகுசான வாழ்க்கைகாக உண்மைக் காதலை விட்டுக்கொடுக்க தயாராகவிருக்கும் Delysia, சொகுசான வாழ்க்கை, உண்மைக் காதல் இரண்டையும் இழந்து நின்றாலும், இழந்த தனது உண்மைக்காதலை எண்ணி அதிகம் கவலைப்படும் Pettrigrew – இவர்கள் இருவரும் ஒன்றாக செலவழிக்கும் ஒரு நாளில் எவ்வாறு ஒருவர் வாழ்க்கையை மற்றவர் பாதிக்கின்றார் என்பது கதை.

ஆர்ப்பாட்டமில்லாத ஒரு திரைப்படம். மூலக்கதை அவ்வளவு புதிது இல்லை என்றாலும் படம் எடுக்கப்பட்ட விதம் நன்றாக இருக்கின்றது. 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மேற்கத்தைய பெண்களின் சமூக, மன நிலைப்பாடுகளை படம் எடுத்துக்காட்டுகின்றது. படத்தை ஒற்றக்கையாக நின்று காப்பாற்றுவது Frances McDormand; அழகாக அந்த Oliver Twist மாதிரியான பாத்திரத்திற்கு உயிரேற்றியிருக்கின்றார். Amy Adamsஇன் நடிப்பு கொஞ்சம் அலுப்படிக்கின்றது; அடிக்கடி அவரது “Enchanted” படக் கதாபாத்திரத்தை நினைவு படுத்துகிறது.

இதயத்திற்கு குளிர்ச்சியான படம். உங்கள் காதலர் அல்லது காதலியோடு பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.

“Miss Pettigrew Live for a Day” IMDB இணைப்பு

நம் நாடு: சுயபுராணம்

கோப்பு வகை: தமிழ்த் திரைப்படம், திரைப்படம் — Nilofer Anbarasu @ 4:06 மு.பகல்
Photo Courtesy: Cine Folks

சரத்குமார் தனிகட்சி தொடங்கியபின்னர் வெளியான முதல் படம் நம் நாடு. அதிக சர்ச்சைகுள்ளாகி பிறகு சத்தமே இல்லாமல் வந்து போன படம். படம் முழுவதும் நடிகர் சரத்குமார் காட்டிலும் கட்சி தலைவர் சரத்குமாரரே அதிகம் வெளிப்படுகிறார்.

கல்வி அமைசசராக நாசர், அவருடைய மூத்த மாப்பிள்ளையாக சரண்ராஜ், இரண்டாவது மாப்பிள்ளையாக பொன்வண்ணன், மூன்றாவது மாப்பிள்ளையாக ரியாஸ்கான் , ஓரே மகனாக சரத்குமார். குடும்பத்தில் சரத்குமார் தவிர அனைவரும் ஊழல் பேர்வழிகள், நாட்டை சீரழித்துகொண்டிருக்கும் மனிதர்கள், அவர்களை எதிர்த்து தனி ஒரு ஆளாக போறடுகிறார் சரத்.
என்ட்ரிகே இப்படி ஆடிப்போய்ட்டிங்க, அடுத்து அடுத்து அட்டாக் பண்ணா ஹார்ட் அட்டாக்கே வந்துரும் போல இருக்கே” என்கிற டயலாக்கோடு அறிமுகமாகிறார் சரத்குமார்.
நேர்மையை நிலைநாட்டி நாட்டை காக்க ஒரு கட்டத்தில் வில்லிவாக்கம் தொகுதியில் சுயட்சையாக நின்று தந்தையை எதிர்த்து வெற்றிப்பெறுகிறார் சரத்குமார். இரண்டு பெரிய கட்சிகளும் சம இடங்களில் வென்று இருக்க, சரத் யாருக்கு ஆதரவு அளிக்கிறாரோ அவரே ஆட்சி அமைக்க முடியும் என்கிற நிலையில், ஆதரவை தமிழக ஜனநாயக கட்சிக்கு அளித்து உள்துறை அமைச்சர் ஆகிறார் சரத். அமைச்சராக பொருப்பேற்றவுடன், அனைத்து ரவுடிகளையும் என்கவுன்டர்ரில் சுட்டுதள்ள உத்தரவு பிறப்பிகிறார், இன்கம்டாக்ஸ் ரெய்டு நடத்தி கருப்பு பணத்தை வெளிக் கொண்டு வருகிறார். கடைசியில் மக்கள் போற்றும் அரசியல்வாதி ஆகிறார் சரத்.
சரத்குமார் பற்றிய குறிப்புகளை கதையாக்கி, அவரது எதிர்கால அரசியல் கனவை திரைக்கதையாக்கி, ரசிகர்களின் பல்சை ஏகிறவைக்கும் வார்த்தைகளை வசனமாக்கி, கதைக்கு சற்றும் பொருந்தாத டைட்டில்லை தலைப்பாக வைத்து மூன்று மணி நேர சுயபுராணத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ்.

—-
Nilofer Anbarasu
http://kick-off.blogspot.com

மருதமலை: மசாலா கலவை

கோப்பு வகை: தமிழ்த் திரைப்படம், திரைப்படம் — Nilofer Anbarasu @ 3:56 மு.பகல்

Photo Courtesy:Sulekha.com

வெயிலில் தாகமாக சுற்றுபவர்களுக்கு, கொத்தமல்லி, கருவேப்பிலை, மிளகாய் கலந்த ஒரு டம்ளர் ஐஸ் மோர், கூடவே தொட்டுக்க ஊருகாய் கிடைத்தால் எப்படி இருக்கும்? ஆக்-ஷன், காதல், காமெடி, சென்டிமெண்ட், குத்துபாட்டு என அனைத்தும் கலந்த ஒரு ஐஸ்மோர்தான் மருதமலை.

பதினெட்டு ஆண்டுகளாக தேர்தலே நடத்தவிடாமல் ‘நாச்சியாபுரம்’ எனும் ஊரையே தன் கட்டுபாட்டில் வைத்திருக்கும் ஒரு மதம் பிடித்த ஜாதி வெறியன் ‘மாசி’. கிட்டதட்ட பெயர் மாற்றி பாப்பாபட்டி, கீரிப்பட்டியை காட்டுகிறார்கள். அந்த ஊரில் அவனை துவம்சம் செய்து வெற்றிகரமாக தேர்தலை நடத்திகாட்டுகிறார் அர்ஜுன். ஒரு மசாலா படத்திற்கு இந்த கதை போதாதா? கான்ஸ்டபிளாக போலீஸ் வேலைக்கு சேருகிறார் அர்ஜுன். அவருடைய உயர் அதிகாரியாக ‘ஏட்டு’ ஏகாம்பரம் (வடிவேல்). ‘கிரி’ யை தொடர்ந்து மீண்டும் இந்த காம்பினேஷன் நன்றாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. முதல் பாதி முழுவதும் சிரிப்புக்கு கியாரண்டி தருகிறார் வடிவேல். கோபமாக ஆங்கிலத்தில் அவர் பேசும் வசனமாகட்டும், மாமூல் வசூலிக்கும் காட்சியாகட்டும் அனைத்திலும் நம் வயிற்றை பதம் பார்க்கிறார் வடிவேல். வின்னர், ப்ரண்ட்ஸ், கிரி, ரெண்டு, தலைநகரம் படவரிசையில் வடிவேலுக்கு இன்னொரு மைல்கல் மருதமலை.

அர்ஜுனுக்கு பழக்கப்பட்ட போலீஸ் கதை என்பதால் சும்மா புகுந்து விளையாடுகிறார். கதாநாயகி ப்ளஸ் கவர்சிக்கு நிலா, படத்தில் தேவையற்ற ஒரு கதாபாத்திரம். காதல் காட்சிகள் அனைத்தும் செம போர், அதிலும் இடைவேளைக்கு பின்பு வரும் காதல் காட்சிகள் தொடர்ந்து வரும் பாடல்கள் தலைவலி. வில்லன் ‘மாசி’யாக மலையாள இயக்கநர் லால். ஜெயிலுக்குள் இருந்து கொண்டே எஸ்.பி. முதல் அனைவரிடத்திலும் மொபைலில் பேசுவது வேடிக்கை, அதிலும் அர்ஜுனிடமே பேசுவது உச்சகட்ட காமெடி. வில்லனிடமிருந்து மொபைலை வாங்கியிருந்தால் அரைமனி நேரம் முன்பாக படத்தை முடித்திருக்கலாம். காதல் காட்சிகளை குறைத்து, ஆக்~ன் காட்சிகளில் அதிக கவனம் செலுத்தியிருந்தால் மருதமலை இன்னும் சுவாரஸ்யமாய் இருந்திருக்கும்.

—-
Nilofer Anbarasu
http://kick-off.blogspot.com

அடுத்த பக்கம் »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.