திரை விமர்சனம்

ஏப்ரல் 1, 2009

RockNRolla (2008): லண்டன் தாதாக்களின் ஆடு புலி ஆட்டம்.

முழங்கால் அளவுக்கு தண்ணி இருக்கும் குட்டைக்குள்ள எருமை மாட்டை விட்டு குழப்பின மாதிரி ஒரு கதை. அந்தளவு குழப்பத்தையும் ஒரு ரசனையோடு எடுத்திருக்கிறாங்கள் பாருங்கோ, அதுதான் அருமை! எழுத்தாளர், இயக்குணர் Guy Ritchie‘இன் முன்னைய படங்களைப் பார்த்திருந்தீர்களென்றால் உங்களிற்கு விளங்கும். பாதாள உலகு (underworld) தாதாக்களை மையமாக வைத்த படம்தான். படத்தில நல்ல மனுசன் எண்டு ஒருத்தரும் இல்லை.

லென்னி எண்டு பெரியதாதா. லண்டனில் எந்த காணி, நிலம் சம்பந்தமான கள்ள வியாபாரம் என்றாலும் இவரின் கைக்குள்ளால்தான் போகவேணும். சின்னதா வியாபாரம் தொடங்க இவரிட்ட காணிவாங்கி மாட்டுப்பட்ட சின்னதொரு திருட்டுக் கும்பல் “the wild bunch”. லென்னியின்ற குழியுக்குள்ள மாட்டுப்பட்ட இவையள் இப்ப லென்னிக்கு கொஞ்ச மில்லியன் பவுண்ட்ஸ் கடன்! இதுக்குள்ள ரக்ஷ்யாவில இருந்து வருகைதருகின்றார் ரக்ஷ்யா-தாதா யூரி. லண்டனில வியாபாரத்தை பரப்புவதற்கு காணி, நிலம் வாங்க லென்னியின் உதவியை நாடுகின்றார் யூரி. சட்ட திட்டங்களையெல்லாம் சரிபடுத்தி யூரியின் முதலீட்டுக்கு வழிபண்ண சுளையா ஏழு மில்லியன் பவுண்ட்ஸ் கேட்கிறார் லென்னி. அதுக்குச் சம்மதிச்சது மட்டுமில்லாம “இந்தா, என்ர ராசியான ஓவியம் இது, இதையும் கொஞ்ச நாள் வைச்சிரு” எண்டு அதை லென்னியிடம் குடுத்து அனுப்புகிறார் யூரி. இப்ப ஏழு மில்லியன் காசு திரட்ட வேண்டிய தேவை யூரிக்கு. தன்ரை கணக்காளர் ஸ்டெல்லாவுக்கு அழைப்பு எடுத்து, காசுக்கு வழி பார் என்கிறார் யூரி. காசுக்கு வழி பார்த்த கையோடு, தன்ரை பங்குக்கு தானும் கொஞ்சம் விளையாட நினைக்கின்றார் ஸ்டெல்லா. யூரியின் ஆட்களை காசை எடுத்து வா எண்டு அனுப்பி விட்டு, உள்ளூர் கொள்ளைக்க்கூட்டம் ஒண்டை வைத்து அந்தக் காசை வழிப்பறி பண்ணுகின்றார். அட, அந்த உள்ளூர் கொள்ளைக்கூட்டம் ஆரெண்டு பார்த்தால் லென்னியிடன் ஏமாந்த “the wild bunch”தான்! இதுக்குள்ள லென்னியின் அலுவலகத்திலிருந்த யூரியின் ஓவியம் திடீரென தலைமறைவு! களவெடுத்தது ஆராக இருக்கலாம் எண்டு ஆராய்ந்து பார்த்தால், செத்துவிட்டேன் எண்டு புரளியைக் கிளப்பிவிட்டு தலை மறைவாகிப்போன லென்னியின் தத்துபிள்ளை, முன்னாள் பாடகன், போதைப்பொருள் அடிமை ஜொன்னி. லண்டனின் எங்கயோ ஒரு பொந்துக்குள்ள ஒளிந்து இருக்கும் ஜொன்னியைத்தேடி லென்னி இங்க அலைய, ஏழு மில்லியனை வழிப்பறி கொடுத்த யூரி, தனது ராசியான ஓவியம் கைமாறியதே அதற்கு காரணம் எண்டு தீர்மானிக்கின்றார். இப்ப ஓவியத்தை திருப்பித்தா எண்டு யூரி கேட்க, அது துலைஞ்சு போச்சு எண்டு சொல்ல ஏலாமல் லென்னி திண்டாட, லென்னி டபிள்-கேம் விளையாடுகின்றார் என யூரி சந்தேகப் படத்தொடங்குகின்றார். கொஞ்சம் கொஞ்சமா தனது விசுபரூபத்தைக் காட்டத்தொடங்குகின்றார் யூரி. மறுபக்கத்தில், அப்பாவுக்கு அலுப்படிக்க எண்டு கடத்திக் கொண்டு வந்த ஓவியமோ ஜொன்னியின் கையை விட்டுவிட்டு தப்பி லோக்கல் சந்தைக்கு வந்து விடுகின்றது! இதுக்கெல்லாம் இன்னொரு பக்கத்தில், சின்னத் தாதாக்களை போலிசுக்கு போட்டுக் குடுக்கும் ரகசியாமான ஒருவன்; அவனை ஆரெண்டு கண்டிபிடிக்க “wild bunch” குழுவில் ஒருவன் தீவிர முயற்சி.

இப்பிடியான ஒரு இடியாப்பச் சிக்கல் கதையை நகைச் சுவையோடு, விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கின்றார்கள். மிகவும் வேகமான, பக்கா லண்டன் தாதா ஸ்டையில் கதை. அது அரைவாசி ஒரு இளவும் விளங்கவில்லை என்பதுதான் பிரச்சினை! கொஞ்சம் கவனம் பிசகினாலும் கதை விளங்காமல் போய்விடுமோ எண்டு பயப்பிடும்படியான வேகம். அவ்வளவு சிக்கல் கதைக்குள்ளேயும், லாஜிக் ஒன்றுமே பிசகவில்லை. படம் முழுதாக Guy Riitche’யின் படம்தான் என்றாலும், நடிகர்களும் காலைவாரவில்லை. அந்த அந்த பாத்திரங்களில் அனைவரும் நன்றாக பொருந்திப் போகின்றார்கள். படத்தில் ஆக்ஸன் மிகச் சிறிய அளவில்தான், மற்றப்படி ஒரு Crime கதைதான். வித்தியாசமான படத்தைப் பார்க்க ஆசைப் படுகின்றவர்கள் சந்தோசமாக பார்க்கக் கூடிய படம்.

“RockNRolla” IMDB இணைப்பு

செப்ரெம்பர் 4, 2008

No Country for Old Men (2007): ஆஸ்கார் வென்ற கண்ணாம் பூச்சி ஆட்டம்

சில ஆஸ்கார் வென்று செல்லும் படங்களை ரசிக்கவும் இயலாது, ரசிக்காமல் இருக்கவும் முடியாது. என்னைப் பொறுத்தவரையில் 2007 ஆம் ஆண்டிற்கான ‘சிறந்த படம்’ ஆஸ்கார் வென்ற இந்தப் படமும் அந்தவகையில் ஒன்று. கதையில் எவ்வித புதுமையும் இல்லை. என்றாலும் அந்தக் கதையை எடுத்தவிதத்தை மட்டும் வைத்தே இந்தப் படத்திற்கு ஆஸ்காரைக் கொடுக்கலாம். ஒளிப்பதிவும் அந்தமாதிரி, ஒரு இலக்கண சுத்தமான கவிதைபோல இருக்கின்றது.

2006ஆம் ஆண்டின் ‘சிறந்த படம்’ விருதைப் பெற்ற “The Departed” படம் போலவே இதுவும் ஒரு crime drama. என்றாலும் ஆங்காங்கே வரும் சில சுடுதல், துரத்தல் காட்சிகளை விடுத்து பொதுவாக மிகவும் மெதுவான கதையோட்டம். ஏனோ தெரியாது, கதை 1980களில் நடப்பதாக எடுக்கப்பட்டுள்ளது. Mexico எல்லையோரமாகவிருக்கும் வனாந்தரமான ஒரு சிறு Texas நகரம். அங்கே மான்வேட்டையாட செல்லும் Moss, சில கைவிடப்பட்ட வாகனங்கள், துப்பாக்கி சண்டையில் செத்து சிதைந்துகொண்டிருக்கும் பிரேதங்கள், இப்படியான ஒரு காட்சிக்கு வந்துசேருகின்றான். அத்துடன் 2 மில்லியன் டாலர் பணப்பெட்டியும் கூட! அதிஸ்டம் அடித்தது என்று மகிழ்வதற்கு முன்னர், அந்த பணத்தை மீட்டெடுப்பதற்காக வந்து சேருகின்றான் Chigurh (Javier Bardem) என்னும் கொலைகாரன். அந்தளவு பணத்தை விட்டுக்கொடுக்க மனமில்லாமல் Chigurhஇடமிருந்து தப்பியோட முனைகின்றான் Moss. ஆனால் Chigurhவோ ஒரு ஈவுஇரக்கமற்ற, புத்திசாலித்தனமான, psycho கொலைகாரன். இவர்களிற்கு இடையிலான கண்ணாம் பூச்சி ஆட்டம் எங்கு சென்று முடிகின்றது என்பதைச் சொல்கின்றது படம்.

முன்பு ஆஸ்கார் வென்ற The Godfarther படத்தைப் போல ஒரு இழுவையான படம், என்றாலும் இடையில் நிறுத்தமுடியாதமாதிரியான ஒரு பட இயக்கம். படம் எப்பிடியோ, Javier Bardem இதில் ஆஸ்கார் வென்றது முற்றிலும் தகும்; அந்த psycho கொலைகாரன் பாத்திரத்தில் கலக்கித் தள்ளியிருக்கிறார். ஆஸ்கார் வென்ற படம் என்பதால் இதைப்பார்க்கலாம். படத்தைப் பார்த்துவிட்டு வெறுத்தால் என்னைக் குற்றம் சொல்லவேண்டாம்!

“No Country for Old Men” IMDB இணைப்பு

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.