திரை விமர்சனம்

ஜனவரி 26, 2009

மூன்று முடிச்சு – சரியான வில்லன் மூஞ்சி

Filed under: தமிழ்த் திரைப்படம் — Nilofer Anbarasu @ 5:36 முப
ரஜினி என்றாலே ஸ்டைல் என்றான பிறகு அவர் நடித்த படங்களில் ஏதாவது ஒரு வகை ஸ்டைல் ரசிகர்களுக்காக திணிக்கப்படுவதுண்டு. ஆரம்ப கால படங்களில் ஸ்டைல் என்ற முத்திரை அவர் மீது விழுவதற்கு முன்பு வந்த படங்களில் குறிப்பிடத்தகுந்தவை இந்த மூன்று முடிச்சு. இந்த படத்தில் ரஜினியினுடைய எல்லா மேனரிசமும் ஒரு வகை ஸ்டைல்தான். ஸ்டைல் என்று சொல்லத்தெரியாமல் மக்கள் அவரை ரசிக்கத் தொடங்கிய காலம். கமலும் ஸ்ரீதேவியும் ஒருவரை ஒருவர் காதலிக்க, ரஜினி ஸ்ரீதேவியை ஒருதலையாய் காதலிப்பார். சாதாரண முக்கோண காதல் கதை போல் ஆரம்பித்தாலும், ரஜினியின் கோரமுகம் வெளிப்படும் போது சற்றே வேகமெடுக்கிறது கதை. வில்லனான ரஜினியே படம் முழுவதும் பூரணமாக நிறைந்திருக்கிறார். வில்லனுக்கு முக்கியத்துவம் கொடுத்து அப்போது எடுக்கப்பட்டிருந்தாலும் இப்போது பார்க்கும்போது ஏதோ ஆன்டி-ஹீரோ சப்ஜெக்ட் போலத்தான் தெரிகிறது. ரஜினி மட்டும் ஹீரோவாக நடிக்காமல் வில்லனாகவே தொடர்ந்திருந்தால் சூப்பர்ஸ்டார் ஆகியிருக்கமாட்டார் ஆனால் நிச்சயம் சூப்பர் வில்லனாகியிருப்பார்.தொடர்ந்து தப்பு செய்யும் வில்லன் போல் இல்லாமல், மூர்கமாக தவறு செய்துவிட்டு பின்னர் மனசாட்சிக்கு பயந்து ஓடி ஒளியும் வில்லன். கடந்த 15 வருடங்களாக ரஜினிக்காகவே எழுதிய வசனங்களை கேட்டு பழகிப்போன நமக்கு, சாதரண ரஜினிக்காக, பிரசாத் என்கின்ற கதாபாத்திரத்துக்காக எழுதிய வசனங்களை கேட்கும் போது ரொம்பவே இயல்பாய் இருக்கிறது. ஒரு காட்சியில், ரஜினியின் தந்தை பிரசாத்தை பத்தி என்ன நினைக்கிறன்னு கேட்பார், அதற்க்கு ஸ்ரீதேவி “சரியான வில்லன் மூஞ்சி” என்பார். ஸ்ரீதேவியை கல்யாணம் செய்யும் ஆசையில் ரஜினி சுற்றிவர, பாலச்சந்தரின் சேட்டையால் ரஜினியின் அப்பாவும் ஸ்ரீதேவியும் கல்யாணம் செய்துகொள்ள, ஸ்ரீதேவிக்கு தலைமகனாகிவிடுவார் ரஜினி. இந்த படத்தின் மொத்த கதையை நம் கவியரசர் வெறும் ஆறு வரியில் அழகாய் சொல்லியிருப்பார். இந்த ஆறு வரியை, இரண்டு இரண்டு வரிகளாக முக்கிய கதாபாத்திரங்களான கமல், ரஜினி, ஸ்ரீதேவி பாடும்படி படமாக்கியிருப்பார் கே.பி. படத்தில் வெவ்வேறு இடங்களில் இந்த வரிகள் வரும்.

கமல்: வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
ரஜினி: மணவினைகள் யாருடனோ மாயவனின் விதிவகைகள்
விதிவகையை முடிவு செய்யும் வசந்த கால நிரலைகள்
ஸ்ரீதேவி: நிரலைகள் முடிந்ததெல்லாம் நெஞ்சில்வந்த நினைவலைகள்
நினைவலைகள் முடிந்தயிடம் தாய்மகனாம் சூழ்நிலைகள்

ஒரு காட்சியில் ரஜினியை பார்த்து ஸ்ரீதேவி “போடா கண்ணா போ” என்பார். இதுவே இன்னைக்கு ஒரு கதாநாயகி ரஜினியை பார்த்து சொல்லமுடியுமா? இப்படி அவ்வப்போது பல வசனங்கள் நம்மை நிகழ்கால சூப்பர்ஸ்டார் ரஜினியோடு ஒப்பிட்டு பார்க்க வைக்கிறது. இரண்டாண்டுகளுக்கு முன்பு வந்த பொய் படத்தில் விதிக்கு உருவம் கொடுத்திருப்பார் கே.பி. அதை சற்றே வித்தியாசமாக உணர்ந்தேன். 1976ல் வந்த இந்த படத்தை பார்த்த பிறகுதான் தெரிந்தது, இதெல்லாம் கே.பிக்கு ஜுஜுபி என்று. இந்த படத்தில் மனசாச்சிக்கு உருவம் கொடுத்திருக்கிறார். ரஜினி ஒவ்வொரு முறை தப்பு செய்த்தபிறகும், மனசாச்சி வந்து கேள்விகேட்கும், தவறை எல்லாம் வரவு வைத்துக்கொண்டே வரும். மனசாச்சிக்கு பைத்தியக்காரன் போன்ற ஒரு தோற்றத்தை கொடுத்திருப்பார். தவறு செய்த பிறகு ஒவ்வொரு முறையும் வந்து கேள்விகேட்கும் மனசாச்சி, ஏன் தப்பு செய்வதற்கு முன்பு வந்து எச்சரிக்காதா என்ற நம் நியாயமான கேள்விக்கு படத்தின் கடைசியில்

விதைக்கின்ற வேளையிலே விளங்காத மனசாட்சி…
விளைவுக்குப் பின்னாலே விரைந்துவரும் மனசாட்சி….
தனக்காகத் தன்னுடனே போராடும் மனசாட்சி….
தவறுபவன் கண்களுக்குப் பைத்தியந்தான் மனசாட்சி.

இந்த நாலு வரியில் பதில் சொல்லுகிறார். வசனங்கள் ஒவ்வொன்றும் அக்மார்க் கே.பி ரகம். ஸ்ரீதேவியின் அக்காவாக வரும் Y.விஜயா ஒரு துணை நடிகை, கமலுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, இயக்குனர் தூக்குப் போடும் காட்சியில் நடிக்க அழைப்பார், உடனே விஜயா கமலை பார்த்து “நா தூக்குல தொங்கிட்டு அப்புறமா வீட்டுக்கு வரேன். நீங்க போங்க.” என்பார். கல்யாணத்துக்கு வயது ஒரு தடை இல்லை என்று ஸ்ரீதேவி சொல்லும்போது அங்கு வரும்  ஒரு வயதானவர் “கீட்ஸ் சொல்லல, ஷெல்லி சொல்லல, நம்மூர் செல்வி சொல்லிட்டா” என்பார். இது போன்ற வசனங்களை கேட்கும்போது நம்மையும் அறியாமல் ஒரு புன்முறுவல் உதடுகளில் வந்து மறையும். ரஜினியின் அப்பாவாக ஒருவர் நடித்திருக்கிறார், பல படங்களில் பார்த்திருந்தாலும் பெயர் தெரியவில்லை. அந்த கதாபாத்திரத்துக்கு கணக்கச்சிதமாய் பொருந்துகிறார். அப்படியொரு நிதானமான நடிப்பு.

இந்த படத்தில் ரஜினியினுடைய நடிப்பை பார்த்த நமக்கு, சூப்பர்ஸ்டார் என்ற வட்டத்துக்குள் வந்த பிறகு ரஜினி சிரத்தை எடுத்து நடிப்பத்தை தவிர்த்து விட்டாரா? அல்லது இயக்குனர்கள் அவருடைய நடிப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லையா? என்ற சந்தேகம் வருகிறது. காரணம் இந்த படத்தில் அப்படியொரு அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ரஜினி.

—-
Nilofer Anbarasu
http://kick-off.blogspot.com

2 பின்னூட்டங்கள் »

  1. இந்தப் படம் ரஜனிக்கும் ஸ்ரீதேவிக்கும் முதற் படம் என்று நினைக்கின்றேன். ரஜனிக்கு மட்டுமல்ல, ஸ்ரீதேவிக்கும் கூட இதைவிட நன்றாக நடிக்க வாய்ப்புக் கிடைத்ததோ தெரியாது. பிரபல்யத்துக்கு வருவதற்கு முன்னர், ரஜனியின் நடிப்புத்திறனை வெளிக்கொண்டுவந்த இன்னொரு படம் “ஆறில் இருந்து அறுபதுவரை.” சூப்பர் ஸ்டார் ஆன பிறகு ரஜனிக்கு நடிக்கவாய்ப்புக் கிடைக்காததற்கு ரசிகர்களையே குற்றம் சொல்லவேண்டும். நீங்களே மேலே சொன்னதுபோல ரஜனியை “போடா கண்ணா போ” என்று சொல்வதற்குக் கூட இப்போது ரசிகர்கள் அனுமதிக்காத போது, எவ்வாறு நடிப்புத்திறனை வெளிக்காட்டமுடியும். ரஜனி சூப்பர் ஸ்டார் ஆன பிறகு வந்த படங்களில் அவரது நடிப்புத்திறனிற்கு சற்றே தீனி போட்டபடமென்றால் “தளபதி” என்றுதான் சொல்லவேண்டும். அதற்காக மணிரத்தினத்தை நிச்சயம் பாராட்டவேண்டும் — சூப்பர் ஸ்டார் இமேஜையும் குழப்பாமல், ரஜனியின் நடிப்புத்திறனுக்கும் தீனி கொடுத்திருக்கின்றார்.

    பின்னூட்டம் by bmmaran — பிப்ரவரி 5, 2009 @ 10:02 பிப | மறுமொழி

  2. Rajani kanth’s 1st movie is ”Apoorva rahangal’. not ‘Moonru mudichchu’

    பின்னூட்டம் by thayalan — திசெம்பர் 25, 2012 @ 5:08 பிப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: