திரை விமர்சனம்

ஜனவரி 26, 2009

மூன்று முடிச்சு – சரியான வில்லன் மூஞ்சி

Filed under: தமிழ்த் திரைப்படம் — Nilofer Anbarasu @ 5:36 முப
ரஜினி என்றாலே ஸ்டைல் என்றான பிறகு அவர் நடித்த படங்களில் ஏதாவது ஒரு வகை ஸ்டைல் ரசிகர்களுக்காக திணிக்கப்படுவதுண்டு. ஆரம்ப கால படங்களில் ஸ்டைல் என்ற முத்திரை அவர் மீது விழுவதற்கு முன்பு வந்த படங்களில் குறிப்பிடத்தகுந்தவை இந்த மூன்று முடிச்சு. இந்த படத்தில் ரஜினியினுடைய எல்லா மேனரிசமும் ஒரு வகை ஸ்டைல்தான். ஸ்டைல் என்று சொல்லத்தெரியாமல் மக்கள் அவரை ரசிக்கத் தொடங்கிய காலம். கமலும் ஸ்ரீதேவியும் ஒருவரை ஒருவர் காதலிக்க, ரஜினி ஸ்ரீதேவியை ஒருதலையாய் காதலிப்பார். சாதாரண முக்கோண காதல் கதை போல் ஆரம்பித்தாலும், ரஜினியின் கோரமுகம் வெளிப்படும் போது சற்றே வேகமெடுக்கிறது கதை. வில்லனான ரஜினியே படம் முழுவதும் பூரணமாக நிறைந்திருக்கிறார். வில்லனுக்கு முக்கியத்துவம் கொடுத்து அப்போது எடுக்கப்பட்டிருந்தாலும் இப்போது பார்க்கும்போது ஏதோ ஆன்டி-ஹீரோ சப்ஜெக்ட் போலத்தான் தெரிகிறது. ரஜினி மட்டும் ஹீரோவாக நடிக்காமல் வில்லனாகவே தொடர்ந்திருந்தால் சூப்பர்ஸ்டார் ஆகியிருக்கமாட்டார் ஆனால் நிச்சயம் சூப்பர் வில்லனாகியிருப்பார்.தொடர்ந்து தப்பு செய்யும் வில்லன் போல் இல்லாமல், மூர்கமாக தவறு செய்துவிட்டு பின்னர் மனசாட்சிக்கு பயந்து ஓடி ஒளியும் வில்லன். கடந்த 15 வருடங்களாக ரஜினிக்காகவே எழுதிய வசனங்களை கேட்டு பழகிப்போன நமக்கு, சாதரண ரஜினிக்காக, பிரசாத் என்கின்ற கதாபாத்திரத்துக்காக எழுதிய வசனங்களை கேட்கும் போது ரொம்பவே இயல்பாய் இருக்கிறது. ஒரு காட்சியில், ரஜினியின் தந்தை பிரசாத்தை பத்தி என்ன நினைக்கிறன்னு கேட்பார், அதற்க்கு ஸ்ரீதேவி “சரியான வில்லன் மூஞ்சி” என்பார். ஸ்ரீதேவியை கல்யாணம் செய்யும் ஆசையில் ரஜினி சுற்றிவர, பாலச்சந்தரின் சேட்டையால் ரஜினியின் அப்பாவும் ஸ்ரீதேவியும் கல்யாணம் செய்துகொள்ள, ஸ்ரீதேவிக்கு தலைமகனாகிவிடுவார் ரஜினி. இந்த படத்தின் மொத்த கதையை நம் கவியரசர் வெறும் ஆறு வரியில் அழகாய் சொல்லியிருப்பார். இந்த ஆறு வரியை, இரண்டு இரண்டு வரிகளாக முக்கிய கதாபாத்திரங்களான கமல், ரஜினி, ஸ்ரீதேவி பாடும்படி படமாக்கியிருப்பார் கே.பி. படத்தில் வெவ்வேறு இடங்களில் இந்த வரிகள் வரும்.

கமல்: வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
ரஜினி: மணவினைகள் யாருடனோ மாயவனின் விதிவகைகள்
விதிவகையை முடிவு செய்யும் வசந்த கால நிரலைகள்
ஸ்ரீதேவி: நிரலைகள் முடிந்ததெல்லாம் நெஞ்சில்வந்த நினைவலைகள்
நினைவலைகள் முடிந்தயிடம் தாய்மகனாம் சூழ்நிலைகள்

ஒரு காட்சியில் ரஜினியை பார்த்து ஸ்ரீதேவி “போடா கண்ணா போ” என்பார். இதுவே இன்னைக்கு ஒரு கதாநாயகி ரஜினியை பார்த்து சொல்லமுடியுமா? இப்படி அவ்வப்போது பல வசனங்கள் நம்மை நிகழ்கால சூப்பர்ஸ்டார் ரஜினியோடு ஒப்பிட்டு பார்க்க வைக்கிறது. இரண்டாண்டுகளுக்கு முன்பு வந்த பொய் படத்தில் விதிக்கு உருவம் கொடுத்திருப்பார் கே.பி. அதை சற்றே வித்தியாசமாக உணர்ந்தேன். 1976ல் வந்த இந்த படத்தை பார்த்த பிறகுதான் தெரிந்தது, இதெல்லாம் கே.பிக்கு ஜுஜுபி என்று. இந்த படத்தில் மனசாச்சிக்கு உருவம் கொடுத்திருக்கிறார். ரஜினி ஒவ்வொரு முறை தப்பு செய்த்தபிறகும், மனசாச்சி வந்து கேள்விகேட்கும், தவறை எல்லாம் வரவு வைத்துக்கொண்டே வரும். மனசாச்சிக்கு பைத்தியக்காரன் போன்ற ஒரு தோற்றத்தை கொடுத்திருப்பார். தவறு செய்த பிறகு ஒவ்வொரு முறையும் வந்து கேள்விகேட்கும் மனசாச்சி, ஏன் தப்பு செய்வதற்கு முன்பு வந்து எச்சரிக்காதா என்ற நம் நியாயமான கேள்விக்கு படத்தின் கடைசியில்

விதைக்கின்ற வேளையிலே விளங்காத மனசாட்சி…
விளைவுக்குப் பின்னாலே விரைந்துவரும் மனசாட்சி….
தனக்காகத் தன்னுடனே போராடும் மனசாட்சி….
தவறுபவன் கண்களுக்குப் பைத்தியந்தான் மனசாட்சி.

இந்த நாலு வரியில் பதில் சொல்லுகிறார். வசனங்கள் ஒவ்வொன்றும் அக்மார்க் கே.பி ரகம். ஸ்ரீதேவியின் அக்காவாக வரும் Y.விஜயா ஒரு துணை நடிகை, கமலுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, இயக்குனர் தூக்குப் போடும் காட்சியில் நடிக்க அழைப்பார், உடனே விஜயா கமலை பார்த்து “நா தூக்குல தொங்கிட்டு அப்புறமா வீட்டுக்கு வரேன். நீங்க போங்க.” என்பார். கல்யாணத்துக்கு வயது ஒரு தடை இல்லை என்று ஸ்ரீதேவி சொல்லும்போது அங்கு வரும்  ஒரு வயதானவர் “கீட்ஸ் சொல்லல, ஷெல்லி சொல்லல, நம்மூர் செல்வி சொல்லிட்டா” என்பார். இது போன்ற வசனங்களை கேட்கும்போது நம்மையும் அறியாமல் ஒரு புன்முறுவல் உதடுகளில் வந்து மறையும். ரஜினியின் அப்பாவாக ஒருவர் நடித்திருக்கிறார், பல படங்களில் பார்த்திருந்தாலும் பெயர் தெரியவில்லை. அந்த கதாபாத்திரத்துக்கு கணக்கச்சிதமாய் பொருந்துகிறார். அப்படியொரு நிதானமான நடிப்பு.

இந்த படத்தில் ரஜினியினுடைய நடிப்பை பார்த்த நமக்கு, சூப்பர்ஸ்டார் என்ற வட்டத்துக்குள் வந்த பிறகு ரஜினி சிரத்தை எடுத்து நடிப்பத்தை தவிர்த்து விட்டாரா? அல்லது இயக்குனர்கள் அவருடைய நடிப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லையா? என்ற சந்தேகம் வருகிறது. காரணம் இந்த படத்தில் அப்படியொரு அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ரஜினி.

—-
Nilofer Anbarasu
http://kick-off.blogspot.com

ஜனவரி 22, 2009

பெங்களூர் திரைப்பட விழா – விமர்சனங்கள்

கடந்த ஒரு வாரமாக நடந்துவந்த பெங்களூர் சர்வதேச திரைப்பட விழா இன்றோடு நிறைவடைந்தது. இதில் நான் பார்த்த 9 படங்களின் சிறு விமர்சனங்கள் கீழே. எனக்கு பிடித்த வரிசையில்.

1. Obsluhoval jsem anglickeho krale (I served the King of England). செக் நாடு.

Closely Watched Trains மூலம் செக் திரைப்பட வரலாற்றில் புதிய அலையை (Czech New Wave) ஏற்படுத்திய ஜிரி மென்செல் அவர்களின் படம். அருமை. படத்தில் வரும் அனைத்து பெண்களும் ஆடையைக் கலைகின்றனர்! இது இரண்டாம் உலகப்போர், செக் நாட்டின் மீது நாசிக்களின் படையெடுப்பு ஆகியன பற்றிய படம் என்று படம் முடிந்தபின்கூட நம்புவது கடினம்தான். பெண்கள், பணம், பல்சுவை உணவு. படம் முழுக்க இதுதான். ஆனால் போரின் கொடுமையை விவரிக்கவும், நாசிக்களை சாடவும் படம் சிறிதும் தவறவில்லை.

2. Avaze gonjeshk-ha (The Song of Sparrows). இரான்.

மஜீத் மஜீதி அவர்களின் படம். ஒளிப்பதிவில் கலக்கியிறுக்கிறார்கள். இரானிய படங்களில் எதிர்பார்க்கக்கூடிய குழந்தைகள், நேர்மை, மக்களின் அன்றாட வாழ்க்கை பற்றிய படம். ஒரே ஒரு குறை நான் Children of Heavenஐ எக்கச்சக்கமான தடவை பார்த்திருப்பதுதான். அதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை. வான் கோழிகளைத் தவிர்த்து!

3. Iza Stakla (Behind the Glass). குரேஷியா.

ஒரு படம் எப்படி இருக்கவேண்டும் என்று நான் வகுத்திருக்கும் அனைத்து விதிகளையும் பின்பற்றும் படம். 100 நிமிடங்களுக்குள் இருத்தல், கதை எப்படி இருந்தாலும் குழம்பம் இல்லாத நல்ல திரைக்கதை, நடிகர்களையும், இயக்குனரையும் குறையே சொல்லமுடியாத நேர்த்தி, படம் பார்ப்பவர்கள் புத்திசாலிகள் என்று பாவிக்கும் யதார்த்தமான வசனம், அழகான பெண்கள் என்று அனைத்திலும் சோபித்திருக்கிறார்கள்.
(more…)

ஜனவரி 21, 2009

குட்டி விமர்சனம்

Filed under: தமிழ்த் திரைப்படம் — Nilofer Anbarasu @ 7:37 பிப
Tags:

மகேஷ் சரண்யா மற்றும் பலர்: கிளைமாக்ஸ்ஐ மட்டுமே நம்பி படம் எடுத்திருக்கிறார் இயக்குனர். கிளைமாக்ஸ் அவ்வளவு சுவாரஸ்யமில்லாமல் போனாலும் மட்டமாக இல்லை. படத்தில்   சந்தியாவினுடைய முடிவு யாரும் எதிர்பார்க்காத ஒரு திருப்பம்.  தன் வீட்டில் உள்ள ஒவ்வொருவரிடமும் தன் காதலை பற்றி சக்தி  சொல்வது ரொம்ப அழகு.   ரொம்ப போர் அடிக்கும் போது இந்த படத்தை பார்க்கலாம்.

வில்லு: Bond பட ஸ்டைலில் எடுத்திருப்பதாக பிரபுதேவா ஒரு பேட்டியில் சொல்லியிருந்த்தார். James Bondஐ யாரும் இந்த அளவுக்கு   கேவலப்படுத்த முடியாது  என்பது படத்தை பார்த்த பிறகுதான் தெரிந்தது. ஏகப்பட்ட காட்சிகள் சற்று புதுமையாக தெரிந்தாலும், அவை அனைத்தும் தெலுங்கு படங்களில் இருந்து காப்பியடித்தது என குல்டி நண்பர்கள் சொன்னார்கள். படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது,  நயன்தாரா நடித்திருந்தால் குருவி கூட ஓடியிருக்குமோ என்று தோன்றியது.

படிக்காதவன்: டப்பா பிலிம்.  படம் ஆரம்பித்தவுடனே கொட்டாவி வருகிறது.  கிச்சு கிச்சு மூட்டினால்தான் நகைச்சுவை காட்சிகளில் சிரிப்பு வருகிறது. படம் முடிந்தவுடன் பெரு மூச்சு வருகிறது. அடிக்கடி தமனா வருவதால் சற்றே  ஆறுதல் வருகிறது.

—-
Nilofer Anbarasu
http://kick-off.blogspot.com

ஜனவரி 16, 2009

பெங்களூர் சர்வதேச திரைப்பட விழா

Filed under: திரைப்பட விழா — பாலாஜி @ 6:54 பிப

சுசித்ரா அகாதமியும் கர்நாடக அரசும் சேர்ந்து நடத்தும் பெங்களூர் சர்வதேச திரைப்பட விழா வியாழனன்று (ஜனவரி 15) துவங்கியது. இதில் திரையிடப்படும் படங்களின் அட்டவனை இங்கே.

இன்றிரவு (வெள்ளி) ஆந்த்ரே வாஜ்டாவின் கடீன் என்ற போலந்து நாட்டுப் படத்தைப் பார்த்தேன். பார்க்கலாம். அடுத்த வாரம் விழா முடிந்தவுடன் நான் பார்த்த படங்களின் விமர்சனம் எழுதுகிறேன்.

குறிப்பு: இவ்விழாவில் படங்களைப் பார்ப்பதற்கு ஒட்டுமொத்த அனுமதிச்சீட்டு வேண்டும். திரையரங்க வாசலில் பெற்றுக்கொள்ளலாம். விலை ரூ 500. திரைப்பட சங்கங்களின் உறுப்பினர்களுக்கு ரூ 300. மாணவர்களுக்கும் சலுகை விலையில் கிடைக்கும்.

முதலில் இங்கு பதியப்பட்டது.

ஜனவரி 15, 2009

Kit Kittredge: An American Girl (2008): அமைதியான, அழகான ஒரு குடும்பப் படம்

பத்து வயதில் Little Miss Sunshine படத்திற்காக ஆஸ்கார் விருதுக்கு தெரிவானவர் Abigail Breslin! அந்த நடிப்புத்திறனை தொடர்ந்து எடுத்துச் செல்கின்றார் இந்தப் படத்திலும். வருடம் 1934; அமெரிக்காவும் the great depression என்று அழைக்கப்படும் பாரிய உலகளாவிய ரீதியிலான பொருளாதார சிக்கலில் மாட்டி தவிக்கின்றது. Kit Kittredge (Abigail Breslin) சாதாரண ஒரு சிறுமி — பத்திரிகை செய்தியாளராக வரவேண்டும் என்ற பெரிய கனாவுடன். இவள் தனது கனவை நனவாக்க தளராது முயன்று கொண்டிக்கையில், நாட்டின் பொருளாதாரச் சிக்கல், இவளின் வீட்டையும் தாக்குகின்றது. வாகன விற்பனையாளரான Kit’இன் அப்பாவின் வியாபாரம் படுத்துவிட, அவர் ஊரை விட்டு வேலை தேடி பெரிய நகரமான Chicago’விற்கு சென்றுவிடுகின்றார். Kit’இன் அப்பா தொடர்ந்து வேலை தேடிக்கொண்டிருக்க, இவர்களின் வீடு மேலும் மேலும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகின்றது. Kit’இன் தாயார் தன்னால் முடிந்த அளவு பிரச்சனைகளை எதிர் கொண்டாலும் இவர்களது வீடு பறிபோகும் நிலைமை அண்மித்துக் கொண்டே செல்கின்றது. தவிர ஊரில் அதிகரித்துச் செல்லும் கொள்ளைகள். இப்படியான ஒரு சூழலில் Kit எவ்வாறு தனது வாழ்க்கையை சுவாரிசயமாக கொண்டுசெல்கின்றாள் என்பது கதை.

பெரிய கனவுகளோடு வெகுளியாக இருக்கும் சிறுமி எவ்வாறு மெல்ல மெல்ல பொருளாதார நெருக்கடிக்குள் அகப்பட்டு மனதால் முதிர்ச்சியடைகின்றாள் என்பதை நேர்த்தியாக வெளிக்காட்டியிருக்கின்றார் Abigail. இவற்றின் மத்தியில் நண்பர்கள், இலகுவான களியாட்டங்கள், வீரச்செயல்கள் என்பவற்றையும் மறக்கவில்லை. Abigail தவிர, அவரின் தாயாரக வரும் Julia Ormond‘உம் படத்தின் சுமையை இலகுவாகப் பகிர்ந்து கொள்கின்றார். படத்தில் drama, நகைச்சுவை, ஒழுக்கமூட்டும் செய்திகள், சிறுவர்களிற்கான சாகசங்கள் எல்லாமே நேர்த்தியாகக் கலக்கப் பட்டுள்ளன. அத்துடன் great depression கால வாழ்க்கையையும் சுவை படக் காட்டியுள்ளார்கள். மொத்தத்தில் குடும்பத்துடன் பார்ப்பதற்கு நல்லதொரு படம்.

“Kit Kittredge: An American Girl” IMDB இணைப்பு

Righteous Kill (2008): கொலையெல்லாம் சரிதான், கதைதான் சரி இல்லை.

Robert De Niro‘வும் Al Pacino‘வும் ஆங்கில பட உலகின் மைல் கற்களில் இருவர். இதில் யாராவது ஒருவரைத் தூக்கி ஒரு படத்தில் போட்டால் போதும், படம் ஒரு நல்ல படமாகிவிடும். எனவே இந்த இருவரையும் சேர்த்துப் போட்டால் எதுவுமே பிழைக்காது என்று முற்றுமுழுதாக நம்பி ஒரு படத்தை எடுத்திருக்கின்றார்கள். (இந்த சோடியின் முன்னைய படைப்புக்கள் (The Godfarther II, Heat) வெற்றிப்படங்கள் என்பதை இங்கு குறிப்பிடவேண்டும்.) இந்த சோடியை மட்டுமே நம்பிவிட்டு படத்தில் வேறு எதுவித புதுமையையும் காட்ட மறந்துவிட்டார்கள். 😦

De Niro’வும் Pacino’வும் தசாப்தங்களாக இணைந்து செயற்படும் இரு காவல்துறை துப்பறிவாளர்கள். கிட்டத்தட்ட இளைப்பாறுகின்ற வயதில் இருக்கும் தருவாயில் வந்து சேருகின்றது ஒரு தொடர் கொலை வழக்கு ஒன்று — காவல்துறையினரார் குற்றவாளிகள் என்று தெளிவாக அறியப்பட்டாலும், அதை நிரூபிக்க அத்தாட்சிகள் இல்லாத வகையில் சுதந்திரமாக நடமாடும் குற்றவாளிகள் ஒருவன் பின் ஒருவராக கொலை செய்யப்படுகின்றனர். “நல்ல விசயம், நடக்கட்டும்” என்று விட்டுவிட முடியாமல் அதை துப்புத்துலக்க வேண்டிய நிர்ப்பந்தம். விசாரணையின் போக்கில் இந்த கொலைகளை செய்வது ஒரு காவல்துறை அதிகாரியாகத்தான் இருக்கமுடியும் என்று தெளிவாகத்தெரிகின்றது. விசாரணைகள் மேலும் தொடர, சாட்சியங்கள் அனைத்துமே De Niro’வின் பாத்திரமே கொலையாளியாக இருக்கவேண்டும் என சுட்டிக்காட்ட ஆரம்பிக்கின்றன. அதைப்பற்றி எனக்கு கவைலையில்லை, நான் கொலைகாரன் இல்லை என De Niro’வும், De Niro’வை குற்றச்சாட்டில் இருந்து அகற்ற முயலும் Pacino’வுமாக கதை போகின்றது.

வழமைபோல நடிப்பில் எவ்வித குறையும் வைக்கவில்லை De Niro’வும் Pacino’வும். கூடவே துணை நடிகையாக வரும் Carla Gugino‘வும் கவர்ச்சிகரமான ஒரு சிறிய பாத்திரத்தில் சிறந்த முறையில் நடித்துள்ளார். நடிப்பு, நெறியாக்கம், ஓளிப்பதிவு எல்லாமே சிறப்பாகத்தான் உள்ளது, படத்தின் கதையைத் தவிர. உண்மைக் கொலைகாரன் யார் என்பதில் கடைசித் திருப்பு முனையாக கொண்டுவந்து பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய வைக்க முயற்சித்திருந்தாலும், அது பெரிய ஆச்சரியமாக எனக்குத் தெரியவில்லை.

De Niro, Pacino ரசிகர்கள் பார்கலாம். ஆக்க்ஷன் என்று எதுவும் இல்லை — கதைத்துத் தள்ளுகின்றார்கள். என்றாலும் விறுவிறுப்பு உண்டு. நீங்கள் தீவிர ஆங்கில பட ரசிகர் என்றால் இதைப் பார்க்கலாம். கொஞ்சம் வயது வந்தவர்களிற்கான படம்.

“Righteous Kill” IMDB இணைப்பு

ஜனவரி 14, 2009

Max Payne (2008): புளித்துப்போன பழிவாங்கல்

Max Payne ஒரு முன்னாள் துப்பறிவாளர். இவரது மனைவியும், கைக்குழந்தையும் வீடுடைப்பு கொள்ளையின் முடிவில் கொலை செய்யப்படுகின்றனர். கொலையாளிக் கும்பலில் இருவரை இவர் பதிலுக்கு கொலைசெய்யமுடிந்தாலும், ஒருவன் தப்பியோடிவிடுகின்றான். அவனைக் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட காவல்துறை அந்த வழக்கை தீர்க்க முடியாத கேஸ் ஆக தூக்கிப் போட்டுவிட்டு மறந்துவிடுகின்றது. என்றாலும் அதை மறக்க Max Payneஆல் முடியவில்லை. துப்பறியும் பணியிலிருந்து தீர்க்கமுடியாத கேஸ்களின் கோப்புக் காப்பாளராக தன்னைத்தானே பதவியிறக்கம் செய்து கொண்டு தனது குடும்பத்தின் கொலைவழக்கை தீர்ப்பதே ஒரே குறிக்கோளாக மாற்றிச் செயற்படுகின்றார். சில வருடங்கள் கழித்து கிடைக்கும் ஒரு சிறு தடையத்தை வைத்து துப்பு துலக்க முயலும் Max, தனது குடும்பத்தின் படுகொலைக்குப் பின்னால் எதிர்பார்த்ததிலும் பார்க்க பெரிய மர்மம் இருக்கின்றது என்பதை உணர்கின்றார். அத்தோடு அந்த கொலைகளின் பின்னணியில் இருப்பவர்களை கொலுவூட் ரகமாக பழிவாங்குவது மிச்சக்கதை.

பார்த்து ஐந்து நிமிடத்தில் மறந்து போய் விடுகின்ற படம். The Punisher போன்ற முன்னைய பல படங்களை ஞாபகமூட்டுகின்றது. Mark Wahlberg ஒரு நல்ல நடிகர்; ஏன்தான் இப்படியான படங்களில் நடிக்கவெளிக்கிடுகிறாரோ தெரியாது! Mila Kunisஐ கதாநாயகி என்று சொல்வதிலும் பார்க்க கருவேப்பிலை என்றுதான் சொல்ல வேண்டும், அதுவும் சரியாக மணமூட்டவில்லை. கூடவே அநியாயத்திற்கு ஒரு சிறு பாத்திரத்திற்கு Olga Kurylenko (சமீபத்தைய Bond நாயகி.) மொத்தத்தில் எல்லாம் வீண்; நீங்களும் நேரத்தை வீணடிக்காவிட்டால் நல்லது.

“Max Payne” IMDB இணைப்பு

The Sisterhood of Travelling Pants 2 (2008): அழகான ஒரு இரண்டாம் பாகம்

Filed under: திரைப்படம் — bmmaran @ 6:07 பிப

இரண்டாவது பாகம். நான்கு நண்பிகள், ஒரு pair of pants. வெவ்வேறு வடிவிலும் அளவிலும் இருந்தாலும் இந்த நான்குபேரிற்கும் அளவாயிருக்கின்றது அந்த pants. அதை தமது நட்பின் சங்கிலிக் கயிறு என்று நம்பும் இவர்கள் மாதத்திற்கு மாதம் அதை மாற்றி மாறி பாவிக்கின்றார்கள்; அது தமது வாழ்வில் நன்மையைக் கொண்டுவரும் என்றும் நம்புகின்றார்கள். இவர்களது வாழ்வின் நாட்குறிப்பேடுபோன்றதே படம்.

அந்த அமானுஷ்ய pantsஐத்தவிர படத்தில் அமானுஷ்யமாக ஒன்றும் இல்லை. வேறுபட்ட குணாதிசயம், பின்புலன்களைக் கொண்ட நான்கு teenage பெண்களின் வாழ்வில் வரும் சவால்களை அழகாக எடுத்துக்காட்டுகின்றது படம். Chick-flick என்ற வகைக்குள் அடங்கும் என்றாலும் அனைவரும் பார்க்கலாம். படத்தின் நான்கு முன்னணி பெண்களும் எனக்குப் பிரியமானவர்கள். முன்னைய பாகத்தைப் போலவே சிறப்பாகச் செய்திருக்கின்றார்கள். மகிழ்ச்சியோடு பார்க்கலாம்.

“The Sisterhood of Travelling Pants 2” IMDB இணைப்பு

The Day the Earth Stood Still (2008): சலிப்படைய வைக்கும் மீளாக்கம்

earth_stood_still1951ஆம் படத்தின் மீள்வடிவம். வெளி உலகில் இருந்து பூமிக்கு வருகை தருகின்றார் Klaatu — மனிதர்களோடு தொடர்பாடல்களை ஏற்படுத்துவதற்காக, மனித உருவத்தோடு. கூடவே பாதுகாப்பிற்காக பிரமாண்டமான ஒரு இயந்திரமனிதனும். New Yorkல் வந்து இறங்கும் Klaatu, ஐ.நா. சபையோடு பேச வேண்டும் என்கின்றார். வழமைபோல மனித இனம் அதை ஒரு அச்சுறத்தாலாக எடுத்துக்கொள்கின்றது. Klaatuவிடம் இருந்து வேறுலகவாசிகளைப் பற்றி தகவல்களைக் கறக்கமுயலும் அமெரிக்க அரசு, மனித உருவில் இருந்தாலும் Klaatu அமானுஷ்ய சக்தி கொண்டவர் என்பதை காலங்கடந்தபின் அறிந்து கொள்கின்றது. Klaatuஉடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வதுதான் மனித இனத்துக்கு நல்லது என்று நம்பும் டாக்டர் Helen, மற்றும் Helenஇன் மகனுஉடனுடம் சேர்ந்து பூமியில் தனது பயணத்தை தொடர்கின்றார் Klaatu. இவர்களின் பயணத்தின்போது, Klaatuஇன் வருகை உண்மையாகவே மனித இனத்தின் அழிவிற்காகத்தான் என அறிகின்றார் Helen. மனித இனம் பூமியை சாகடிக்கத்துக் கொண்டிருக்கின்றது; மனித இனம் சாகலாம், ஆனால் பூமியை சாகவிடமுடியாது என்பது Klaatuவின் வாதம். Klaatuவின் மனதை மாற்றி மனித இனத்திற்கு இன்னுமோர் வாய்ப்பை ஏற்படுத்த Helen முயல்வது மிகுதிக்கதை.

படம் ஆரம்பிக்கும் விறுவிறுப்பு படக்கென்று முறிந்துவிடுகின்றது. இருக்கும் சில ஆக்சன் காட்சிகள் கூட புதிதானதாக இல்லை. Sci-fi (விஞ்ஞான கற்பனை) என்றுசொல்வதற்கும் பெரிதாக ஒன்றும் இல்லை. 1951ஆம் ஆண்டுப்படத்தில் பூமியை அணு ஆயுத ஆபத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக Klaatu வருகின்றார்; புதிய படத்தில் பூமியை சூழல் (environmental) அழிவில் இருந்து காப்பாற்ற முனைகின்றார் Klaatu. மனித இனத்தில் வேரோடியிருக்கும் அன்பு, பாசம் என்பவற்றை பார்த்து Klaatu மனம் மாறுவது 1951’ஆம் ஆண்டு படத்திற்கு பொருத்தமாக இருந்திருக்கலாம்; ஆனால் அது புதிய படத்திற்கு ஒட்டவேயில்லை.

படத்தின் ஒரேயொரு வெற்றி, உணர்ச்சி ஏதும் அற்ற வேற்றுலக மனிதனாக நடிப்பதற்கு Keanu Reevesஐ (Matrix பட நாயகன்) தெரிந்தெடுத்திருப்பது — நன்றாக ஒத்துப் போகின்றது. படத்தில் அடுத்த நடிப்பு Helen’இன் மகனாக வரும் Will Simithஇன் உண்மை மகன் Jaden Smith. அப்பாவின் பெயரை நிச்சயமாகக் காப்பாற்றுவார்போல இருக்கின்றது. எனது கவலை Helenஆக வரும் Jennifer Connelly வழமைபோல சுவார்சியம் அற்ற வெளிப்பாட்டை காட்டியிப்பது.

மொத்ததில் படத்தில் பெரிதாக ஒன்றும் இல்லை. IMAXஇல் வெளியிடப்பட்டாலும் சின்னத்திரைக்கு வரும் வரை போறுத்திருக்கலாம். விரைவில் மறக்கப்படப்போகின்ற ஒரு படம்.

“The Day the Earth Stood Still” IMDB இணைப்பு

ஜனவரி 13, 2009

ஒரு நிமிட விமர்சனம்

பொம்மலாட்டம்: நல்ல த்ரில்லர் படம். நானா படேகருக்கு பதில் மம்மூட்டியை போட்டு தமிழ்/மலையாளத்தில் ரிலீஸ் செய்திருந்தால் இன்னும் மிகப் பெரிய வெற்றி பெற்றிருக்கும். ஹிந்தியில் தற்போது எவ்வளவு பெரிய வெற்றி அடையும் என்று தெரியவில்லை ஆனால் மம்மூட்டி நடித்திருந்தால் மலையாளத்தில் இந்த படத்தை கொண்டாடியிருப்பார்கள் என்பது உண்மை. நானே படேகருக்கு நிழல்கள் ரவியின் குரல் அற்புதமாய் பொருந்தியிருப்பது படத்திற்கு மிகப் பெரிய பிளஸ்.

வாரணம் ஆயிரம் – a perfect autobiography. படம் ரொம்ப ஸ்லொ என்று பரவலாக சொல்லப்படுகிறது, பயோகிராபி என்று வந்துவிட்டாலே, மெதுவாக சொன்னால்தான் கதையோடு பயணிக்கிற ஒரு அனுபவம் கிட்டும். அருமையான படம். சூரியா ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். ரீனா, ஆராதனா, மாயா வரிசையில், இந்தப் படத்தில் ஹீரோயின் பெயர் மேக்னா. எங்கிருந்தது தான் இப்படி அழகான பெயர்(பிகர்)களை கௌதம் பிடிக்கிறாரோ.

திண்டுக்கல் சாரதி: சன் டி வியின் தொடர் விளம்பரத்தால், சுமாரான படம் சூப்பர் படமாக மாறியிருக்கிறது. பெரிதாக எந்த குறையுமில்லை. நல்ல கதை, அதற்கேற்ற ஆர்டிஸ்ட். வடிவேலுவுக்கு ஒரு புலிக்கேசி போல் கருணாசுக்கு சாரதி. விவேக்குடைய சொல்லி அடிப்பேன் தான் எப்போது வரும்முன்னு தெரியல.

திருவண்ணாமலை: ஏழுமலை, மருதமலை வரிசையில் அர்ஜுனுக்கு வந்துள்ள படம் திருவண்ணாமலை. இரட்டை வேடத்தில் அர்ஜுன். செகண்ட் ஹீரோவாக பேரரசு!. அர்ஜுனைக் காட்டிலும் பேரரசுவுக்கே அதிக பஞ்ச் வசனங்கள். வில்லன்கள் அனைவரும் அருமையாக கத்துகிறார்கள். பாதி படத்திற்கு மேல் செம்ம போர். எப்போது படம் முடியுமென்று தோன ஆரம்பித்துவிட்டது. பேரரசுவின் அடுத்த படம் திருத்தணி, பரத் ஹீரோவாம், போதுமடா சாமி.

சிலம்பாட்டம் : கதை பழசாக இருந்தாலும், போர் அடிக்காமல் போகிறது. இரட்டை வேடத்தில் சிம்பு. ஐயர் வேடம் பொருந்தாமல் போனாலும், கிராமத்து கேரக்டர் ‘தமிழரசு’ ரொம்ப நல்லா பொருந்தியிருக்கு. யுவனின் இசை, ஆக்டின், செண்டிமெண்ட், சந்தானம் காமெடி, பில்லா கெட்- அப், சானாகான் கிளாமர், சினேகா மாமி என சிலம்பாட்டம் எல்லாம் கலந்த காக்டெயில்.

கொம்பு: கரண், விந்தியா நடித்திருக்கும் படம் (எப்போ வந்ததுனு எல்லாம் என்னைக் கேக்கக் கூடாது). வில்லன் தன்னுடைய பால் பண்ணை வியாபாரம் நன்றாக நடக்க வேண்டும் என்பதற்காக விந்தியாவின் பால் பண்ணையில் பல குழப்பங்களை விளைவிப்பார். வில்லனின் சதியை முறியடித்து பால் பண்ணையை வெற்றிகரமாக நடத்த வித்தியாவிற்கு கரண் உதவுவர். பிளாஷ்பேக்கில்   கரண் மும்பையை கலக்கிய தாதாவம். இப்படி போகுது கதை. ஒரு அ(பி)ட்டு படம் பார்த்த எபெக்ட்.

—-
Nilofer Anbarasu
http://kick-off.blogspot.com

ஜனவரி 12, 2009

வில்லு விமர்சனம்

படம் தொடங்கியதும் ஒரே விசில் சத்தம், அப்புறமாக எப்படா விஜய் வருவார் வருவார் என்று ஏங்கி இருந்த போது இறுதியாக விசய் வந்து சேர்ந்தார். என்ன கொடுமை சார், ஹூரோ அறிமுகம், விஜய் சேலை போர்த்திக்கொண்டு அறிமுகமாகின்றார். ஏதோ அவரை கற்பழிப்பது போல வில்லனுகள் துகிலுரிகின்றார்கள். அப்பவே எழுந்து போய் விடலாமா என்று இருந்த்து, என்றாலும் கொடுத்த 300 ரூபா இழுத்து உட்கார வைத்தது.

படத்தில் விஜயை காட்டி அதில் ஒரு பிளாஷ் பேக் வேற, மகன் விஜயின் அநியாயம் தாங்காமல் தவிக்கும் நேரத்தில் அப்பா விசயையும் காட்டி நோகடித்தார்கள். ஏதோ பல்லிக்கு மீசை வைத்தது போல ஒரு உருவத்துடன் வருகின்றார் விஜய். அதில் உச்சகட்டம் அவர் இராணுவ அதிகாரியாம். அவர் எந்த ஆபரேஷன் போனாலும் தனியாத்தான் போவாராம். இரண்டு கையிலயும் இரண்டு A.K. 47 வைத்து சுடுவாராம். பாக்கிறவன் கேனை என்டா எருமையும் ஏரோபிளேன் ஓட்டும்.

மிகுதி வில்லு விமர்சனம்

ஜனவரி 11, 2009

Valkyrie – ஹிட்லருக்கு எதிரான ராணுவ கிளர்ச்சி

இரண்டாம் உலகப் போரில் ஹிட்லருடைய பங்கு என்ன என்று நான் சொல்லத் தேவையில்லை. ஹிட்லர் உலகையே ஆள நினைத்த நேரம், அவரது ராணுவத்தில் இருந்த சில உயர் அதிகாரிகள் அவரை கொன்றுவிட்டு ஆட்சியை பிடிக்க செய்யும் ஒரு முயற்சிதான் valkyrie (வால்க்ரி). நடந்த ஒரு உண்மைச்சம்பவம், ஒரு பெயர் கூட மாற்றமில்லாமல் அப்படியே படமாக வந்திருக்கிறது. இது போல் இராணுவம் ஆட்சியை பிடிக்க முயல்வதை coup attempt என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். பாகிஸ்தானில் முஷரப் ஆட்சியை பிடித்தது இந்த வகைதான்.ஹிட்லருக்கு மிக நெருக்கமாக இருக்கும் அதிகாரிகளில் ஒரு பத்து பதினைந்து பேர் சேர்ந்து 1944 july 20 அன்று அவரை கொல்ல செய்யும் முயற்சிதான் படம். ராணுவக் கிளர்ச்சிக்கு தலைமை தாங்கும் Colonel Stauffenberg கேரக்டரில் நடித்திருக்கிறார் Tom Cruise. உலகப் போர் நடந்துகொண்டிருந்த சமயம், திடீரென ஜெர்மனி நகரங்களின் மேல் குண்டு விழுந்து சேதம் ஏற்ப்பட்டால், அதை சமாளிக்கும் பொருட்டு கொண்டுவந்த சட்டம் தான் ‘Valkyrie’ அல்லது operation Valkyrie.

பதவிக்காக நடக்கும் மற்ற ராணுவப் புரட்சி போல் இல்லாமல், ஒரு சர்வாதிகாரியின் பிடியில் இருந்து நாட்டை மற்றும் ராணுவ வீரர்களை காப்பாற்றும் பொருட்டு நடந்த ஒரு ராணுவப் புரட்சி இது. ஜெர்மனியின் மீது திடீர் குண்டு மழை பொழிந்தால், நிலைமையை சமாளிக்க உதவும் சட்டமான Valkyrieயில் சில மாற்றங்களை கொண்டுவருவார் Staffenburg. இந்த சட்டத்தின் படி திடீர் தாக்குதலில் ஹிட்லர் உயிர் இழந்தால், நாட்டின் மொத்த கட்டுப்பாட்டையும் ஜெர்மனியின் reserve army தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும். ஹிட்லர் செத்தால் கூட அவருடைய கையெழுத்து இல்லாமல் நாட்டில் எதுவும் நடக்காது என்று தெரிந்தது, அவரிடமே அந்த சட்டத்தில் கையெழுத்து வாங்கி ஒப்புதலும் பெற்றுவிடுகிறார் Stauffenberg.

பாகிஸ்தான் போன்ற ஜனநாயக நாட்டில் ஏற்ப்படும் ராணுவக் கிளர்ச்சிக்கும், ஹிட்லர் போன்ற சர்வாதிகாரியின் கீழ் உள்ள நாட்டில் நடக்கும் ராணுவப் புரட்சிக்கும் நிறைய வேறுபாடு உண்டு. ஜனநாயக நாட்டில் இது போன்ற திட்டம் தோல்வி அடைந்தால், நாட்டை விட்டு வெளியேற்றப்படும் வாய்ப்பு உண்டு, ஆனால் சர்வாதிகார நாட்டில் மரணம்தான். அதுவும் உடனே.

ஒரு leather suitcaseல் pencil detanator எடுத்துக் கொண்டு Wolf’s Lairக்கு செல்வார் Stauffenberg. Wolf’s lair – இது தான் ஹிட்லருடைய ராணுவத் தலைமையகம், முக்கிய கூட்டங்கள், முடிவுகள் எல்லாம் இங்கேதான் எடுக்கப்படும். Bunker என்று சொல்லப்படும் பதுங்குக் குழிக்குள் தான் கூட்டம் நடைபெறும். Wolf’s Lairக்குள் Staffenburg செல்லும் காட்சி படமாக்கப்பட்டிருக்கும் விதம் பரபரப்பின் உச்சம். Pencil detonator முனையை கத்தியால் வெட்டிவிட்டு அதை leather suitecaseல் வைத்துக்கொண்டு அந்த கூட்டத்தில் கலந்துகொள்வார் Stauffenberg. அது வெடிப்பதற்கு 10 நிமிடங்கள் முன்பாக suitecase அங்கேயே வைத்து விட்டு தான் மட்டும் தன் சகா Haeftenனுடன் வெளியேறிவிடுவார். எதிர் பார்த்தது போல் குண்டு வெடிக்கும். சிறிது நேரம் தாமதித்தாலும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முடியாது என்பதை உணர்ந்து Valkyri அமுல்படுத்த உத்தரவிடுவார் Staffenburg. முதலில் தயக்கம் காட்டினாலும் பின்னர் வேறு வழியின்றி Olbricht, operation Valkyre அமுல்படுத்துவார்.

பொதுவாக ராணுவக் கிளர்ச்சி ஏற்படும்போது என்னென்ன அரங்கேறுமோ அவ்வளவும் நடக்கும். அரசுக்கு விசுவாசமான அதிகாரிகள் சிலர் கைது செய்யப்படுவார்கள். ரேடியோ, நாளிதழ் போன்ற ஊடகங்களை இராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும். எல்லாம் Stauffenberg நினைத்த மாதிரி போய்க்கொண்டிருக்கும் . இந்த நேரத்தில் இன்னொரு அதிகாரியான General Friedrich Fromm, Wolf’s lair தொடர்பு கொண்டு விசாரிப்பார், எதிர் முனையில் “Fuhrer is fine. Another failure attempt” என்று பதில் வரும். அத்தோடு இன்னும் சிறிது நேரத்தில் ரேடியோவில் ஹிட்லர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்றும் அறிவிப்பு வரும். கண்முன் நடந்த குண்டுவெடிப்பு எப்படி பொய்யாகும் என்ற குழப்பத்தில் Staffenburg இருக்கும் போது, கிளர்ச்சியாளர்களை பிடிக்க General Fromm மறைமுகமாக உத்தரவிடுவார். அனைவரும் கைது செய்யப்பட்டு துப்பாக்கி முனையில் நிற்க வைத்து சுட்டுக் கொள்ளப்படுவார்கள். இத்துடன் படம் முடியும். அதன் பிறகு, ஹிட்லர் 8 மாதங்கள் கழித்து தற்கொலை செய்து கொண்டதாகவும், Staffenburgயுடைய மனைவி 2002ல் இறந்ததாகவும் screenனில் போடுகிறார்கள்.

நடந்து முடிந்த வரலாரை படமாக எடுக்கும்போது எந்த பகுதி வேண்டும் என்பதைவிட எந்தப் பகுதி வேண்டாம் என்பதில் மிகத் தெளிவாக இருக்கவேண்டும். ஒரு சிறு காட்சி கூட கதையின் மொத்த சுவாரஸ்யத்தை குறைத்துவிட வாய்ப்புண்டு. இது போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்கள் பார்வையாளர்களுக்கு முன்பே தெரியும், அப்படி கதை தெரிந்தவர்களைக் கூட ஒரு நிமிடம் அசையவிடாமல் படம் பார்க்க வைப்பது ரொம்ப கடினம். இது போன்ற அனைத்து விஷயங்களையும் மனதில்கொண்டு அற்புதமாக இயக்கியிருக்கிறார் Bryan Singer. அருமையான படம்.

—-
Nilofer Anbarasu
http://kick-off.blogspot.com

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.