திரை விமர்சனம்

நவம்பர் 26, 2007

கற்றது தமிழ்

தமிழ் M.A (எ) கற்றது தமிழ் படம் குறித்த கதை கேள்விப்பட்ட போதும், படத்தைப் பார்க்கும் போது என் பள்ளி வாழ்க்கை, தமிழுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு, தமிழ் படித்திருந்தால் நான் எப்படி இருந்திருப்பேன் போன்ற நினைவுகள் வந்து போயின. ஏனடா பார்த்தோம் என்று எண்ணற்ற படங்கள் நோக வைக்கையில் நம் வாழ்க்கை குறித்த நினைவுகளைக் கிளறி விட இயல்வது ஒரு கலைபடைப்பின் வெற்றி தான். சிவாஜி திரைப்படத்துக்கு இணையாக எண்ணற்ற விவாதங்களையும் இப்படம் கிளப்பி விட்டிருப்பதும் பாராட்டத்தக்கதே. இப்படி ஒரு படம் வந்திருக்காவிட்டால் இன்றைய சூழலில் தமிழ்ப் படிப்பு, தமிழ்ப் பட்டதாரிகள் நிலை, படம் தொட்டுக் காட்டும் சமூக ஏற்றத் தாழ்வுகள் குறித்து இன்றைய சூழலில் ஒரு விழிப்புணர்வு உரையாடல் இவ்வளவு பெரிதாய் நடந்திருக்க வாய்ப்பில்லை.

படத்தைப் பார்த்து விமர்சித்தவர்கள், உரையாடியவர்கள் பலரும் படத்தின் இறுதியில் சுட்டிக்காட்டிய விசயங்களை அலசினார்களே தவிர, ஒரு படமாய் இதன் கலைத்திறனை விமர்சித்தவர்கள் மிகக் குறைவு. படம் சுட்டிக் காட்டும் விசயத்துக்காப் படத்தைப் பாராட்டியவர்கள் தான் பலர். ஒரு இணையத்தளம் இப்படத்தை இந்திய சினிமாவின் குறிஞ்சி மலர் என்றது. பாலுமகேந்திரா இதை ஆசியாவின் சிறந்த ஐந்து படங்களில் ஒன்று என்றார். இப்படத்தின் இயக்குனர் பாலுமகேந்திராவின் மாணவர் என்பதால் நெகிழ்ந்து சொன்னாரா இல்லை உண்மையிலேயே இந்தப் படத்தில் அப்படி ஏதும் இருக்கிறதா என்றும் என் சிற்றறிவுக்குத் தெரியவில்லை.

ஒன்று, ஒரு படத்தைத் திரும்பத் திரும்பப் பார்க்க இயலும் படி ஒரு அருமையான entertainerஆக இருக்க வேண்டும். இல்லை, கனமான விசயங்களை அலசும் சோகப் படம் என்றால், இன்னொரு முறை பார்க்கத் துணியாத அளவுக்கு உறைய வைக்கும் தாக்கம் உடையாதாக இருக்க வேண்டும். இந்தப் படம் இந்த இரண்டிலும் சேர்த்தி இல்லை. இன்று வரை, இந்தப் படத்தைப் பாருங்கள் என்று எந்தக் காரணத்துக்காகவும் என் நண்பர்களுக்குப் பரிந்துரைக்க இயலாத வணிக நியதிகளுக்கு உட்பட்டு எடுக்கப்பட்ட ஒரு அரை வேக்காட்டுப் படமாகத் தான் எனக்குத் தோன்றுகிறது. படம் அலசும் விசயம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். குத்துப் பாட்டு இல்லை, ஆபாசம் இல்லை என்பதற்காக ஒரு படத்தை நல்ல படம் என்று சொல்லி விட முடியாது. இந்த மாதிரிப் படங்களை “critically acclaimed” என்று ஊடகங்கள் கொஞ்சம் போது எரிச்சலே மிஞ்சுகிறது.

படத்தின் பெரும் குறைகளாக நான் நினைப்பது:

1. கதையை முன்னும் பின்னுமாக மாற்றி மாற்றிச் சொல்வது பரபரப்பாக இருக்கும் என்று இயக்குநர் நினைத்திருப்பார் போல். எனக்கு அப்படி ஒன்றுமே தோணவில்லை. உருப்படியாக நேர்க்கோட்டிலேயே கதை சொல்லி இருக்கலாம். முன்னும் பின்னுமாகச் சொல்வது எல்லாம் இயக்குநரின் மேதாவித்தனத்தைக் காட்டத் தான் என்று தோன்றுகிறது.

2. படத்தில் சுட்டிக்காட்டும் முக்கிய விசயங்கள் எல்லாம், முக்கியமாக climaxக்கு நெருங்கிய, சமூக ஏற்றத்தாழ்வு குறித்த விசயங்கள் எல்லாம் வசனங்களாகவே முன்வைக்கப்படுகிறது. காட்சிப்படுத்தல் திறம் சிறிதும் இல்லை. இந்த வசனம் இல்லை என்றால் இதைத் தான் இயக்குநர் சொல்ல வருகிறார் என்பது ஒருவருக்கும் புரிந்து இருக்காது. இந்த விசயத்தைச் சொல்ல ஒரு சிறந்த மேடைப்பேச்சோ மேடை நாடகமோ போதுமே? திரைப்படம் எதற்கு?

3. குழப்பமான பாத்திரப் படைப்பு. ஒரு காட்சியில் காலைப் பிடித்துக் கெஞ்சுவது போல் இருக்கிறார் நாயகன். அடுத்த காட்சி ஆவேசமாகப் பேசுகிறார். புரட்சிக்காரன் போல் தன் வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்கிறார், அப்புறம், என்னத்துக்காக அதைத் தானே காவல் துறையிடம் கொடுத்து விட்டு லூசுத்தனமாகச் செத்துப் போகிறார் என்று புரியவில்லை.ள

4. குழப்பமான கதை. அன்பும் ஆதரவுமற்ற சிறு வயது, காதல் தோல்வி, சமூக ஏற்றத் தாழ்வு என்று நாயகனின் மனப்பிறழ்வுக்கு பல காரணிகள் இருக்கும் போது குறிப்பிட்ட எந்தக் காரணியின் மீதும் பார்வையாளின் சிந்தனை செல்வது இயலாததாக இருக்கிறது. ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் துவக்கத்திலேயே ஆனந்தியோ பெற்றோரோ நாயகனுடன் இருந்திருந்தால் அவன் இப்படி ஆகி இருப்பானா என்று நினைப்பதைத் தவிர்க்க இயலாது. மனம் பிறழ்ந்த ஒருவனின் கதையை dramaticஆகச் சொல்லாமல் சமூகத்தில் பலரைப் போல் இருக்கும் ஒருவனின் கதையை இன்னும் நேர்மையாக உறைக்கும் படிச் சொல்லி இருக்க முடியும் என்றே தோன்றுகிறது.

தான் எடுக்க நினைக்கும் கதையை எடுக்க இயக்குநருக்கு முழுச் சுதந்திரம் உண்டு என்றாலும், இந்தக் கதையை உருவாக்கிய அடிப்படையாக இயக்குநர் சொல்வது எனக்கு எரிச்சல் ஊட்டியது. தன் வாழ்வில் பார்த்த பலரது நிகழ்வுகளின் தொகுப்பே இந்தக் கதை என்கிறார் இயக்குநர். பலருடைய வாழ்க்கைக் கதைகளை எடுத்து ஒரே ஆளின் கதையாகச் சொல்லும் உத்தி இன்னும் சில தமிழ்த் திரைப்படங்களிலும் இருக்கிறது. ஆனால், இப்படிச் செய்வது ஒரு அதீத செயற்கைத் தனத்தை நுழைத்து விடுகிறது என்று தான் தோன்றுகிறது. சொல்வதானால் ஒருத்தனின் வாழ்வில் உண்மையிலேயே நடந்த கதையைக் கொஞ்சம் கூட்டிக் குறைத்துச் சொல்லலாம். பலரது வாழ்வைக் குழப்பி அடித்து சொல்ல நினைப்பதை எல்லாம் ஒரே படத்தில் சொல்ல நினைத்துச் சொதப்பியதாகவே இந்தப் படம் தெரிகிறது.

ஒருவனின் நாய்க்குட்டி சாகிறது, அம்மா சாகிறாள், அப்பா விடுதியில் விட்டு விட்டு இராணுவத்துக்குப் போகிறார், விடுதியில் இருந்த அன்புள்ள தமிழையாவும் இறக்கிறார், காதலித்த பெண் பிரிந்து போகிறாள், காசில்லாத நாயகன் காவலர்களிடம் மாட்டுகிறார், பைத்தியமாகிறார், ஏகப்பட்ட கொலைகள் செய்கிறார், காதலித்த பெண் விலைமாதாகிறாள், திரும்ப சந்தித்து இருவரும் சாகிறார்கள்…uff..இந்தக் கதையை என் நண்பரிடம் சொன்ன போது, ஆள விடுறா சாமி என்று தெறித்து ஓடிவிட்டார் 🙂 படம் ஏன் வணிக ரீதியில் பெரு வெற்றி பெற வில்லை என்று இப்போது புரிகிறது 🙂

அண்மைய தமிழ்த் திரைப்படங்களில் எரிச்சலூட்டும் இன்னொரு போக்கு – காவியப்படுத்தப்படும் சிறு வயது அல்லது பள்ளிக்காலக் காதல். ஏதோ ஓரிரு படத்தில் இப்படி காவியமாக்கிக் காட்டினால் பொறுத்துக் கொள்ளலாம். பல படங்களில் இதையே காட்டி வெறுப்பேற்றுகிறார்கள். இது உண்மையில் நிகழக்கூடிய ஒன்றாகவே எனக்குத் தோன்றவில்லை. இந்தக் கதையையே எடுத்துக்கொண்டால், பிரபாகர் ஆனந்தியை வளர்த்த பிறகு பார்த்திருக்காவிட்டால், ஆனந்தி மேல் இவ்வளவும் பற்றுதலும் பாசமும் வந்திருக்க வாய்ப்பில்லை. ஆனந்தி ஒரு மோசமான மாமனிடம் மாட்டி விலை மாதாக ஆகி இராவிட்டால் பிரபாகர் கூப்பிட்டவுடன் உயிர் உருகி வந்து செத்துப் போய் இருக்க மாட்டாள்.

—-

படத்தின் கலைத்திறம் வேறு, படம் சொல்ல முற்படும் செய்தியின் முக்கியத்துவம் வேறு. அந்த விதத்தில் படம் சொல்ல முற்படும் சமூக ஏற்றத்தாழ்வுகள் குறித்து விரிவாக, ஆழமாக அலசும் அளவுக்கு எனக்கு அறிவு இருப்பதாகத் தோன்றவில்லை 🙂 என்பதால் அது பற்றி ஏதும் எழுதாமல் இருப்பதே நலம்.

ரவி

3 பின்னூட்டங்கள் »

 1. ஒட்டுதாடியோடு நாயகன் நடிக்கும் படத்தை சனங்கள் எப்படி பார்க்கிறார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். நாயகன் சங்கர் படப் பாணியில் பலரைகொல்கிறான் என்று கேள்விப்பட்டதும் தேறாது என்று நினைத்தேன். உங்கள் விமர்சனத்தைப் படித்தவுடன் இந்தப்படத்தை பார்க்கத் தேவையில்லை என்று முடிவுசெய்தேன்!

  பின்னூட்டம் by பாலாஜி — நவம்பர் 26, 2007 @ 5:39 முப | மறுமொழி

 2. vanika nokkudan thamil thiraipadangal niraya undu neengal antha nokkathodu Ippadippatta padangalai parpathe thavaru

  பின்னூட்டம் by Murugan — நவம்பர் 26, 2007 @ 9:23 முப | மறுமொழி

 3. முருகன், வணிகப் படம், கலைப்படம் என்று தனித்தனியாக எதுவும் இல்லை. சொல்வதை நேர்மையாகச் சொல்லும் படம் எல்லாமே நல்ல படம் தான். இந்தப் படத்தை நேர்மையான ஒரு படமாக என்னால் கருத இயலவில்லை.

  பாலாஜி – ஆமா, அந்த ஒட்டுத் தாடி செம செயற்கை தான்..

  பின்னூட்டம் by ரவிசங்கர் — நவம்பர் 26, 2007 @ 1:11 பிப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: