திரை விமர்சனம்

பிப்ரவரி 24, 2009

Australia (2008): அழகான ஒரு அவுஸ்ரேலியப் பயணம்.

அவுஸ்ரேலியாவின் சுற்றுலாத்துறைக்கு ஒரு விளம்பரமாகக் கருதப்பட்ட/கருதப்படும் ஒரு படம். படத்தைப் பார்ப்பவர்கள் அவுஸ்ரேலியாவின் இயற்கை அழகில் மயங்கிவிடுவார்கள் என்று சொல்லப் பட்டது. என்றாலும் எனக்கு அப்படி மயக்கம் ஒன்றும் பெரிதாக வரவில்லை. பெரும்பாலும அவுஸ்ரேலிய பாலைவனப் பரப்பிலேயே படம் சுற்றி சுற்றி ஓடுகின்றது. படத்தின் கதையைப் பார்த்தால் இரண்டு புத்தகங்களை ஒன்றன் பின் ஒன்றாக படித்தது போல் அமைந்திருக்கின்றது.

படம் இரண்டாம் உலகயுத்த ஆரம்ப காலத்தில் நடைபெறுவதாக எடுக்கப் பட்டிருக்கின்றது. படத்தின் முதற் பகுதி இங்கிலாந்திலிருந்து அவுஸ்ரேலியாவுக்கு வருகின்ற Lady Sarah Ashley’ஐ (Nicole Kidman) ஒட்டிப் போகின்றது. அவுஸ்ரேலியாவில் இறைச்சிக்கான மாட்டுப் பண்ணையை இயக்கிவருகின்ற தனது கணவரின் பண நிலவரம் மோசமாகி வருகின்றது என்பதை அறியும் Sarah, அந்தப் பண்ணையை விற்றுவிட்டு இங்கிலாந்து திரும்ப கணவரை வைப்புறுத்தும் நோக்கத்தோடு அவுஸ்ரேலியா பயணமாகின்றார். இவர் அவுஸ்ரேலியாவின் ஒதுக்குப் புறமான இடத்தில் இருக்கும் பண்ணையை வந்தடைவதற்கு சற்று முதலாக இவரின் கணவர் கொலை செய்யப் படுகின்றார். சாட்சியங்கள் அந்தக் கொலைக்கு அவுஸ்ரேலிய ஆதிவாசிகளின் தலைவர்தான் காரணம் என்று காட்டினாலும், உண்மையில் அந்தக் கொலையைச் செய்தது போட்டிப் பண்ணையைச் சேர்ந்தவர்கள்தான் என்று அறிகின்றார் Sarah. நிர்வாகிக்க ஆணின் தலைமையின்றி Sarah’வின் பண்ணையை கைவிடும்படியான நிர்ப்பந்தம். ஆனால், பண்ணையை விற்பதற்கு கண்வரை வைப்புறுத்துவதற்கு அவுஸ்ரேலியா வந்த Sarah, அந்த பண்ணையை கைவிடுவதில்லை என தீர்மானிக்கின்றார். அதற்கு இரு காரணங்கள்: ஒன்று, கணவரை கொலை செய்தவர்களிடமேயே பணிந்து போகக் கூடாது என்ற ஒரு வீறாப்பு; மற்றது, பண்ணையில் வசித்து வரும் ஆதிவாசி சிறுவன் Nullah’வின் எதிர்காலத்தை பாதுகாக்கும் அவா (அப்போதைய காலத்தில் ஆதிவாசிச் சிறுவர்களை பெற்றோரிடமிருந்தும், சொந்தங்களிடமிருந்தும் பிரித்து, வலுக்கட்டாயமாக கத்தோலிக்க முகாமில் சேர்த்து விடும் பழக்கம் இருந்தது.) பண்ணையைக் காப்பாற்ற ஒரேயொரு வழி, இறைச்சிக்குத் தயாராக இருக்கும் பண்ணையின் மாட்டுகூட்டத்தை பண்ணையில் இருந்து நகரத்திற்கு ஓட்டிச்சென்று அங்கிருக்கும் இங்கிலாந்து இராணுவத்திற்கு விற்பனை செய்வது. பிரச்சனை என்னவென்றால், மாட்டுக்கூட்டமென்றால் சும்மா பத்து பதினைந்து என்று இல்லை 1,500 மாடுகள்! தவிர பண்ணையிலிருந்து நகரத்திற்கு செல்வதற்கு அவுஸ்ரேலியாவின் பாலைவனாந்தரங்களைக் கடந்து செல்ல வேண்டும். பண்ணையில் துணைக்கு ஆட்களும் போதுமானதாக இல்லை. இவ்வளவு பிரச்சனைகளின் மத்தியிலும் மனந்தளராத Sarah, மாட்டுப்பட்டி ஓட்டுவதை தொழிலாகக் கொண்ட Drover’இன் (Hugh Jackman) துணையுடன் அந்த கடும் பயணத்தில் இறங்குகின்றார். இந்தப் பயணத்தில் பல்வேறு சவால்களையும் துயரங்களையும் சந்தித்தாலும் வெற்றிகரமாக தனது முயற்சியை நிறைவேற்றுகின்றார் Sarah. தவிர அந்தப் பயணத்தின்போது அவுஸ்ரேலியாவின் மீதிலும், Drover’இன் மீதிலும் காதல் வசப்படுகின்றார். கூடவே அந்த ஆதிவாசிச் சிறுவன் Nullah’வை கிட்டத்தட்ட தத்தெடுத்துக்கொள்கின்றார். இவரது பயணத்தின் வெற்றியால் கணவரின் பண்ணை இவரின் கைக்கு வந்து விட, அவுஸ்ரேலியாவில் பல்வேறு பற்றுக்களை ஏற்படுத்திக் கொள்கின்ற Sarah அங்கேயே தங்கி விடத்தீர்மானிக்கின்றார்.

படத்தி இரண்டாம் பகுதி, Nullah’வை அதிகாரிகளின் வலையிலிந்து காப்பாற்றி தன்னோடு வைத்துக்கொள்ள Sarah எதிர் நோக்கும் சவால்கள் பற்றியது. பண்ணையை தக்க வைத்துக் கொள்ள Sarah எடுத்துக்கொண்ட முயற்சிகள் வெற்றியில் முடிந்து விட, போட்டிப் பண்ணையை சேர்ந்தவர்கள் தமது சூழ்ச்சியை Nullah’வினூடாக செயற்படுத்த தீர்மானிக்கின்றார்கள். ஒழித்து ஒழித்து வைத்திருக்கும் Sarah’விடமிருந்து Nullah’வை கடத்தி கத்தோலிக்க அதிகாரிகளின் கையில் சேர்த்து விடுகின்றார்கள் போட்டிப் பண்ணைக்காரர்கள். இதனால் Nullah அவுஸ்ரேலியாவிலிருந்து தள்ளியிருக்கும் ஒரு சிறு தீவிலிருக்கும் கத்தோலிக்கப் பள்ளியில் அனுப்பிவைக்கப் படுகின்றான். இதே சமயம், இரண்டாம் உலக யுத்தத்திற்கான ஏற்பாடுகள் அவுஸ்ரேலியாவிலும் பெருக்கெடுக்க இராணுவத்திற்கு உதவுவதற்காக பிரிந்து சென்றுவிடுகின்றார் Drover. துணையின்றி தனித்திருக்கும் Sarah’விடம், Nullah’வைக் மீண்டும் காணவேண்டும் என்றால் பண்ணையை எழுதித்தா என்று நிற்கின்றார்கள் போட்டிப் பண்ணைக்காரர்கள். Sarah அதற்கு தயாரான நிலையில் உலக யுத்ததின் முழுவிகாரமும் அவுஸ்ரேலியாவையும் தொடுகின்றது — எங்கும் ஜப்பான் நாட்டின் கொடூரக் குண்டுவீச்சு என்று காலம் மாறிவிட்ட நிலையில் Sarah, Drover, Nullah மூவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் அறியமுடியாமல், சேர்வதற்கான வழியும் தெரியாமல் திண்டாடுகின்றார்கள். இவர்கள் இணைகின்றார்களா இல்லையா என்பது மிகுதிக் கதை.

இருவதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அவுஸ்ரேலியாவின் நிலைமை படம் அழகாக எடுத்துக் காட்டுகின்றது. அந்த மாட்டு மந்தையை அவரிகள் அவுஸ்ரேலியாவின் குறுக்காக ஓட்டிச்செல்லும் போது அவுஸ்ரேலியாவின் வித்தியாசமான அழகை ரசிக்கவும் வாய்ப்புக் கிடைக்கின்றது. என்றாலும் கதையை சொல்லும் விதத்தில் எங்கேயோ ஒரு குறைபாடு. படம் பெரும்பாலும் Nullah’வின் பின்னணி விமர்சனத்தோடு போகின்றது. சற்றே நகைச்சுவையுடன் செல்லும் படத்தின் முற்பகுதிக்கு அது பொருத்தமாக இருந்தாலும், உணர்ச்சிகள் கொதிக்கின்ற பின்பாகத்திற்கு அது பொருந்தவில்லை. அந்த இரு பாக-கதையமைப்பும் தேவைதானோ என்று இருக்கின்றது (படம் தமிழ்ப் படம் போல் 2.45 மணித்தியாலம் நீளம்!) Special effect’உம் (படத்தில் எக்கச் சக்கம்) தற்போதைய ஹாலிவூட் தராதரத்தில் இல்லை.

குறைகள் இருந்தாலும் அலுப்பில்லாமல் போகின்ற படம். Nicole Kidman’தான் படத்தின் மூலக்கதா பாத்திரம் என்றாலும், Hugh Jackman வரும் பாகத்தில் எல்லாம் திரையை முற்றுமுழுதாக கொள்ளை கொண்டு சென்று விடுகின்றார். அந்த பாரிய குண்டு வீச்சின் பிறகு தனது கறுப்பின நண்பரோடு உள்ளூர்த் தவறணையில் சாராயம் அருந்த முற்படு காட்சியில் நடிப்பின் உச்சத்தைத் தொடுகின்றார். பொழுது போக்கிற்காக தாராளமாகப் பார்க்கலாம்.

“Australia” IMDB இணைப்பு

பிப்ரவரி 19, 2009

City of Ember (2008): உலகைத் தொலைத்த பின் 200 ஆண்டுகளிற்குப் பிறகு…

பூவுலகம் போன்ற கற்பனை உலகம் ஒன்றில் நடப்பதாக அமைக்கப்பட்டிருக்கும் கதை — அது எமது பூமியில் நடக்கும் கதைதான் என்று வாதிப்பதற்கும் சாத்தியமுண்டு. ஒரு காலப்பகுதியில் உலகத்தின் வெளிப்பரப்பு மனித வாழ்க்கைக்கு தகுதியில்லாது போய்விடுகின்றது. அதன் காரணமாக பாதாள நகரமொன்றை மனிதர்கள் உருவாக்குகின்றார்கள். இது மின்சாரம் போன்ற, ember என அழைக்கப்படும், ஒரு சக்தியினால் உயிரூட்டப்படுகின்றது. இந்த “city of ember” நகரத்திலிருந்து மீள உலகின் மேற்பரப்புக்கு வரும் வழியை பொதுமக்களிடமிருந்து மறைத்துவிடுகின்றார்கள் அவ்வுலகின் அதிகாரிகள்; அந்த இரகசியம் ஒரு பெட்டியிலிடப்பட்டு மூடப்பட்டு “city of ember”‘இன் நகரக் ஆளுணர்கள் ஊடாக பரம்பரை பரம்பரையாக பாதுகாக்கப் பட்டு வருகின்றது. இந்த இரசியத்தை தொடர்ந்து பாதுகாக்கும் விதமாக அந்த பெட்டியும் விசேடமாக வடிவமைக்கப் பட்டிருக்கின்றது — அதை யாராலும் திறக்க முடியாது, ஆனால் 200 ஆண்டுகளின் பின்னர் அது தானாகவே திறக்கும்.

வருடங்கள் உருண்டோட, city of ember நகரவாசிகள் வெளியுலக சிந்தனையையே மறந்து வாழத்தொடங்குகின்றார்கள். தவிர நகர எல்லையை தாண்ட முயற்சிப்பது தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்படுகின்றது. செம்மறியாட்டு வாழ்க்கை போல மக்களின் வாழ்க்கை — உரிய வயதுக்கு வந்தபின்னர் வாலிவர்களிற்கான (ஆண்களும் பெண்களும்) வேலை குலுக்கல் சீட்டிளுப்பு மூலம் தெரிவு செய்யப்படுகின்றது. சுய விருப்பங்கள் பற்றியோ, புது எண்ணப்பாடுகள் பற்றியோ சிந்தனையின்றி வாழ்க்கை சென்றுகொண்டிருக்கின்றது. இவ்வாறு நூற்றாண்டுகள் ஓடிவிட, பரம்பரை பரம்பரையாக வந்துகொண்டிருந்த நகரக் ஆளுணர்கள் வம்சம் குறித்த ஒரு ஆளுணரின் அகால மரணத்தினால் முறிந்துவிடுகின்றது; அந்த மரணத்துடன் city of ember’ஐ விட்டு வெளியேறும் இரகசியத்தைக் கொண்ட பெட்டியும் மறக்கப்பட்டு பரணையில் இடப்பட்டு தூசு கட்டத்தொடங்கி விடுகின்றது. நகரத்தின் ஆளுமை இப்போது ஒரு சுய நலக்காரணான Cole’ன் (Bill Murray) கையில் வந்து விட, 200 ஆண்டு காலம் கழியும் தருவாயில் அந்த இரகசியப் பெட்டி திறந்து கொள்ளும்போதிலும் அதை கவனிக்க எவருமில்லை.

இவ்வளவு கதையும் படத்தின் ஒரு சிறு முன்பகுதி. படத்தின் பிரதான கதை பருவத்துக்கு வரும் இரு வாலிபர்களை சுற்றி அமைகின்றது. Lina (Saorise Ronan) முறிந்து விட்ட நகர ஆளுணர் பரம்பரையில் பிறந்த ஒரு துடிப்பான பெண்; இவளின் நண்பன் Doon (Harry Treadaway). இவர்கள் வேலை செய்வதற்கான பிராயத்தை அடையும் தருவாயில் நகரத்தின் வாழ்க்கைத்தரம் கணிசமான அளவில் சீர் கெட்டுப் போகத் தொடங்கிவிடுகின்றது. Ember’ஐ உற்பத்தி செய்யும் இயந்திரம் அடிக்கடி செயலிழந்து போக, நகரம் அடிக்கடி இருட்டடிப்புக்கு உள்ளாகின்றது; தவிர, நகரத்தின் உணவுக் களஞ்சியமும் (தகரத்தில் அடைக்கப்பட்ட உணவுகள்தான் 200 வருடங்களாக காப்பாற்றிவருகின்றது) முடிந்து போகும் தருவாயிலுள்ளது. இவற்றையெல்லாம் பொதுமக்களிடமிந்து மறைத்து விட்டு, உணவு பண்டங்களை பதுக்கத்தொடங்குகின்றான் Cole. தங்களது நகரம் அழிவின் வாயிலில் உள்ளது என்பதை உணர்வது Lina’வும் Doon’உம் மட்டுமே.

200 வருட இரகசியத்தை கட்டிக்காத்து வந்த அந்த பெட்டியை தற்செயலாகக் கண்டு பிடிக்கின்றாள் Lina. ஆனால் அதற்குள் இருந்த ஆவணமோ காலத்தின் போக்கினால் சின்னா பின்னமாக கிழிக்கப்பட்டு இருக்கின்றது; அவற்றில் சில துண்டுகள் முற்றாகவே தொலைந்தும் போய்க் கிடக்கின்றது. தனது உய்த்தறியும் திறனினால், நகரத்தை விட்டு வெளியேறும் இரகசியம் அந்த சிதைந்து போன ஆவணத்தில்தான் இருக்கின்றது என உணரும் Lina, விடுபட்டுப் போன தகவல் துகள்களை Doon’உடன் இணைந்து திரட்டி, நகரத்திலிருந்து வெளியேறும் வழியை கண்டுபிடிக்க முயல்வது படத்தின் மிகுதிகதை. இதில் முக்கியம் என்னவெனில், “நகரத்திற்கு வெளியே” என்பது என்னவென்றே இவர்களிற்குத் தெரியாது.

சிறுவர்களிற்கான ஒரு சாகசக் கதை போன்று வெளிப்பார்வைக்குத் தெரிந்தாலும், நிறைய தத்துவ கருத்துக்கள் செறிந்து இருக்கின்றது. உதாரணத்திற்கு படத்தின் அடிப்படையில், எவ்வாறாக மனிதர்கள் முதுமை அடைய செம்மறியாடுத் தனமான மனப்பாங்கு வளர்ந்து வருகின்றது என்று காட்டப் படுகின்றது. இவ்வாறாக மேலும் பலவிடயங்களைச் சொல்லலாம்.

Atonement படத்தில் வயதிற்கு மிகுந்த நடிப்புத்திறனைக் காட்டி ஆஸ்காரிற்கு தெரிவான Saoirse Ronan’ற்கு வயதுக்கு ஏற்ற ஒரு படம். அலட்டிக் கொள்ளாமல் செய்திருக்கின்றார். சாகசக் கதையென்றாலும் அவ்வளவுதூரம் விறுவிறுப்பு இல்லாமல் இருப்பதுதான் படத்தின் ஒரு பிழை. மற்றப்படி படத்தில் ஒரு குறையும் இல்லை. அந்த வித்தியாசமான ஒரு கற்பனைப் பாதாள நகரத்தை திரைக்கு கொண்டுவந்ததில் தமது திறணை வெளிக்காட்டியிருக்கின்றார்கள் பட, மற்றும் ‘செட்’ இயக்குணர்கள். பெரும்பாலும் சிறுவர்களிற்கான படம்தான் என்றாலும் வயதுக்கு வந்தவர்களும் தாராளமாகப் பார்க்கலாம்.

“City of Ember” IMDB இணைப்பு

Meet the Robinsons(2007) – இதுவும் கடந்து போகும்

Meet the Robinsons poster

Meet the Robinsons poster

Just Keep Going – இதுதான் படத்தின் tagline. அதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி அருமையாக நியாயப்படுத்துகின்றனர் இந்த Robinsons.

தனக்கென யாருமே இல்லை என பெருந்துயரில், அனாதை இல்லத்தில் வளரும் சிறுவன்தான் நம் நாயகன். ஆனா படிப்பில் படு சுட்டி. ஒரு நாள் அறிவியல் கண்காட்சிக்காக தான் செய்யும் ஒரு சின்ன கண்டுபிடிப்பு இந்த உலகின் எதிர்காலத்தையே மாற்றியெழுதப் போகிறது என்று தெரியாமல் செல்கிறான். ஆனால், அந்த கண்டுபிடிப்பு எதிர்காலத்திலிருந்து வந்த வில்லனால் திருடிச் செல்லப்பட, திரும்பவும் உலகின் தலையெழுத்து எப்படி மாறுகிறது. அதனை நம் நாயகன் எப்படி எதிர்காலத்திற்கே சென்று சமாளிக்கிறான் என்பதுதான் கதை. சுவாரஸ்யமான மற்றொரு விஷயம், எதிர்காலத்தில் தன் சொந்த குடும்பத்தையே சந்திக்கிறான் நாயகன்.

அனிமேஷன் படங்களுக்கே உரித்தான கலர்புல் தன்மையுடன் கொஞ்சம் அதிகமாகவே science fiction கலந்து கலக்கலாகத் தந்திருக்கிறார்கள்.

இப்படத்தின் wiki தொடுப்பு

முதலில் இங்கு பதியப்பட்டது

பிப்ரவரி 18, 2009

Schindler’s List(1993) – என்பும் உரியர் பிறர்க்கு

Schindlers List

Schindlers List Poster

—————————-
வருடம் : 1993
இயக்கம் : Steven Spielberg
நடிப்பு : Liam Neeson, Ben Kingsley
மொழி : ஆங்கிலம்
—————————-

Steven Spielberg எனும் மகா கலைஞனின் பெயர் எத்தனையோ படங்களுக்காக பேசப்பட்டடிருந்தாலும், அவருக்கு முதன் முதலில் ஆஸ்கார் விருது பெற்றுத்தந்தது இந்த Schindler’s List.

Oscar Schindler எனும் ஒரு சாதாரண வியாபாரியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த புத்தகம் Schindler’s Ark. அதன் திரை வடிவமே Schindler’s list. கதையின் பின்புலம், இரண்டாம் உலகப்போரில் நடந்த யூதப் படுகொலைகள்.

Schindler ஒரு சந்தர்ப்பவாத வியாபாரி. அது வரை தோல்வியே சந்தித்து வந்த அவன், இரண்டாம் உலகப்போரை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள முனைகிறான். ராணுவத்துக்குத் தேவையான தளவாடப்பொருட்கள் செய்யும் தொழிற்சாலை ஒன்றை தொடங்குகிறான். தொழிற்சாலையில் வேலை செய்ய ‘Concentration Camp’ களுக்கு கடத்தப்படும் யூத மக்களை அழைத்துக் கொள்கிறான். அப்போதைய ஜெர்மன் சட்டப்படி யூதர்களுக்கு சம்பளம் தரத்தேவையில்லை. இவ்வாறு தன் பொருளாதார ஆதாயாத்துக்காக செய்யப்படும் Schindler’s ஒரு சிறு செய்கை அவனை ஒரு தேவனாகவும் அவன் தொழிற்சாலையை ஒரு சொர்கமாகவும் மாற்றுகின்றது.. எப்படி?

அதுதான் Schindler’s List ::வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் ஒரு ஒற்றைக் காகிதமாய் அசைகிறது…

Genocide ல் மடியவிருந்து 1600 யூதர்களை தன் உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றுகிறார் Schindler. திரைப்படத்தில் வருவதனால், ஹீரோ மாதிரி Actionல் இல்லை.. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் வியாபாரம்தான்.. எல்லாமே வியாபாரம்தான்.. Schindler ரால் காப்பாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை போரின் முடிவில் போலந்தில் மொத்தமாக எஞ்சியிருந்த யூதர்களின் எண்ணிக்கையை விட அதிகம். அன்று காப்பாற்றப்பட்டவர்களின் சந்ததியினர் இன்று, Oscar Schindler ன் கல்லறையில் அஞ்சலி செலுத்த, இரண்டாம் உலகப்போரில் மடிந்த 1.6 மில்லியன் யூதர்களுக்கு சமர்ப்பணம், என்ற வரிகளோடு மெல்லிசை படர படம் முடிவடைகிறது.. ஆனால் இப்படம் ஏற்படுத்தும் தாக்கம் நீண்ட நேரத்திற்கு நம் நெஞ்சை விட்டு அகல மறுக்கிறது..

இது சத்தியமாக Spielberg படம் என்று சொல்லவே முடியாது. Speilberg ன் அக்மார்க் முத்திரையான பர பர திரைக்கதை சுத்தமாக இல்லை. மிக மெதுவாக, மிக மிக மெதுவாக வாழ்க்கையின் போக்கிலேயே பயணிக்கிறது இத்திரைப்படம். இப்படத்தின் மிகப்பெரும் சாதனையே, எதையும் மிகைப்படுத்தாமல், அப்படியே பதிவு செய்ய முயற்சித்திருப்பதுதான். நிச்சயமாக அடுத்து வரும் பல தலைமுறைக்கு இரண்டாம் உலகப்போரைப் பற்றிய ஆவணம் இத்திரைப்படம்.

Schindler ஆக வரும் Liam Neeson-ஐ விட Ben Kingsley-யின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எத்தனை உணர்ச்சிகள் அந்த முகத்தில். ஆரம்பத்தில் தன் சொத்துக்கள் அனைத்தையும் பறித்துக்கொண்ட Schindler மீது காட்டும் காழ்ப்புணர்ச்சியாகட்டும், பின்னாளில் இருவரும் நெருங்கிய நண்பர்களாகி ராணுவமுகாமில் சந்திக்கும் காட்சியாகட்டும், இறுதியில் தன்சொத்து முழுவதும் இழந்து Schindler பிரிந்துசெல்லும் போது அவனுக்குக் கொடுக்க எதுவுமே இல்லாமல், தன் தங்கப் பல்லை பிடுங்கி அதில் ஒரு மோதிரம் செய்து பரிசளிக்கும் காட்சியாகட்டும் அனைத்திலும் வாழ்ந்திருக்கிறார் Kingsley.. அந்த மோதிரத்தில் எழுதியிருக்கும் ஹீப்ரு வாசகம்.. ” ஒரு உயிரை மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்றுபவன் இந்த உலகத்தைக் காப்பாற்றுகிறான்” . இதனை நீங்கள் ஆமோதித்தால், நிச்சயமாக இப்படத்தைப் பார்க்கவும்.

இப்படத்தில் wiki தொடுப்பு

முதலில் இங்கு பதியப்பட்டது

பிப்ரவரி 17, 2009

Body of Lies (2008): low-tech பயங்கரவாதத்தை முறியடிப்பது எப்படி?

Roger Ferris’உம் (Leonardo DiCaprio) Ed Hoffman’உம் (Russell Crowe) CIA உளவாளிகள் என்றாலும் இருவருக்கும் இடையே மடுவுக்கும் மலைக்கும் இடையிலான ஒற்றுமை — களமுனையில் நின்று, உயிரை பணயம் வைத்து ஒற்றறியும் வேலை Roger’இனது; Bluetooth தொலைபேசியுடனும், செய்மதி படங்களினுடம் அமெரிக்க சொகுசுடன் இருந்து Roger போன்ற களமுனை ஒற்றர்களிற்கு ஆணையிடும் வேலை Ed’இனது. இவர்கள் இருவரும் Al Saleem எனப்படும் இஸ்லாமிய பயங்கரவாதியொருவனை வேட்டையிடுவது படத்தின் பொதுவான கதை. படம் Roger Iraq’இல் Al Saleem பற்றிய தகவல் திரட்டுவதோடு ஆரம்பிக்கின்றது. சிலரை காவு கொடுத்தபின் Al Saleem’இன் பயங்கரவாத மையம் ஒன்று Jordan’இல் இருப்பதை அறிகின்றான் Roger. எனவே இவனை Jordan’இல் இருக்கும் CIA செயலகத்திற்கு பொறுப்பாளராக பதவியேற்றம் செய்து அனுப்பிவைக்கின்றார் Ed. அங்கு Jordan உளவுத்துறை இயக்குணர் Hani Salaam’உடன் இணைந்து செயற்படவேண்டியது அவசியம் என்பதை உணர்ந்து கொள்கின்றார் Roger. Roger’இன் களமுனை அனுபவங்கள் Jordan நாட்டு அதிகாரிகளை அணுகவேண்டிய முறையினை கற்பித்துக்கொடுக்க, Roger’இன் புதிய அணுகுமுறை Hani Salaam’ற்கு பிடித்துக்கொள்கின்றது. இவர்கள் இருவரின் ஒருங்கிய இணைப்பு பலன் கொடுக்கும் வேளையில், Ed’இன் குறுகிய நோக்கினால் வரும் தலையீடு அனைத்தையும் பாழடித்துவிடுகின்றது. இதனால் மிகவும் ஆத்திரம் அடையும் Hani Salaam, Roger’ஐ அதற்காக குற்றம் சாட்டி Jordan நாட்டிலிருந்து துரத்திவிடுகின்றார்.

Ed’உடன் மிகவும் ஆத்திரத்தில் இருந்த்தாலும், Al Saleem’ஐ கண்டுபிடிக்கவேண்டிய தேவையிருப்பதால் மீண்டும் Ed’உடன் இணைந்து செயற்படுகின்றான் Roger. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்கா தனது முழு தகவல் தொழில்நுட்பத்தையும் செலவு செய்தாலும், Al Saleem’ஐப் பற்றிய எவ்வித தகவல்களும் சேகரிக்க முடியவில்லை. ஏனெனில், Al Saleem சகலவிதமான இலத்திரனியல் தொலைபாடல் முறைகளிலிருந்தும் வேண்டும் என்றே விலகியிருப்பது. இந்தநிலையில் Roger ஒரு புதிய ஒரு உபாயத்தை முன்வைக்கின்றான்: Al Saleem’ஐ CIA தேடுவதை விடுத்து, CIA’ஐ Al Saleem தேடவைப்பது. அதற்கு ஒரு பொய்யான ஒரு புதிய ஒரு இஸ்லாமிய பயங்கரவாத இயக்கத்தை ஆரம்பிக்கின்றார்கள். அதற்கு ஒரு உண்மையான ஒரு இஸ்லாமியத் தலைவன் — அவனிற்கே தெரியாமல்! இந்த “body of lies” எவ்வாறான முடிவில் கொண்டு சென்று சேர்க்கின்றது என்பது மிகுதிக்கதை — அதுதான் விறுவிறுப்பான பாகமும் கூட.

படம் சற்றே இரண்டு தோணியில் கால்வைத்தது போல் இருக்கின்றது: ஒரு விறுவிறுப்பான espionage (ஒற்றறிவு?) த்திரில்லரை எடுப்பது ஒரு நோக்கம்; அமெரிக்காவில இருந்துகொண்டு களமுனை அறிவின்றி திட்டமிடும் அதிகாரிகளை வைவது அடுத்த நோக்கம். இரண்டும் தாமரை இலைத் தண்ணீர்த்துளிபோல ஒட்டாமல் நிற்கின்றது. த்திரில்லர் என்ற வகையில் படம் நன்றாகவே போகின்றது — இயக்குணர் Ridley Scott’க்கு (Gladiator இயக்குணர்) அது பெரிய வேலையேயில்லை. செய்மதிகளின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு (literally) ஆளைக் கடத்து காட்சி அந்தமாதிரி. சொகுசான அதிகாரியாரியாக வரும் Russell Crowe கொடுக்கப் பட்ட பாத்திரத்தை திறன்பட செய்திருந்தாலும், அந்த பாத்திரம் கொஞ்சம் too much!! பிள்ளையின் பாடசாலை வாகன தரிப்பிடத்தில் இருந்துகொண்டு சர்வதேச பயங்கரவாதத்தை நெறியாக்கம் செய்வதாகக் காட்டியிருப்பது கொஞ்சம் over பாருங்கோ!! புத்தகத்திலிருந்து திரைக்கு வரும் கதைகளில் எப்பவுமே ஓட்டைகளைக் கண்டு பிடிக்கலாம் — இங்கும் அப்படியே. என்றாலு பார்க்கக் கூடிய படம்.

“Body of Lies” IMDB இணைப்பு

Vicky Cristina Barcelona (2008): முக்கோண, நாற்கோண, ஐங்கோண காதல் கதை.

படத்தின் பெயர் உண்மையிலேயே “Vicky and Cristina in Barcelona” என்றுதான் இருந்திருக்கவேண்டும். அதுதான் படத்தின் கதையும். Vicky’யும் (Rebecca Hall) Cristina’வும் (Scarlett Johansson) ஆத்மாந்த நண்பிகள் எனினும் காதல் விடயத்தில் எதிரும் புதிருமான எண்ணப்பாடு கொண்டவர்கள் — மனதுக்குப் பிடித்த, வாழ்க்கைகு ஏற்றவன் ஒருவனோடு வாழ்வில் settle ஆவதற்குத்தான் காதல் என்பது Vicky’யின் கொள்கை; காதல் ஒரு adventure என்பது Cristina’வினது கொள்கை. நிச்சயதார்த்தம் முடிந்து இருக்கும் Vicky’யும், சமிபத்தில் (மீண்டும்) ஒரு காதல் தோல்வியைச் சந்தித்து இருக்கும் Cristina’வும் கோடைக்காலத்தில் சிலமாதங்களை கழிப்பதற்காக Barcelona’வில் (Spain) இருக்கும் Vicky’யின் உறவினர் வீட்டிற்கு வருகின்றனர். மகிழ்ச்சியாக கழிந்துகொண்டிருக்கும் நாட்களில் குழப்பத்தைக் கொண்டுவருகின்றார் அங்கே இவர்கள் சந்திக்கும் ஒரு ஓவியன் Juan (Javier Bardem.) Playboy வகையில் இருக்கும் Juan இலகுவாக Cristina’வின் மனதை கொள்ளை கொண்டுவிடுகின்றான். முதலில் Juan’ஐ வெறுக்கும் Vicky’யும் Juan’இன் மென்மையான மற்றைய முகத்தை அறிந்த பின்னர் Juan’உடன் காதல் வயப்படுகின்றார். இந்த முக்கோணக் காதலில் மேலதிக குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு வந்து சேர்கின்றார் Juan’இன் முன்னாள் மனைவி Maria (Penelope Cruz) — விவாகரத்து எடுத்த நாட்களில் Juan’ஐ கத்தியால் குத்தமுயன்றவர்!! Cristina-Maria-Juan-Vicky-Vicky’யின் எதிர்கால கண்வன் என்று ஒரே காதல் குழப்பம். இந்த குழப்பம் எங்கே சென்று முடிகின்றது என்பது படம்.

படத்தின் நடிகர்கள் எல்லாரும் சிறப்பாகச் செய்திருந்தாலும் துணை நடிகையாக வரும் Penelope Cruz எல்லாரையும் தூக்கிச் சாப்பிட்டு விடுகின்றார். ஆங்கிலத்தில் கதைப்பதும், சடாரென ஸ்பானிய மொழிக்கு மாறி பொரிந்து தள்ளுவதுமாக முழுக்கவனத்தையும் ஈர்த்துவிடுகின்றார். இந்தப் பாத்திரத்திற்காக இவர் ஆஸ்காரிற்கு தெரிவு செய்யப்பட்டிருப்பது முற்றிலும் தகும்!

மெலிதான நகைச்சுவையுடன் மிகவும் அமைதியாக படத்தை எடுத்திருக்கின்றார் Woody Allen (எழுத்தாக்கமும் இவர்தான்.) பின்னணி இசையே இல்லை என்று சொல்லலாம். Woody Allen’ஐ கிட்டத்தட்ட தமிழ்த் திரையுலக பாலச்சந்தரோடு ஒப்பிடலாம். குழப்பமான கதாபாத்திரங்களை முன்வைத்துவிட்டு கேள்விகளோடு படத்தை முடிப்பது இவரின் வழக்கம். இந்தப்படமும் அப்படித்தான். “…and they lived happily ever after” என்பதான முடிவுக்கு சாத்தியமேயில்லை! அப்படியான ஒரு படத்திற்கு நீங்கள் தயாரென்றால் ரசித்துப் பார்க்கக் கூடிய ஒரு படம்.

“Vicky Cristina Barcelona” IMDB இணைப்பு

Taken (2008): மகளைத் தொலைத்த அப்பாவின் சீற்றம்.

சில படங்கள் வெளியுலகெல்லாம் ஓடி, DVDயிலும் வந்த பிறகுதான் வட அமெரிக்க வெள்ளித்திரைகளிற்க்கு வரும் — அவ்வாற படங்களில் இதுவும் ஒன்று. பிந்தி வந்தாலும், வெகுவாக பாராட்டுக்களுடன் ஓடிக்கொண்டிருக்கின்றது. சாதாரணமான ஒரு ஆக்ஸன் கதைதான். என்றாலும் சிறந்த ஒரு முன்னணி நடிகர், செறிவான இயக்குணர், விறுவிறுப்பான படத்தொகுப்பு என்பவற்றை புகுத்திவிட கிடைக்கின்றது காற்றெனப் பறக்கின்ற ஒரு ஆக்ஸன் படம்.

Bryan Mills (Liam Neesan) ஒரு CIA உளவாளி. வாழ்க்கையின் பெரும் பகுதியை ஒற்றுவேலையில் செலவழிக்கும் இவரிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டு, இன்னொரு கல்யாணம் செய்துகொண்டு மகளையும் அழைத்துகொண்டு சென்றுவிடுகின்றார் இவரது மனைவி. காலம்கடந்தபின் ஞானோதயம் பெறும் இவர் மனைவியைத் தொலைத்தாலும் மகளைத் தொலைக்க மாட்டேன் என்ற முடிவுடன் CIA வேலையை விட்டுவிட்டு மகள் இருக்கும் அதே நகரில் வசித்துவருகின்றார். இப்படியான ஒரு சிக்கலான பிணைப்பை இவர் காப்பாற்றிக் கொண்டிருக்க, teenage பெண்ணான இவரது மகள் Kim (Maggie Grace) நண்பிகளுடன் France’ற்கு போகப் போகின்றேன் என்று வந்து நிற்கிறாள். வயது வந்தவர்கள் துணையில்லாமல் தொலைதூரத்திற்கு மகளை அனுப்புவது Bryan’ற்கு சற்றும் விருப்பமில்லாவிடினும், மகளினதும் முன்னாள் மனைவியினதும் வற்புறுத்தல்களினால் அரை மனதுடன் சம்மதிக்கின்றார். France விமான நிலையத்தில் வந்து இறக்கும் Kim’ஐயும் அவளது நண்பியையும் இலக்கு வைக்கின்றது பாலியலிற்காக பெண்களைக் கடத்தும் ஒரு குழுவென்று; இவர்களை பின் தொடர்ந்து வந்து இவர்களது தங்குமிடத்தையும் கண்டுகொள்கிறது. மகளை தனியே அனுப்பிவிட்டு தொடர்ந்து பதற்றத்தில் இருக்கும் Bryan, மகளிற்கு தொலைபேசி அழைப்பெடுக்கின்றார். இவர் Kim’உடன் உரையாடிக்கொண்டிருக்கும் அதேவேளையில் அந்தக் கடத்தல் கும்பல் வீடுடைப்புச் செய்து இரு பெண்களையும் கடத்த முனைகின்றது. ஆயிரம் கிலோமீற்றர்களுக்கு அப்பால் இருந்து கொண்டு அந்த கடத்தலை தவிர்க்க முடியாதென உணர்கின்ற Bryan, இருக்கும் சில நொடிகளிற்குள் கடத்தல்காரர்களின் சில அங்க அடையாளங்களை Kim’இடமிருந்து கேட்டறிகின்றார். அடுத்து Kim கடத்தப் பட்டுவிட, மகளை கண்டுபிடிக்கும் வெறியுடன் France’ற்கு வந்து வேட்டையைத் தொடங்குகின்றார் Bryan. குறுகிய காலத்திற்குள் மகளை கண்டுபிடிக்கவில்லையென்றால், பிறகு மகளின் விலாசமும் இருக்காது என்பதான ஒரு சூழ்நிலை. அவரின் பதட்டம், படத்தின் ஓட்டத்திற்கும் வந்துவிட பிறகு ஒரே விறுவிறுப்புத்தான்.

Liam Neeson ஒரு சிறந்த நடிகர். Batman Begin’இல் வில்லனாக இவரைப் பார்த்திருப்பீர்கள். 50 வயது தாண்டியும் ஆக்ஸன் பாத்திரத்தில் களைகட்டியிருக்கின்றார். மகளினுடனான அந்த தொலைபேசி உரையாடலில், குரலாலேயே நடித்திருக்கின்றார் என்று சொல்லலாம். படம் Quantum of Solace, Bourne Identity என்று முன்னைய பல ஆக்ஸன் படங்களை ஞாபகமூட்டினாலும் படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது அவற்றின் ஞாபகம் வந்து குழப்பவில்லை. ஆக்ஸன் விரும்பிகள் நம்பிப் பார்க்கலாம்.

“Taken” IMDB இணைப்பு

My Sassy Girl

Filed under: திரைப்படம் — beemorgan @ 1:14 பிப

—————————
இயக்கம் : Kwak Jae-yong
நடிப்பு: Jun Ji-hyun, Cha Tae-hyun
மொழி : கொரியன்,
ஆண்டு : 2001
—————————
ஒரு பயந்தாங்கொள்ளி நாயகனுக்கும், அடிதடி நாயகிக்கும் இடையிலான காதல் கலாட்டாதான் My Sassy girl.

படத்தின் கதை, நாயகியின் ஒற்றை வசனத்தில் அடங்கியிருக்கிறது… ” I met the man from the future”. ஒரு மாதிரி sci-fi மாதிரி தெரியுதா..? ஆனா, அது இல்லை.

தன் முதல் காதலனின் மறைவுக்குப் பிறகு ஒரு எக்கச்சக்கமாக தண்ணியடிச்சுட்டு(!) தற்கொலைக்கு முயலும் நிலையில் இருக்கும் நாயகியைக் காப்பாற்றுகிறார் நாயகன். அதன் பின் மீண்டும் மீண்டும் அவர்கள் சந்திக்கும் தருணங்கள் தானாய் வந்து வாய்க்க நாயகனுக்குள் காதல் பூக்கிறது. அதன் பின் திரைக்கதையின் போக்கில் நகர்கிறது இப்படம்.

மொத்தத்தில் மூன்று பாகங்களாக வருகிறது இப்படம். முதல் பாகம், இருவரும் சந்தித்ப்பதில் தொடங்கி காதல் பூப்பது வரை. இரண்டாம் பாகம், Time capsuleஐ புதைத்து இருவரும் பிரிவது வரையில், மூன்றாம் பாகம், மீண்டும் இருவரும் இணைய சுபம். 🙂
Time Capsule – அதாவது, இருவரும் பிரியறதுன்னு முடிவுசெய்த பிறகு, கடைசியாக ஒரு முறை சந்திக்கத் திட்டமிடுகின்றனர். அதற்கு முந்தைய நாள் இரவு ஒருவரைப் பற்றி மற்றொருவர் என்னென்னவெல்லாம் நினைக்கிறாரோ அதனை ஒரு கடிதத்தில் எழுதி எடுத்து வரவேண்டும். அடுத்த நாள் இருவரும் சேர்ந்து ஒரு முட்டை வடிவிலான பெட்டியில் இருகடிதங்களையும் வைத்து, ஒரு சிறு குன்றின் உச்சியிலுள்ள ஒரு மரத்தினடியில் புதைக்கின்றனர். சரியாக, இரண்டு வருடம் கழித்து அதே நாளில் இருவரும் அவ்விடத்திற்கு திரும்பி வந்து இருவரது கடிதத்தையும் படிப்பதாக ஒரு முடிவு.
இரண்டு வருடங்களுக்குப் பிறது இருவரும் அந்த இடத்துக்கு வந்தாங்களா? எப்படி சேர்ந்தார்கள் என்று சொல்கிறது படத்தின் பிற்பகுதி..

படத்தில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது அந்த ஹீரோயின்தான்.. முன்னாடி நமக்கு forward ல் வரும் சில படங்கள் ஞாபகம் இருக்கா? Japanese painting மாதிரி இருக்கும். ஒரு பெண் புத்தகம் படிப்பது மாதிரி அப்பும் இன்னும் சில.. கிட்டத்தட்ட அதே மாதிரி ஒரு ஹீரோயின்.. எனக்கு ஆறு வித்தியாசம் கூட கண்டுபிடிக்க முடியல.. 🙂

அடுத்து அந்த இரண்டாம் பாகத்தின் முடிவுக் காட்சி.. அப்பப்போ நாயகிக்கு திடீர்னு ஒரு ஆசை வரும் அதனை நாயகன் நிறைவேற்றியே ஆக வேண்டும்.. படத்தின் முற்பகுதிகளில் இது மாதிரி ஆசைகளை நிறைவேற்றுகையில் நமக்கு சிரிப்பு வந்தாலும், கடைசி காட்சியில் ரொம்பவே feel பண்ண வைச்சிடுது..
ஒரு மாதிரி feel good movie.. படத்தில் வரும் பழக்கவழக்கங்கள், சமூக அமைப்பெல்லாம் ரொம்ப புதுசா இருந்தது எனக்கு..

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படம் ஹாலிவுட்டில் தயாரிக்கப்பட்டு கடந்த ஆண்டு வெளிவந்தது. நான் இன்னும் பார்க்கவில்லை. யாராவது பார்த்திருந்தா எப்படி இருக்குனு சொல்லுங்க.

படத்தின் wiki தொடுப்பு

முதலில் இங்கே பதியப்பட்டது.

பிப்ரவரி 1, 2009

லக்கி பை சான்ஸ் – Farhan gets lucky again

Cast: Farhan Akthar, Konkana Sen Sharma, Rishi kapoor, Dimple kapadia, Juhi Chawala, Sanjay Kapoor, Isha Sharwani, Hrithik roshan, Saurabh shukala, a bunch of superstars as guest appearances.

First a big hand to Zoya akhtar for making a good debut directional movie. Right from the begining of the movie from where the credits star the mood of movie is set in perfect bollywood picture. You meet all people involved in making a movie successfull. Bollywood isn’t that beautiful behind the scenes. read more

Create a free website or blog at WordPress.com.