திரை விமர்சனம்

செப்ரெம்பர் 4, 2008

War, Inc. (2008): பாதை தவறிய படம்

நல்லதொரு நோக்கத்தோடு படத்தை எடுக்கத்தொடங்கிவிட்டு பாதைதவறித் தடுமாறியிருக்கின்றார்கள். உலகத்தில் நடக்கும் போர்கள் எல்லாவற்றிற்கும் பின்னால் வல்லரசுகளின் வணிக இலாபமே உள்ளது என்பதை ஒரு கடி நகைச்சுவை படமொன்றின் மூலம் காட்ட முயன்றிருக்கின்றார்கள். கடைசியில் கடியும் நகைச்சுவையும் இருக்கின்றதே ஒழிய சொல்லவந்த செய்தி பின்புலத்திற்குப் போய்விட்டது.

காசிற்காக கொலைசெய்வது Brand Hauserஇன் (John Cusack) வேலை. போரினால் நொந்து போயிருக்கும் (கற்பனை நாடு) Turaqistan நாட்டில் போட்டி நிறுவனத்தின் பெரிய தலையைத் தட்டுவதற்காக இவரை அனுப்புகின்றது Tamerlane நிறுவனம். கொலையை செய்வதற்கு திரைமறைப்பு மத்திய கிழக்கின் புகழ்பெற்ற பாடகி Yonicaஇன் (Hilary Duff) கல்யாண விழா. ஏற்கனவே தனது தொழிலில் சந்தோசமற்றிருக்கும் Hauser, செய்தியாளர் Natalie மீது (Marisa Tomei) காதலில் விழுகின்றார். இவர்களது வாழ்கைகள் அந்த சில நாட்களில் எவ்வாறான திருப்பங்களிற்குள்ளாகின்றது என்பது படத்தின் கதை.

எடுத்துக்கொண்ட political satire என்ற கருவை அடிக்கடி விட்டு விலத்துகின்றது படம். நடிகர்களில் எவ்வித பிழையும் இல்லை (பாடகி/நடிகை Hilary Duff கூட தனது பங்கை பிழையில்லாமல் செய்திருக்கின்றார்). கதாசிரியர்தான் குழம்பியிருக்கின்றார். அந்தச் சொதப்பலைவிட்டால் படம் பரவாயில்லை. நேரம் கடத்துவதற்குப் பார்க்கலாம். படத்தின் கருவைப் பற்றி நீங்கள் தீவிரமாக இருப்பீர்கள் என்றால் Lord of War (2005) போன்ற படங்களைப் பார்ப்பது நல்லது.

War, Inc. IMDB இணைப்பு

No Country for Old Men (2007): ஆஸ்கார் வென்ற கண்ணாம் பூச்சி ஆட்டம்

சில ஆஸ்கார் வென்று செல்லும் படங்களை ரசிக்கவும் இயலாது, ரசிக்காமல் இருக்கவும் முடியாது. என்னைப் பொறுத்தவரையில் 2007 ஆம் ஆண்டிற்கான ‘சிறந்த படம்’ ஆஸ்கார் வென்ற இந்தப் படமும் அந்தவகையில் ஒன்று. கதையில் எவ்வித புதுமையும் இல்லை. என்றாலும் அந்தக் கதையை எடுத்தவிதத்தை மட்டும் வைத்தே இந்தப் படத்திற்கு ஆஸ்காரைக் கொடுக்கலாம். ஒளிப்பதிவும் அந்தமாதிரி, ஒரு இலக்கண சுத்தமான கவிதைபோல இருக்கின்றது.

2006ஆம் ஆண்டின் ‘சிறந்த படம்’ விருதைப் பெற்ற “The Departed” படம் போலவே இதுவும் ஒரு crime drama. என்றாலும் ஆங்காங்கே வரும் சில சுடுதல், துரத்தல் காட்சிகளை விடுத்து பொதுவாக மிகவும் மெதுவான கதையோட்டம். ஏனோ தெரியாது, கதை 1980களில் நடப்பதாக எடுக்கப்பட்டுள்ளது. Mexico எல்லையோரமாகவிருக்கும் வனாந்தரமான ஒரு சிறு Texas நகரம். அங்கே மான்வேட்டையாட செல்லும் Moss, சில கைவிடப்பட்ட வாகனங்கள், துப்பாக்கி சண்டையில் செத்து சிதைந்துகொண்டிருக்கும் பிரேதங்கள், இப்படியான ஒரு காட்சிக்கு வந்துசேருகின்றான். அத்துடன் 2 மில்லியன் டாலர் பணப்பெட்டியும் கூட! அதிஸ்டம் அடித்தது என்று மகிழ்வதற்கு முன்னர், அந்த பணத்தை மீட்டெடுப்பதற்காக வந்து சேருகின்றான் Chigurh (Javier Bardem) என்னும் கொலைகாரன். அந்தளவு பணத்தை விட்டுக்கொடுக்க மனமில்லாமல் Chigurhஇடமிருந்து தப்பியோட முனைகின்றான் Moss. ஆனால் Chigurhவோ ஒரு ஈவுஇரக்கமற்ற, புத்திசாலித்தனமான, psycho கொலைகாரன். இவர்களிற்கு இடையிலான கண்ணாம் பூச்சி ஆட்டம் எங்கு சென்று முடிகின்றது என்பதைச் சொல்கின்றது படம்.

முன்பு ஆஸ்கார் வென்ற The Godfarther படத்தைப் போல ஒரு இழுவையான படம், என்றாலும் இடையில் நிறுத்தமுடியாதமாதிரியான ஒரு பட இயக்கம். படம் எப்பிடியோ, Javier Bardem இதில் ஆஸ்கார் வென்றது முற்றிலும் தகும்; அந்த psycho கொலைகாரன் பாத்திரத்தில் கலக்கித் தள்ளியிருக்கிறார். ஆஸ்கார் வென்ற படம் என்பதால் இதைப்பார்க்கலாம். படத்தைப் பார்த்துவிட்டு வெறுத்தால் என்னைக் குற்றம் சொல்லவேண்டாம்!

“No Country for Old Men” IMDB இணைப்பு

செப்ரெம்பர் 3, 2008

In the Valley of Elah (2007): டேவிட்டும் கோலியாத்தும்

டேவிட் – கோலியாத் கதையைப் பால்யப் பருவத்தில் படித்திருப்பீர்கள்: மாமேரு மலைபோலிருந்த கோலியாத்தை சின்னஞ்சிறு சிறுவன் டேவிட் கவண்கல்லுக் கொண்டு வெற்றியடைந்த கதை. அந்த டேவிட்-கோலியாத் சண்டை நடந்த பள்ளத்தாக்குக்குப் (valley) பெயர்தான் Ella. அந்த புகழ்பெற்ற கதையை பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் சண்டையோடு ஒப்பிட்டு படம் எடுத்திருக்கின்றார்கள். என்றாலும் இந்த புதியகதையில் டேவிட் வெற்றி பெற்றதாகக்காட்டாமல் விடுவதுதான் படத்தின் சிறப்பு அம்சம்.

ஈராக்கிலில் இராணுவ சேவை செய்துவிட்டு நாடு திரும்பும் ஒரு இராணுவ வீரன் Mike திடீரென முகாமிலிருந்து காணாமல் போய் விடுகின்றான். ‘இராணுவத்திலிருந்து தப்பி ஓட்டம்’ என்ற இராணுவத்தின் முடிவை ஏற்க மறுக்கின்றார் Mikiஇன் தகப்பன் Hank (Tommy Lee Jones). இராணுவம் இவரின் முறைப்பாடுகளை அலட்சியம் செய்ய, ஏதாவது ஒரு முடிவு தெரிந்தே தீர வேண்டும் என்ற உறுதியோடு உள்ளூர் காவல்துறையின் உதவியை நாடுகின்றார் Hanks. முதலில் இவரின் முறைப்பாடுகளை புறம்தள்ளினாலும், இவரது வேண்டுகோளில் விடயம் உள்ளதென்று அறிந்தபின் Mikiஇன் தலைமறைவை Hankஓடு இணைந்து துப்புத்துலக்க முனைகின்றார் காவல்துறை அதிகாரி Emily (Charlize Theron). இவர்களது புலனாய்வு வெளிக்கொண்டுவரும் அவலங்களே படத்தின் கதை.

தற்போதைய தகவல்துறையின் பொதுவான போக்கு என்னவென்றால் ஈராக்கில் நடக்கும் போரைக் கண்டிப்பது, ஆனால் அங்கு பணி செய்யும் இராணுவவீரர்களை மாவீரர்களாகக் (Heroes) காட்டுவது. அதை விடுத்து அந்த இராணுவ வீரர்களும் சாதாரண மனிதர்கள்தான், அவர்களை இந்த அநியாயமான போர் எவ்வளவு தூரம் கெடுக்கின்றது என்பதை தெளிவாகவும், விகாரமாகவும் காட்டியிருக்கின்றது இந்தப் படம். அதிலும் இந்தப் படம் உண்மைச் சம்பவங்களை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்டிருப்பதென்பதை எண்ணும்போது சற்றே அதிர்ச்சியாகவும் உள்ளது. படத்தின் இரு பிரதான பாத்திரங்களும் படத்தின் முழுப்பொறுப்பையும் தோளில் தாங்கி அழகாக கொண்டு சென்றிருக்கின்றார்கள். 2007 ஆண்டிற்கான சிறந்த நடிகரிற்கான ஆஸ்காரிற்கு Tommy Lee Jones இந்தப் படத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்டதையும் இங்கு குறிப்பிடவேண்டும். படத்தின் கடைசியில் அந்த கொடி பறக்கவிடும் காட்சியில் சொல்லவந்த செய்தியை அழகாக சொல்லியிருப்பது மிகவும் இரசிக்கக்கூடியதாக இருக்கின்றது. தொய்து போகாத, அழகான படம்; என்றாலும் சிறுவர்களோடு பார்க்க முடியாது.

“In the Valley of Elah” IMDB இணைப்பு

கற்றது தமிழ், செத்தது ரசனை!

‘ஒட்டு தாடி வெளிப்படையாய் தெரிய ஒருவர் நடித்த படத்தை மக்கள் காசு கொடுத்து பார்க்கவேண்டும்’ என்னும் ஆணவத்தை ஏற்க மனமில்லாமல் ‘கற்றது தமிழ்‘ என்ற படத்தைப் பார்க்காமல் தவிர்த்து வந்தேன். இன்று ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில் பார்க்க நேர்ந்தது. இந்த படுசுமாரான படத்தை பற்றி என்னிடம் சிலாகித்தவர்களை நினைத்து சிரித்தேன்.

ஒரு திரைப்படத்தை எப்படி மதிப்பிடுவது என்பது பலருக்கும் புரிவதில்லை. கதை, கருத்து அகியவையெல்லாம் ஒரு படத்தை மதிப்பிடுவதில் எந்த பங்கும் வகிக்கக்கூடாது. (ம் … கதையே இல்லாமல் படமெடுப்பதை கண்டிப்பது வேறு விசயம்!)

கொடுத்த கதையை எவ்வாறு எடுத்திருக்கிறார்கள், ஒளி, ஒலிப்பதிவு எப்படியிருக்கிறது, திரைக்கதை தெருக்கூத்துத் தனமாக இருக்கிறதா, நடிகர்கள் தேமேயென்று வந்துபோகிறார்களா, ஒப்பனை தேவைப்பட்டால் அது எவ்வளவு அசிங்கமாகயிருக்கிறது? என்று எதையுமே கருத்தில் எடுத்துக்கொள்ளாமல் ஒரு படத்தை புகழ்வது எரிச்சலை ஏற்படுத்துகிறது!

மேலே நான் கொடுத்த எந்த தராதரத்திலும் ‘கற்றது தமிழ்’ நூற்றுக்கு பத்து மதிப்பெண்களைக்கூடப் பெறாது. மற்றபடி எதோ தமிழ் பற்றிய கதை என்றால் அதுவும் நகைப்புக்குரியது. ஒரு நூறு படங்களில் பார்த்துப் புளித்துப்போன தனிமனிதனின் துன்பங்களுக்காக சமூகத்தைப் பழிவாங்கும் மசாலாக் கதையில், தமிழ் என்ற மையை லேசாக (தேவையேயில்லாமல்) தடவி மக்களை முட்டாளாக்கியிருக்கிறார்கள். அவ்வளவுதான்.

நிற்க. படமெடுப்பவர்கள் கஷ்டப்பட்டு எடுத்திருக்கிறார்களே, படத்தை விமர்சிக்க நமக்கு என்ன தகுதியிருக்கிறது என்பதெல்லாம் தேவையில்லாத கவலைகள். ஆரோக்கியமான விமர்சனமே கலைஞர்களிடமிருந்து சிறந்த படைப்புகளை வரவைக்கும்!

***

பெர்க்மன் நினைவு திரைப்பட வரிசையில் இன்று ‘வின்டர் லைட்‘ என்ற படத்தை பார்த்தேன். எப்போதும் போல ஆழமான படம். கடவுள் நம்பிக்கை போலித்தனமான சுயநலவாதம் என்கிறார் பெர்க்மன். ஆமேன்!

முதலில் இங்கு பதியப்பட்டது.

செப்ரெம்பர் 2, 2008

அக்னி நட்சத்திரம்

அக்னி நட்சத்திரம் DVD Cover

அக்னி நட்சத்திரம் DVD Cover

என்னோட WIS (Watch It Soon) லிஸ்ட்ல இருந்த மற்றொரு படம், அக்னி நட்சத்திரம்.
இது மணிரத்னம் படம் என்று என்னால் சுத்தமாக நம்பமுடியவில்லை.

அங்கங்கே சில முத்திரைகள் இருந்தாலும், பல சொதப்பல்கள்.. பல நேரங்களில் எரிச்சல் எரிச்சலாக வந்தது. எல்லாத்திலும் முதல் எரிச்சல்,  லைட்டிங்தான். ரின் விளம்பரத்தில வற்ற மாதிரி எல்லாரும் படம் முழுக்க பளபளான்னு வற்றாங்க.. ஒரு அளவுக்கு லைட்டிங் பயன்படுத்தலாம்.. அதுக்காக இந்த அளவுக்கா.. அதிலும் சில காட்சிகளில், கீழிருந்து கொடுக்கப்படும் லைட்டிங், ரொம்ப செயற்கையா தெரியுது.. P.C. Sriram ஏதோ பரீட்சார்த்தமா முயற்சி பண்ணியிருக்கார்னு நினைக்கிறேன்.

இரண்டாவது எரிச்சல், பாடல்கள்.. பாடல்கள் நல்லாத்தான் இருக்கு.. ஒத்துக்கறேன். ஆனா, place பண்ணது சரியில்லையோன்னு தோணுது.. படத்தின் 55வது நிமிடத்திலிருந்து 75 நிமிடத்திற்குள், (20 நிமிட இடைவெளியில்) மூன்று பாடல்கள் வருகின்றன. அதுக்குள்ள அடுத்த பாட்டான்னு கேக்க வைக்குது..

நிரோஷா கதாபாத்திரம், ஏன் எதுக்கு எப்படி என எதுவும் இல்லாமல் திடீர்னு வந்து I love you சொல்லி ரெண்டு டூயட் பாடிட்டு போறாங்க.

அப்புறம், வீ.கே. ராமசாமி ஜனகராஜ் Duo. படத்துடன் தொடர்பில்லாத comedy track. இது இல்லாமலேயே இருந்திருக்கலாம்.

எவ்வளவு பெரிய இயக்குனரா இருந்தாலும், வெற்றிக்கான பயம்கிறது எல்லாருக்கும் ஒண்னுதான்.. ஒரு படம் வெற்றியடைஞ்சிடுச்சுன்னா, அடுத்ததும் வெற்றியைக் கொடுத்தே ஆகணும்னு ஒரு சொல்லப்படாத கட்டாயம் திணிக்கப்படுவதாலோ என்னவோ, ஒரு டிபிகல் மசாலா படம் மாதிரி, ஒரு காமெடி டிராக், சில சண்டைகள், ஒரு சென்டிமென்ட், கொஞ்சம் கவர்ச்சி என ரொம்ப சாதாரணமா ஒவ்வொரு வருஷமும் வர்ரதுதான் இந்த அக்னி நட்சத்திரம்.

செப்ரெம்பர் 1, 2008

Night at the Museum

night_at_the_museum_poster

night at the museum poster

————————————
இயக்கம் : Shawn Levy
நடிப்பு : Ben Stiller, Robin Williams
மொழி : ஆங்கிலம்
வருடம் : 2006
————————————
1993 ம் ஆண்டு Milan Tranc எழுதிய குழந்தைகளுக்கான புத்தகம்தான் Night At the Museum. அதனைத் தழுவி எடுக்கப்பட்டதே இத்திரைப்படம். பெயரே கதை சொல்கிறது. ஊரே உறங்கும் இரவில் அருங்காட்சியகத்தினுள் நிகழும் அதிசயங்கள்தான் கதை.

நம்ம ஹீரோ அந்த அருங்காட்சியகத்தில் night watchman ஆக வேலைக்குச் சேருகிறார். வேலையின் முதல் நாள். இரவில் கண்விழித்துப் பழக்கப்டாத ஹீரோ உறங்கிவிடுகிறார். நள்ளிரவில் கண்விழித்துப் பார்க்கும் போது, அருங்காட்சியகத்தில் இருந்த டைனோசர் எலும்புக் கூட்டை அதன் இடத்தில் காணவில்லை. பதற்றத்துடன், அருங்காட்சியகத்தின் உள்ளே செல்கிறார். அங்குதான் காத்திருக்கிறது அதிர்ச்சி. Ben Stiller தேடிச்செல்லும் அந்த டைனோசர் எலும்புக்கூடு ஒரு water tape ல் நீர் அருந்திக் கொண்டிருக்கிறது. அதனைப் பார்த்து ஹீரோ அலற, ஹீரோவை டைனோசர் துரத்த, அப்போதுதான் ஒரு உண்மைதெரியவருகிறது. அது.. அந்த அருங்காட்சியகத்தில் இருக்கும் அனைத்தும் இரவு நேரத்தில் உயிர்பெற்று உலவுகின்றன.டைனோசர் மட்டுமல்ல. அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட், சிங்கம்,புலி, சிம்பன்சி குரங்கு,வரிக்குதிரை, ஆப்ரிக்க யானை, கற்கால மனிதற்கள், Cow boys, ரோமப் பேரரசர் ஆக்டேவியஸ் என ஒரு சர்ரியலிஸக் கலைவையே உயிர் பெறுகிறது. ஆனால் அனைவரும் பகலவனின் உதயத்தில் சிலையாய்உறைகின்றனர். இதற்கெல்லாம் காரணம் அங்கிருக்கும் ஒரு எகிப்திய மம்மியும் அதன் Tablets எனப்படும் ஒரு மந்திரப்பலகையும்தான்.

ஒரு சுவாரஸ்யமான கதைக்கு இந்த கதைக்களம் போதாதா..? இடையில் ஒரு வில்லன் Group. அருங்காட்சியகத்தைத் திருட எத்தனிக்கிறது. அதனை Ben Stiller அருங்காட்சியகத்தின் காட்சிப்பொருள்கள்(!) அனைவரின் உதவியோடு எப்படி முறியடிக்கிறார் என்பதை கிராபிக்ஸ் கலக்கலோடுவயிறு குலுங்கச் சொல்லும் கதைதான் Night At the Museum.

படத்தில் அத்தனை ஜனரஞ்சக விஷயங்களுக்கும் உத்தரவாதம் உண்டு. காதல், சோகம், வீரம், விபரீதம், நகைச்சுவை, ஏமாற்றம் என அத்தனையும் உண்டு. Robin Williams வழக்கம் போல் ரூஸ்வெல்ட்டாக பின்னியெடுத்திருக்கிறார்.
குடும்பத்துடன் கண்டுகளிக்க சிறந்த படம்.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.