திரை விமர்சனம்

ஏப்ரல் 2, 2009

The Spirit (2008): படத்தில் உயிரோட்டமே இல்லை

காமிக்ஸ் புத்தகங்களை வெள்ளித்திரைக்கு கொண்டுவருவது அண்மையில் வாடிக்கையாகிவிட்டது. அதில் இதுவும் ஒன்று. “Sin City”, “300” போன்ற வித்தியாசமான வெற்றிப்படங்களைத் (அவைகளும் காமிக்ஸ் புத்தகங்களிலிருந்து திரைக்கு வந்தவைதான்) தந்த இயக்குணர் Frank Miller‘இன் இன்னொரு படைப்பு இது. Sin City எடுக்கப் பட்ட அதே விதத்தில் இந்தப் படத்தையும் எடுத்திருக்கின்றனர். ஆனால், தனியே திரைபட வடிவமைப்பு மட்டும்தான் Sin City போன்று, அதைத்தவிர மற்ற எல்லாவற்றிலும் கோட்டை விட்டுவிட்டார்கள்.

காவல்துறை அதிகாரி Denny (Gabriel Macht), கடமையின் போது சுட்டுக்கொல்லப் படுகின்றார். வீரமரியாதையுடன் ஆளைப்புதைத்து விட்டு வந்தால், இரவோடு இரவாக உயிர்பெற்று புதை குழியிலிருந்து எழும்பி வருகின்றார். உயிர் பெற்று வருவது மட்டுமில்லை, இலகுவாக காயங்களிலிருந்தும், வலியிலிருந்தும் குணமடையும் உடலையும் பெற்றிருக்கின்றார். இதன் பின், தனது பழைய வாழ்விற்கு திரும்பச் செல்லாது, “The Spirit” என்னும் பெயரோடு சட்டத்தைக்காக்கும் முகமூடி அணிந்த வீரனாக உருவாகின்றார். இவரிற்கு எதிராக இவரைப் போன்றே உடல்வாகு கொண்ட “The Octopus” (Samuel L. Jackson) என்னும் வில்லன். முற்றுமுழுதாக சாகாவரம் பெற்று, கடவுளாக வரவேண்டும் என்பது Octopus’இன் கனா. அதற்கு, சரித்திரத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்து எடுக்கப்பட்ட Hercules’இன் இரத்தத்தை தேடி அலைகின்றார் Octopus. இதற்கு இடையில், Denny’இன் பழைய காதல், புதுக்காதல், இடைக்காதல் என்று மணத்திற்கு வரிசையாய் பெண்குழாம். அவ்வளவு இருந்தும் பார்ப்பவர்களிற்கு இடையில் தூக்கம் வந்து விடுகின்றது!

படம் வருவதற்கு முன்பு எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு. திரைக்கு வந்தபின் சப்பென்று போய்விட்டது. ஹாலிவூட்டின் பெருந்தோல்விகளில் இதுவும் ஒன்று. படத்தின் பரபரப்புக்கு ஒரு காரணம், அதில் இருக்கும் நடிகைகள் பட்டாளம்: Sarah Paulson, Eva Mendis, Scarlett Johansson, Stana Katic, Paz Vega, Jaime King என்று வரிசையாக பல கவர்ச்சிகரமான நடிகைகள். கடைசியில் பார்த்தால், படத்தில் எவருமே பெரிதாக கவர்ச்சிகரமாகத் தெரியவில்லை (அப்படியான ஒரு ஓளிவடிவம்.) படத்தி்ன் கதை சிறுபிள்ளைத்தனமானது, ஆனால் படம் சிறுவர்களிற்கு உகந்தது அல்ல. இடைக்கிடை நகைச்சுவை போல ஏதோ ஒன்றை முயல்கின்றார்கள். பார்ப்பவர்களிற்கு அங்கே சிரிக்கவேண்டுமோ, இல்லையோ என்று ஒரே தடுமாற்றம். கதையும், கதைவசனமும் அப்பிடியென்றால், நடிப்பைப் பற்றிக் கேட்கத்தேவையில்லை. Sarah Paulson’ற்குத்தான் அங்கே நடிப்பத்ற்கு சிறியதொரு வாய்ப்பு. Samuel L. Jackson’ஐப் போட்டு நாறடித்திருக்கின்றார்கள்.

பார்ப்பதற்கு அந்த நடிகைகளைத்தவிர படத்தில் ஒன்றுமே இல்லை. அந்த நடிகைகளைக்கூட, தனித்தனியே, அவர்களின் வேறு படங்களில் பார்ப்பது நல்லது. இதில் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

“The Spirit” IMDB இணைப்பு

ஏப்ரல் 1, 2009

RockNRolla (2008): லண்டன் தாதாக்களின் ஆடு புலி ஆட்டம்.

முழங்கால் அளவுக்கு தண்ணி இருக்கும் குட்டைக்குள்ள எருமை மாட்டை விட்டு குழப்பின மாதிரி ஒரு கதை. அந்தளவு குழப்பத்தையும் ஒரு ரசனையோடு எடுத்திருக்கிறாங்கள் பாருங்கோ, அதுதான் அருமை! எழுத்தாளர், இயக்குணர் Guy Ritchie‘இன் முன்னைய படங்களைப் பார்த்திருந்தீர்களென்றால் உங்களிற்கு விளங்கும். பாதாள உலகு (underworld) தாதாக்களை மையமாக வைத்த படம்தான். படத்தில நல்ல மனுசன் எண்டு ஒருத்தரும் இல்லை.

லென்னி எண்டு பெரியதாதா. லண்டனில் எந்த காணி, நிலம் சம்பந்தமான கள்ள வியாபாரம் என்றாலும் இவரின் கைக்குள்ளால்தான் போகவேணும். சின்னதா வியாபாரம் தொடங்க இவரிட்ட காணிவாங்கி மாட்டுப்பட்ட சின்னதொரு திருட்டுக் கும்பல் “the wild bunch”. லென்னியின்ற குழியுக்குள்ள மாட்டுப்பட்ட இவையள் இப்ப லென்னிக்கு கொஞ்ச மில்லியன் பவுண்ட்ஸ் கடன்! இதுக்குள்ள ரக்ஷ்யாவில இருந்து வருகைதருகின்றார் ரக்ஷ்யா-தாதா யூரி. லண்டனில வியாபாரத்தை பரப்புவதற்கு காணி, நிலம் வாங்க லென்னியின் உதவியை நாடுகின்றார் யூரி. சட்ட திட்டங்களையெல்லாம் சரிபடுத்தி யூரியின் முதலீட்டுக்கு வழிபண்ண சுளையா ஏழு மில்லியன் பவுண்ட்ஸ் கேட்கிறார் லென்னி. அதுக்குச் சம்மதிச்சது மட்டுமில்லாம “இந்தா, என்ர ராசியான ஓவியம் இது, இதையும் கொஞ்ச நாள் வைச்சிரு” எண்டு அதை லென்னியிடம் குடுத்து அனுப்புகிறார் யூரி. இப்ப ஏழு மில்லியன் காசு திரட்ட வேண்டிய தேவை யூரிக்கு. தன்ரை கணக்காளர் ஸ்டெல்லாவுக்கு அழைப்பு எடுத்து, காசுக்கு வழி பார் என்கிறார் யூரி. காசுக்கு வழி பார்த்த கையோடு, தன்ரை பங்குக்கு தானும் கொஞ்சம் விளையாட நினைக்கின்றார் ஸ்டெல்லா. யூரியின் ஆட்களை காசை எடுத்து வா எண்டு அனுப்பி விட்டு, உள்ளூர் கொள்ளைக்க்கூட்டம் ஒண்டை வைத்து அந்தக் காசை வழிப்பறி பண்ணுகின்றார். அட, அந்த உள்ளூர் கொள்ளைக்கூட்டம் ஆரெண்டு பார்த்தால் லென்னியிடன் ஏமாந்த “the wild bunch”தான்! இதுக்குள்ள லென்னியின் அலுவலகத்திலிருந்த யூரியின் ஓவியம் திடீரென தலைமறைவு! களவெடுத்தது ஆராக இருக்கலாம் எண்டு ஆராய்ந்து பார்த்தால், செத்துவிட்டேன் எண்டு புரளியைக் கிளப்பிவிட்டு தலை மறைவாகிப்போன லென்னியின் தத்துபிள்ளை, முன்னாள் பாடகன், போதைப்பொருள் அடிமை ஜொன்னி. லண்டனின் எங்கயோ ஒரு பொந்துக்குள்ள ஒளிந்து இருக்கும் ஜொன்னியைத்தேடி லென்னி இங்க அலைய, ஏழு மில்லியனை வழிப்பறி கொடுத்த யூரி, தனது ராசியான ஓவியம் கைமாறியதே அதற்கு காரணம் எண்டு தீர்மானிக்கின்றார். இப்ப ஓவியத்தை திருப்பித்தா எண்டு யூரி கேட்க, அது துலைஞ்சு போச்சு எண்டு சொல்ல ஏலாமல் லென்னி திண்டாட, லென்னி டபிள்-கேம் விளையாடுகின்றார் என யூரி சந்தேகப் படத்தொடங்குகின்றார். கொஞ்சம் கொஞ்சமா தனது விசுபரூபத்தைக் காட்டத்தொடங்குகின்றார் யூரி. மறுபக்கத்தில், அப்பாவுக்கு அலுப்படிக்க எண்டு கடத்திக் கொண்டு வந்த ஓவியமோ ஜொன்னியின் கையை விட்டுவிட்டு தப்பி லோக்கல் சந்தைக்கு வந்து விடுகின்றது! இதுக்கெல்லாம் இன்னொரு பக்கத்தில், சின்னத் தாதாக்களை போலிசுக்கு போட்டுக் குடுக்கும் ரகசியாமான ஒருவன்; அவனை ஆரெண்டு கண்டிபிடிக்க “wild bunch” குழுவில் ஒருவன் தீவிர முயற்சி.

இப்பிடியான ஒரு இடியாப்பச் சிக்கல் கதையை நகைச் சுவையோடு, விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கின்றார்கள். மிகவும் வேகமான, பக்கா லண்டன் தாதா ஸ்டையில் கதை. அது அரைவாசி ஒரு இளவும் விளங்கவில்லை என்பதுதான் பிரச்சினை! கொஞ்சம் கவனம் பிசகினாலும் கதை விளங்காமல் போய்விடுமோ எண்டு பயப்பிடும்படியான வேகம். அவ்வளவு சிக்கல் கதைக்குள்ளேயும், லாஜிக் ஒன்றுமே பிசகவில்லை. படம் முழுதாக Guy Riitche’யின் படம்தான் என்றாலும், நடிகர்களும் காலைவாரவில்லை. அந்த அந்த பாத்திரங்களில் அனைவரும் நன்றாக பொருந்திப் போகின்றார்கள். படத்தில் ஆக்ஸன் மிகச் சிறிய அளவில்தான், மற்றப்படி ஒரு Crime கதைதான். வித்தியாசமான படத்தைப் பார்க்க ஆசைப் படுகின்றவர்கள் சந்தோசமாக பார்க்கக் கூடிய படம்.

“RockNRolla” IMDB இணைப்பு

மார்ச் 31, 2009

Ong Bak 2 (2008): தாய்லாந்திலிருந்து வந்து இறங்கும் அதிரடி

Filed under: திரைப்படம் — bmmaran @ 4:16 முப
Tags:

Bruce Lee, Jackie Chan, Jet Li எல்லாரும் Martial Arts படங்களில் தங்களிற்கென ஒரு முத்திரை பதித்துச் சென்றவர்கள். அதில் ஒருவர் காலமாகிவிட, மற்ற இருவரும் முதுமை எய்திவிட, புதிதாக தாய்லாந்திலிருந்து வந்து இறங்கியிருக்கின்றார் Tony Jaa. தனக்கென்று சொல்லி Muay Thai என்று சொல்லப் படும் புதுவித சண்டைக் கலையை திரைக்கு அறிமுகப் படுத்தியிருக்கின்றார். முதலாவது Ong Bak (2003) படத்தோடு ஆக்ஸன் பட ரசிகர்கள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்திருக்கின்றார்.

இந்த இரண்டாம் பாகம், 2003’ஆம் ஆண்டு படத்தின் தொடர்ச்சியல்ல. சற்று சம்பந்தமில்லாது தோன்றினாலும், இதுவும், இனிவரவிருக்கும் Ong Bak 3’உம் இணைந்து, முதலாவது Ong Bak படத்தின் முன்படமாக (prequel) அமையுமாம். படம் முற்று முழுதாக ஆக்ஸன் படம். எனவே, அங்கே ஒரு நூலளவுதான் கதையிருக்கின்றது. சரித்திர காலத்தில் நடப்பதாக சித்தரிக்கப்பட்டிருக்கும் இந்தப் படம், கூட இருந்து குழிபறிப்பவர்களால் அநாதை ஆகின்ற ஒரு அரச தளபதியின் மகனின் வாழ்க்கையை ஒட்டிப்போகின்றது. படம் தாய்லாந்து மொழியில்தான் இருக்கின்றது. எனவே subtitiles’ஐத் தேடிப்பிடித்தல் அவசியம். என்றாலும் அது பெரிய பாதகம் இல்லை ஏனென்றால், படத்தில் இருக்கும் கதை வசனத்தை விரல் விட்டு எண்ணிவிடலாம். மற்றப்படி ஆக்ஸன், ஆக்ஸன், ஆக்ஸன்தான்! என்றாலும் திகட்டாத விதத்தில் ஒளிப்பதிவும், படத்தொகுப்பும். முதலாவது Ong Bak, இதிலும் விட சற்றே சிறந்தது என்றாலும், ஆக்ஸன் ரசிகர்கள் சந்தோசமாக பார்க்கலாம்.

“Ong Bak 2” IMDB இணைப்பு

மார்ச் 14, 2009

Watchmen (2009): அவரசரப்பட்டு பார்க்கத் தேவையில்லை

காமிக்ஸ் புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களிலிருந்து என்ன எதிர்பார்ப்பீர்கள்? நிறைய ஆக்ஸன் இருக்கும், எல்லாரும் பார்க்கக் கூடியதாக இருக்கும், விறுப்பாக கிட்டத்தட்ட ஒரு இரண்டு மணித்தியாலம் சந்தோசமாக நேரத்தை ஓட்டலாம் — இப்பிடித்தானே நீங்கள் சொல்லுவீர்கள்? இந்த வரைவிலக்கணத்திற்கெல்லாம் வெகுவாக தள்ளி நிற்கின்றது கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக பரபரப்பாக எதிர்பார்க்கப் பட்ட Watchmen. இழு இழு என்று கிட்டத்தட்ட இரண்டே முக்கால் மணித்தியாலம் படம், அதற்குள் தெளித்து விட்டது போல சில ஆக்ஸன் காட்சிகள், சிறுவர்களை இந்தப் படத்தை பார்க்க முடியாமல் பண்ண கொடூரமான வன்முறைக் காட்சிகளும் நிர்வாணக் காட்சிகளும். என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை! 😦

1980’களின் கடைசிப்பகுதியில் வெளியிடப்பட்ட காமிஸ் புத்தக தொடரின் திரைவடிவம்தான் இந்தப் படம். நான் இந்தப் படத்திற்கு முன்னர், அந்த காமிக்ஸைப் பற்றி கேள்விப்படவில்லை என்றாலும், அதற்கென்று ஒரு பெரிய இரசிகர் குழு ஒன்று இருக்கின்றதாம். அப்படியிருந்தும், அந்த காமிக்ஸை திரைக்குக் கொண்டுவர இத்தனை காலமும் தொழில்நுட்பம் முன்னேறியிருக்கவில்லையாம். படத்தைப் பார்த்தபின், எனக்கென்றால் அது காதில பூச்சுத்துகின்ற கதை போலதான் தோன்றுகின்றது.

1980’களின் நடுப்பகுதியில் நடப்பதாக படம் அமைந்துள்ளது. அந்த உலகத்தில் எல்லாம் உங்களுக்குத் தெரிந்தமாதிரித்தான் – Nixon அமெரிக்க ஜனாதிபதி, ரஸ்யா கியூபாவில் ஏவுகணைகளை குவிக்கின்றது, உலகம் அணுவாயுத அழிவின் வாசலில் நிற்கின்றது. இந்த உலகத்தில் புதியது என்னவென்றால் முகமூடி அணிந்து திரியும் superhero குழுவான “Watchmen.” 1950’களில் ஆரம்பமான இந்தக் குழு, இடையில் மக்களின் எதிர்ப்பினால் கலைக்கப்பட்டு விட, 1980’களில் இவர்கள் சிதறிப் போய் இருக்கின்றார்கள். படத்தில் குழப்பமே இந்தக் குழுதான். முதலாவது, எப்பவுமே நல்லவர்களான superhero’க்களைப் பார்த்துப் பழகிய எங்களிற்கு குளப்பமான குணாதியங்களைக் கொண்ட இவர்களை ஜீரணிக்க முடியவில்லை. அடுத்தது, அந்தக் குழுவில் ஒரு சிலருக்குத்தான் அமானுக்ஷ்ய சக்தியுண்டு; மற்றவர்களெல்லாம் எப்பிடி superhero ஆனார்கள் என்று எனக்கென்றால் தெரியவில்லை. அடுத்த குழப்பம், எவ்வாறு மக்கள் இவர்களை வெறுக்கத்தொடங்கினார்கள் என்று.

என்னவோ, இப்பிடியிருக்கும் காலத்தில், ஓய்வு பெற்ற Watchmen’இல் ஒருவர் கொலை செய்யப்படுகின்றார். அது ஒரு தனிப்பட்ட சம்பவம் என்று நம்பப் பட்டாலும், இன்னொரு Watchmen அங்கத்தவர் மீதும் கொலை முயற்சி செய்யப்பட மர்மம் அதிகரிக்கின்றது. இது பிரிந்து போன Watchmen உறுப்பினர்களை ஒன்று சேர்க்கின்றது. Watchmen கொலை மர்மத்திற்கும் அமெரிக்க-ரஸ்ய அணுவாயுத யுத்தத்திற்கும் முடிச்சுப் போடுவது கதை.

அந்த காமிக்ஸ் புத்த ரசிகர்கள் படத்தை இரசிப்பார்கள் என்று நம்புகின்றேன். நானோ, படத்தின் முன்பாதியில், பத்து நிமிடத்திற்கு ஒருமுறை “என்னதான் நடக்குது இங்க?” என்று என்னை நானே கேட்டுக் கொண்டிருந்தேன். அந்த ஏற்றம் இறக்கமில்லாத பின்னணி வர்ணணைக் குரல் வேறு வெறுப்பேற்றிக் கொண்டிருந்தது. OK, படம் மொத்தத்தில் குப்பை என்று சொல்லுவதற்கும் இல்லை — ஒரு வித்தியாசமான முடிவு, சிறப்பாக எடுக்கப் பட்ட ஆக்ஸன காட்சிகள், தனக்கென தனித்துவத்தைக் காட்டிக் கொள்ளும் சில காட்சி அமைப்புகள், இப்படி ரசிப்பதற்கு பல அம்சங்கள் படத்தில் இருக்கின்றன. என்றாலும், இவை மட்டுமே நல்லதொரு படத்தை தருவதற்கு போதும் என நம்பி படத்தை எடுத்திருப்பிருப்பதுதான் பிழை. தங்களிற்கு special effects திறமையாகச் செய்யத்தெரியும் என்பதற்காக காரணமில்லாமல் அவற்றைத் திணித்திருப்பது (அந்த செவ்வாய்க் கிரக காட்சிகள்) பைத்தியம்மாக்குகின்றது. இத்தோடு தேவையில்லாத பாலியற் காட்சிகள் (அட, நடிகர்கள் நிர்வாணக் கோலத்தில அழகாக இருந்தாலாவது பரவாயில்லை!)

படம் ஓடும்… அந்தளவுக்கு படம் பிரபல்யம்; நானும் அதால்தானே படம் திரையிடப்பட்டு முதலாவது கிழமையே போய்ப் பார்த்தது. தவிர, படம் கிட்டத்தட்ட “Sin City”, “300” படங்களை நினைவூட்டுமாறு எடுக்கப் பட்டுள்ளது சிலருக்குப் பிடிக்கும் (நான் அந்த இரு படங்களையும் மிகவும் இரசித்திருந்தாலும் இதை இரசிக்க முடியவில்லை.) கருமையான எண்ணக்கருவை படம் கொண்டிருப்பதும் சிலருக்குப் பிடிக்கும். ஏதோ நான் நொந்து போய்வந்ததை சொல்லிவிட்டேன். நிச்சயமாக இதைப் படிக்கும் யாராவது ஒருவர், நேர் எதிரான விமர்சனம் ஒன்றைத் தெரிவிக்கலாம். நான் சொல்லுவதெல்லாம் அவாப் பட்டுப்போய் படத்தைப் பார்க்காமல், ஆற அமர யோசித்துவிட்டு படத்தை பாருங்கோ என்பதுதான்.

“Watchmen” IMDB இணைப்பு

மார்ச் 11, 2009

Twilight (2008): காதல், இரத்தத்தில்…

என்னவோ தெரியாது, இங்கே மேற்கத்தைய மக்களிற்கு இரத்தக்காட்டேறி (vampire) சம்பந்தப்பட்ட படங்கள் என்றால் அப்பிடியொரு நாட்டம். அப்பிடிப்பட்ட படம் எப்பிடியும் வருடத்திற்கு ஒன்றாவது வந்து விடும். அப்பிடியிருக்கையில் இரத்தக்காட்டேறியை மையமாகக் கொண்டு Stephenie Meyer எழுதிய Twilight புத்தகத்தொடர் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாகிவிட அதை விட்டுவைப்பார்களோ? அந்தத்தொடரின் முதலாவது பாகம்தான் இந்தப் படம்.

தாயார் மீள் திருமணம் செய்துகொண்டு, புது கணவனின் தொழில் காரணத்தால் அவருடன் வேறிடம் செல்லவேண்டியிருப்பதால், கொதிக்கின்ற Arizona மாநிலத்திலிருந்து, சொந்தத் தகப்பன் இருக்கும், எப்போதும் வானம் அழுது வடியும் Washington மாநிலத்திற்கு இடம் பெயர்கின்றாள் 17 வயது Bella Swan (Kristen Stewart.) புதுப் பாடசாலையில் இவளை இலகுவாக ஒரு மாணவர் குழாம் நண்பியாக ஏற்றுக் கொண்டாலும், இவளது கவனம் வித்தியாசமான போக்குடன், எல்லாரையும் விட்டு தனித்து இயங்கும் குழு ஒன்றின் மீது ஈர்க்கப் படுகின்றது; முக்கியமாக அதிலிருக்கும் சகமாணவன் Edward Cullen மீது (Robert Pattinson — நம்ம Harry Potter Cedric பாருங்கோ.) போதாக் குறைக்கு Edward’ஏ இவளுக்கு ஆய்வுகூட பங்காளியாகவும் அமர்த்தப் படுகின்றான். Bella இவனை நோக்கி ஈர்க்கப்பட, Edward’ஓ இவளைக் கண்டாலே அருவருப்பதுபோல தோற்றம் காட்டுகின்றான். இதனால் குழப்பமடையும் Bella அதற்கு காரணம் கேட்பதற்காக சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருக்கும்போது, வாகனத் தரிப்பிடத்தில் நடக்கும் விபத்திலிருந்து Bella’வின் உயிரைக் காப்பாற்றுகின்றான் Edward; அதுவும் சும்மாயில்லை — மோத வந்த வாகனத்தை கையினால் தடுத்து நிறுத்தி. Edward பற்றிய மர்மம் இன்னமும் முற்றிப் போக, மேற்கொண்டு ஆய்வுசெய்யும் (நம்ம Googling’தான்!) Bella, Edward ஒரு இரத்தக் காட்டேறி என உய்த்தறிகின்றாள். இந்தக் கண்டுபிடிப்போடு Edward’ஐ இவள் எதிர் கொள்ள, அவனும் அதை ஏற்றுக்கொள்கின்றான். அவன் மட்டுமல்ல, அவனது முழுக் குடும்பமுமே. என்றாலும், இவர்கள் மனித இரத்தத்தை உணவாகக் கொள்வதை விடுத்து மிருக இரத்தத்தோடு மட்டும் வாழ்க்கையை ஓட்டுகின்றார்கள். இரகசியங்கள் பரிமாறப் பட, இருவர்களிற்கும் இடையில் இரும்புப் பிணைப்பாகக் காதல் பிறக்கின்றது.

அடிபாடு, துரத்தல் என்றெல்லாம் படத்தின் பின்பகுதியில் இருந்தாலும், மொத்தத்தில் உருக உருக காதல் செய்வதைத் தவிர, அங்க பெரிசா ஒரு கதையும் இல்லை. வழமையாக இரத்தக் காட்டேறி படங்கள் என்றால், பயங்கரம், ஆக்ஸன், பாலியல் என்றுதான் அமைந்திருக்கும் — என்வே இவை பொதுவாக ஆண்களிற்கான படங்களாகத்தான் அமையும். அந்த விதத்தில் Twilight மாறுபட்டது — இதை ஒரு Chick-Flick என்று சொல்லிவிடலாம்; அதாவது பெண்களிற்கு மிகவும் பிடிக்கக் கூடிய படம். அதிலும் Teenage பெண்களிற்கு.

கதைப் புத்தகங்களிலிருந்து திரைக்கு வரும் படங்களின் வழமையான சாபக்கேடு இதற்கும் உண்டு — ஆங்காங்கே சில காட்சிகள், சம்பவங்களிற்கு படத்தில் தரப்படும் விளக்கம் போதுமானதாக இல்லை என்பதாக ஒரு குறைபாடு. என்றாலும் இரண்டு விடயத்தில் படம் சிறந்து நிற்கின்றது. ஒன்று, அந்தக் காதல் சோடி — காமம் இல்லாமல், திரை முழுவதும் காதலை கனிய கனிய வடிய விடுகின்றார்கள்! மற்றது, அழகான ஒளிப்பதிவு; படத்தில் ஓடும் காதலைப் போல, கமெராவும் மென்மையாக ஓடுகின்றது. எனவே, கதையின் ஆழத்திற்கு வரும் முன்னர், படத்தின் முன்பாதியில் அலுப்புத்தட்டினாலும், பின் பாதியை அலுப்பில்லாமல் கொண்டு போயிருக்கின்றார்கள். மென்மையுள்ளம் கொண்டவர் என்றால் பார்க்கலாம், குறை சொல்ல மாட்டீர்கள்.

“Twilight” IMDB இணைப்பு

மார்ச் 10, 2009

Bolt (2008): பொய்யினில் வளர்ந்து, மெய்யினில் விழுந்து…

இவ்வளவு காட்டூன் படங்களை எடுத்துத் தள்ளிய பிறகும், இன்னுமொன்ரு காட்டூன் படத்தை எடுத்து சிரிக்கவைப்பதற்கும், வியக்கவைப்பதற்கும் இயலும் என்றால் Walt Disney தயாரிப்பாளர்களால்தான். ok, “Finding Nemo” அளவுக்கு நகைச்சுவை இல்லையென்றாலும் சந்தோக்ஷமாக படம் எடுத்திருக்கின்றார்கள். காட்டூன் தரத்திலும் Pixar அளவுக்கு தயாரித்திருக்கின்றார்கள்.

சிறுவயதிலிருந்தே தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் வரும் அபாரிதமான சக்தி கொண்ட நாயாக நடிப்பதில் வாழ்க்கை ஓட்டிக்கொண்டிருக்கின்றது எமது கதாநாயகனான Bolt. கெட்ட சக்திகளிடமிருந்து தனது எஜமானியான சிறுபெண்ணை (Penny) காப்பாற்றுவதே தொலைக்காட்சித் தொடரில் Bolt’இன் வேலை. தொடரை மிகவும் தத்துரூபமாக எடுக்கவேண்டும் என்பதால் Bolt’க்கு உண்மையாகவே அபாரித சக்தியுள்ளதாகவே அதை நம்ப வைக்கின்றார்கள் எல்லோரும். இதனால் தொலைக்காட்சித் தொடரில் வருவதை எல்லாம் உண்மையாகவே நடப்பதாக நம்பி வருகின்றது Bolt. இப்படி இருக்கும் தருணத்தில், தொடரின் அங்கமொன்றின் இறுதியில் Bolt’இன் எஜமானி Penny’ஐ கெட்ட சக்திகள் கடத்தி விடுவதாக வடிவமைக்கின்றார்கள். அதை தத்துரூபமாக வைத்திருப்பதற்காக Penny உண்மையாகவே கடத்தப்பட்டதாக நம்பித் தவிக்கும் Bolt’ஐ அப்படியே விட்டுவிடுகின்றார்கள் — அடுத்த அங்கம் நன்றாக வரும் என்பதற்காக.

தவித்துப் போகும் Bolt, Penny’ஐ காப்பாற்றியே தீருவேன் என்று ஓடி அலைகையில், தவறுதலாக விரைவு-அஞ்சல் (courier) பெட்டியொன்றில் விழுந்து, அமெரிக்காவின் மேற்கு கரையில் இருக்கும் ஹாலிவூட்டிலிருந்து, கிழக்குக் கரையில் இருக்கும் நியூ யோர்க்கிற்கு ஆகாயவிமானம் மூலம் வந்துவிடுகின்றது. அதை அறியாமல் தொடர்ந்து எஜமானியைத் தேடி அலைகின்றது. நிஜ உலகில் தனது அபாரித சக்திகள் ஒன்றும் செயற்படாது போக மிகவும் குழப்பமடைந்து போகின்றது — அதற்கு விரைவு-அஞ்சல் பெட்டியினுள் இருந்த Styrofoam’தான் காரணம் என்று நம்புகின்றது! 🙂 தொலைக்காட்சித் தொடரில் எதிரி சக்திகளுடன் இணைந்து செயற்படுவது பூனைக் கூட்டம். எனவே நியூயோக்கில் இருக்கும் தெருப் பூனையான Mittens’ஐ பணயக்கைதியாகப் பிடிக்கின்றது. Bolt’இன் குற்றச்சாட்டுகள் ஒரு மண்ணும் விளங்கவில்லை என்றாலும், பலத்தினால் Bolt’ஐ விட சக்தி குறைந்த Mittens கொஞ்சத்திற்கு ஒத்துப் பாடத்தீர்மானிக்கின்றது. Bolt’ன் நாய்ச் சங்கிலியிலிருக்கும் பட்டையிலிருகும் விலாசத்தை வைத்துக்கொண்டு Bolt கலிபோர்னியாவைச் சேர்ந்தது என்று அறியும் Mittens, Penny கலிபோர்னியாவிற்கு கடத்தப்பட்டிருப்பதாக Bolt’ஐ நம்பவைக்கின்றது. அதைத்தொடர்ந்து இருவரும் நாட்டைக் குறுக்கறுத்து பயணத்தை ஆரம்பிக்கின்றார்கள். இடையில் இவர்களுடன் இணைந்து கொள்வது Rhino என அழைக்கப்படும் ஒரு hamster. ஒரு தொலைக்காட்சிப் பைத்தியமான Rhino’விடமிருந்து Bolt பற்றிய மிகுதி உண்மையையும் உய்த்தறிகின்றது Mittens. இவர்களது பயணம் தொடர, கொஞ்சம் கொஞ்சமாக உண்மையை Bolt’க்கு உணரவைக்கின்றது Mittens. உண்மை முதலில் விரக்தியைத் தந்தாலும், Mittens’இனது முயற்சியால் மனம் தேறுகின்றது Bolt. இவர்களிற்கிடையிலான பகை, நட்பாகவும் வடிவெடுக்கின்றது. மிகுதிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்து, யாவரும் வீடு சேர்வது மிகுதிக் கதை.

தூக்கிக் கொஞ்சக்கூடிய அளவுக்கு அழகாக இருக்கும் Bolt’க்கு John Travolta குரல் கொடுத்திருப்பது அதியமாக இருந்தாலும், நன்றாகப் பொருந்திப்போகின்றது. சமிபத்தைய புகழ் teenage பாடகி Miley Cyrus‘இன் ஆம்பிளைக் குரல் பாடுவதற்கு பொருத்தமாக இருக்கலாம்; ஆனால் Penny’க்கு பின்னணிக் குரல் கொடுப்பதற்கு அவ்வளவு பொருத்தமாகத் தெரியவில்லை. படத்தில் வரும் மிருகங்களிற்கு நன்றாகவே உயிரூட்டியிருக்கின்றார்கள். முக்கியமாக அந்த கழுத்தை வெட்டி, வெட்டி பேசுகின்ற புறாக்களின் கதை நகைச்சுவையாகவும், இயல்பாகவும் இருக்கின்றது. அது ஏன் படத்தில நிறைய புறா வருகின்றது என்று இலங்கை, இந்தியாவிலிருந்து யாரும் குழம்ப வேண்டாம். அங்கே காகம் போல, வட அமெரிக்காவில் புறாக்களைத்தான் பார்க்கலாம். பெரிதாக புதுமை இல்லை என்றாலும், Walt Disney வழமைபோல அலுக்காமல் பார்ப்பதற்கு ஒரு படத்தை தந்திருக்கின்றது. அன்பும், நட்பும், தன்னம்பிக்கையும் அவசியம் என்னும் கருத்தையும் இழையோடியிருக்கின்றார்கள். சின்னஞ்சிறாரோரு பார்த்து மகிழுங்கள்.

“Bolt” IMDB இணைப்பு

மார்ச் 8, 2009

Transporter 3 (2008): ம்ம்ம்… மூன்றாம் பாகம்? OK…

எண்ணக் கருக்களுக்கு தட்டுப்பாடு இருந்தால் படத்தை எடுக்காமல் விட வேண்டியதுதானே, ஏன் இந்த பழஞ்சோறு வடிக்கிற வேலைக்கு போகவேண்டுமோ தெரியவில்லை. சிக்கென்று ஒரு ஹீரோ, வேகமாய் போகின்ற கார், மணமூட்டுவதற்கு புதிதாய் இறக்குமதி செய்யப்பட்ட கதாநாயகி இவ்வளவும் ஒரு படம் தயாரிப்பதற்கு போதும் என்று தீர்மானித்து படத்தை எடுத்திருக்கின்றார்கள். எனவே Transporter பட வரிசையின் இந்த மூன்றாம் பாகம், முதல் இரண்டு பாகங்களையும் அவ்வப்போது ஞாபமூட்டுவதை தவிர்க்க முடியவில்லை.

ok, படத்தில் புதுமை என்பது இல்லவே இல்லை என்று சொல்வதற்கில்லை. படத்தின் மையக்கருவாக Frank’ஐயும், அவரது காரையும் இடையே உயிரிணைப்பை ஏற்படுத்தியிருப்பது நன்றாக இருக்கின்றது. முந்திரிக்கொட்டை போல அதைச் சொல்ல முதல், கதையோட்டம் என்னவென்று பார்ப்போம்: தனது பொருள் இடம்பெயர்க்கின்ற (Transporting) வேலையை இன்னொருவனிடம் கொடுத்துவிட்டு, பிரெஞ்சு காவல் அதிகாரியும், நண்பருமான Tarconi’யுடன் பொழுது போக்கிக் கொண்டிருக்கின்றார் Frank Martin (Jason Statham.) அமைதியாக சென்று கொண்டிருக்கும் இவரது வாழ்வில், இவரது பழைய வேலையை ஏற்றுக்கொண்டவன் வேலையின் இடையில் இவரது வீட்டிற்கு வந்து மண்டையைப் போடுகின்றான். ஏதும் புரியாமல் இவர் முழிக்க, ஒழுங்காக சிந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கும் முன்னர் இவர் கடத்தப் படுகின்றார். இப்போது, இவரது பிரதிநிதியால் இடையில் விடப்பட்ட வேலையை முடிப்பதற்கு இவர் நிர்ப்பந்திக்கப் படுகின்றார். வழமைபோல பொதிகள் சிலவற்றை ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு கொண்டு செல்லவேண்டிய வேலை. இடையில் காரை விட்டுவிட்டு இவர் தலை மறைவாகி விடமுடியாமல், மணிக்கட்டிலே பொருத்தப்பட்ட ஒரு இலத்திரனியல் வெடிகுண்டு — காரைவிட்டு 50 அடி விலத்தி இவர் போனால் அது வெடிக்கும். இந்தக் குண்டு தவிர, இவருடன் பயணத்துணைக்கு ஒரு Britney Spears குணாதிசயத்துடன் ஒரு பெண் வேறு. இனி என்ன; பயணம் ஆரம்பம். இடையில் வழமைபோல அடிபாடு, கார்த்திரத்தல்கள், காதல் என்றுஎல்லாத்தையும் சேர்த்து, எதிரிகளை Frank முறியடிப்பது மிகுதிக் கதை.

படத்தில் பெரிய திருப்பமாக அமைய வேண்டியது, தான் கடத்தும் பொருள் என்ன என்பதை Frank அறிந்து கொள்வது; Frank’ற்கு வேண்டுமானால் அது ஆச்சரியமாக இருக்கலாம்; எங்களிற்கு அது ஆச்சரியமாகவில்லை. Jason Statham இன்னமும் கட்டுமஸ்தாக அழகாகத்தான் இருக்கின்றார். அடிபாட்டு காட்சிகளில் வழமைபோல எமது இரத்தோட்டத்தை கூட்டுகின்றார். என்றாலும் படத்தின் கதாநாயகி இவரிற்கு பொருத்தமாகத் தெரியவில்லை. மேலும், Transporter படமென்றால் விறுவிறுப்பான கார்த் திரத்தல்கள் இருக்கும்; இதிலும் உண்டு; என்றாலும் முன்னைய படங்கள்போல அவ்வளவு விறுவிறுப்பாக இல்லை. அது, அதிகமாக கார் திரத்தல் படங்களை பார்த்த எனது பிழையோ தெரியாது! 😉 Transporter படங்கள் காதில் பூச்சுத்துகின்ற வேலைக்கும் பிரபல்யம். முன்னைய படங்கள் அளவு இல்லையென்றாலும், இந்தப் படத்திலும் அவை உண்டு. ஆக்கிமிடிசின் தத்துவத்தை வாய்ப்புப் பார்க்கின்ற ஒரு காட்சி வரும். அதை மட்டும் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்றால் சரி. 🙂 பொதுவாக ஆக்ஸன் ரசிகர்கள் பார்க்கலாம்.

“Transporter 3” IMDB இணைப்பு

Punisher: War Zone (2008): ஆளைத் தூக்கு!

ஆங்கில படங்களில் ஆக்ஸன் படங்கள் என்று ஒரு வகை, ‘gore’ என்று அழைக்கப்படும் இரத்தம் சிந்துகின்ற, அங்க அவயவங்கள் பறப்பதாக இன்னொரு வகை. இந்தப் படம் இரண்டு வகையிலும் சேர்ந்து நிற்கின்றது. படம் அநியாயத்தைத் தட்டிக்கேட்பதற்காக ஆயுதம் எடுக்கும் ஒருவரைப் பற்றியது. Frank Castle (Ray Stevenson) ஒரு விசேட இராணுவ படைத்துறையில் பயிற்றுவிப்பனராக இருந்தவர். மனைவி, பிள்ளையோடு பொதுவிட பூங்காவொன்றிலே விளையாடிக் கொண்டிருக்கும் தருணத்தில், இரு திருடர் கூட்டங்களிடையே எழும் துப்பாக்கிச் சண்டையில் துரதிஸ்டவசமாக மனைவியையும், பிள்ளையையும் காவு கொடுக்கின்றார். மிகுந்த கோபத்திற்குள்ளாகும் Frank, ஊரில் இருக்கும் திருட்டுக் கூட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக களையெடுக்கும் “punisher” (தண்டிப்பாளன்) ஆக உருவெடுக்கின்றார். களையெடுப்பது என்றால், காவல்துறையினரிடம் அகப்படுத்துவது இல்லை — இரவோடு இரவாக ஆட்களைத் “தூக்குவதுதான்.” இது படத்தின் முன்கதை. இந்தப் படத்தின் கதை, Frank விடும் ஒரு தவறை ஒட்டிப் போகின்றது. கொள்ளைக் குழு ஒன்றை கொலை செய்யும் தருவாயில், அந்தக் கள்ளர் குழுவோடு ஒற்றனாக இருந்து செயற்படும் காவல் துறை அதிகாரி ஒருவரையும் அடையாளம் தெரியாமல் கொலை செய்து விடுகின்றார் Frank. வழமையாக Punisher’இன் நடவடிக்கையை கண்டும் காணாமலும் (சிலவேளை உதவியாகவும்) இருக்கும் காவல் துறை punisher’ஐ நெருக்க வேண்டிய சூழ்நிலை. மற்றப் பக்கம் செய்த தவறினால் மனமுடைந்து punisher வேடத்தையே விட்டெறிய நினைக்கும் Frank. இவை இவ்வாறு இருக்க இன்னொரு பிரச்சினை எழுகின்றது — punisher’இன் தவறுதலான கொலையால் தமது குழு காவல் துறையினரால் ஊருடுவப் பட்டிருக்கின்றது என அறியவரும் அந்த கொலை/கொள்ளைக் குழு இறந்த அந்த காவல்துறை அதிகாரியின் குடும்பத்தினை குறி வைக்கின்றது. கணவனைத் இழந்ததற்கு punisher’ஐ முழுக் காரணமாக கருதி punisher’ஐ இறந்த அந்த அதிகாரியின் மனைவி வெறுத்தாலும், அந்த விதவையையும் அவரின் குழந்தையையும் காப்பாற்றும் பொறுப்பும் punisher’இன் கையில் வந்து சேருகின்றது. அடித்து, நொருக்கி, சுட்டு, வெடித்து அவர்களை காப்பாற்றி, அந்த கொள்ளைக் குழுவை நிர் மூலமாக்குவது மிச்சக் கதை.

Punisher காதாபாத்திரம் காமிக்ஸ் புத்தகத்தில் இருந்து எடுக்கப் பட்டது. எனவே, படத்தில் இருக்கும் வன்முறையையும், ‘gore’ஐயும் நெறியாக்கியிருக்கும் விதம் (editing) காமிக்ஸ் புத்தக வகையில் இருப்பது ஒருவிதத்தில் ரசிக்கக் கூடியதாக இருக்கின்றது. படத்தின் கடைசிக் கட்டத்தில் punisher எடுக்கும் முடிவும் நன்றாக இருந்தது. மற்றப்படி வழமையான ஆகஸன் படம்தான். “The Punisher” என்று 2004’ல் வந்த படமும் இதே காமிக்ஸ் புத்தக கதாபாத்திரத்தைப் பற்றியதுதான் என்றாலும், அந்தப் படத்திற்கும் இந்தப் படத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஆக்ஸன் விரும்பிகள் பார்க்கலாம். அதிகூடிய வன்முறைகள் இருப்பதால் சிறுவர்களிற்கான படமில்லை.

“Punisher: War Zone” IMDB இணைப்பு

பிப்ரவரி 24, 2009

Australia (2008): அழகான ஒரு அவுஸ்ரேலியப் பயணம்.

அவுஸ்ரேலியாவின் சுற்றுலாத்துறைக்கு ஒரு விளம்பரமாகக் கருதப்பட்ட/கருதப்படும் ஒரு படம். படத்தைப் பார்ப்பவர்கள் அவுஸ்ரேலியாவின் இயற்கை அழகில் மயங்கிவிடுவார்கள் என்று சொல்லப் பட்டது. என்றாலும் எனக்கு அப்படி மயக்கம் ஒன்றும் பெரிதாக வரவில்லை. பெரும்பாலும அவுஸ்ரேலிய பாலைவனப் பரப்பிலேயே படம் சுற்றி சுற்றி ஓடுகின்றது. படத்தின் கதையைப் பார்த்தால் இரண்டு புத்தகங்களை ஒன்றன் பின் ஒன்றாக படித்தது போல் அமைந்திருக்கின்றது.

படம் இரண்டாம் உலகயுத்த ஆரம்ப காலத்தில் நடைபெறுவதாக எடுக்கப் பட்டிருக்கின்றது. படத்தின் முதற் பகுதி இங்கிலாந்திலிருந்து அவுஸ்ரேலியாவுக்கு வருகின்ற Lady Sarah Ashley’ஐ (Nicole Kidman) ஒட்டிப் போகின்றது. அவுஸ்ரேலியாவில் இறைச்சிக்கான மாட்டுப் பண்ணையை இயக்கிவருகின்ற தனது கணவரின் பண நிலவரம் மோசமாகி வருகின்றது என்பதை அறியும் Sarah, அந்தப் பண்ணையை விற்றுவிட்டு இங்கிலாந்து திரும்ப கணவரை வைப்புறுத்தும் நோக்கத்தோடு அவுஸ்ரேலியா பயணமாகின்றார். இவர் அவுஸ்ரேலியாவின் ஒதுக்குப் புறமான இடத்தில் இருக்கும் பண்ணையை வந்தடைவதற்கு சற்று முதலாக இவரின் கணவர் கொலை செய்யப் படுகின்றார். சாட்சியங்கள் அந்தக் கொலைக்கு அவுஸ்ரேலிய ஆதிவாசிகளின் தலைவர்தான் காரணம் என்று காட்டினாலும், உண்மையில் அந்தக் கொலையைச் செய்தது போட்டிப் பண்ணையைச் சேர்ந்தவர்கள்தான் என்று அறிகின்றார் Sarah. நிர்வாகிக்க ஆணின் தலைமையின்றி Sarah’வின் பண்ணையை கைவிடும்படியான நிர்ப்பந்தம். ஆனால், பண்ணையை விற்பதற்கு கண்வரை வைப்புறுத்துவதற்கு அவுஸ்ரேலியா வந்த Sarah, அந்த பண்ணையை கைவிடுவதில்லை என தீர்மானிக்கின்றார். அதற்கு இரு காரணங்கள்: ஒன்று, கணவரை கொலை செய்தவர்களிடமேயே பணிந்து போகக் கூடாது என்ற ஒரு வீறாப்பு; மற்றது, பண்ணையில் வசித்து வரும் ஆதிவாசி சிறுவன் Nullah’வின் எதிர்காலத்தை பாதுகாக்கும் அவா (அப்போதைய காலத்தில் ஆதிவாசிச் சிறுவர்களை பெற்றோரிடமிருந்தும், சொந்தங்களிடமிருந்தும் பிரித்து, வலுக்கட்டாயமாக கத்தோலிக்க முகாமில் சேர்த்து விடும் பழக்கம் இருந்தது.) பண்ணையைக் காப்பாற்ற ஒரேயொரு வழி, இறைச்சிக்குத் தயாராக இருக்கும் பண்ணையின் மாட்டுகூட்டத்தை பண்ணையில் இருந்து நகரத்திற்கு ஓட்டிச்சென்று அங்கிருக்கும் இங்கிலாந்து இராணுவத்திற்கு விற்பனை செய்வது. பிரச்சனை என்னவென்றால், மாட்டுக்கூட்டமென்றால் சும்மா பத்து பதினைந்து என்று இல்லை 1,500 மாடுகள்! தவிர பண்ணையிலிருந்து நகரத்திற்கு செல்வதற்கு அவுஸ்ரேலியாவின் பாலைவனாந்தரங்களைக் கடந்து செல்ல வேண்டும். பண்ணையில் துணைக்கு ஆட்களும் போதுமானதாக இல்லை. இவ்வளவு பிரச்சனைகளின் மத்தியிலும் மனந்தளராத Sarah, மாட்டுப்பட்டி ஓட்டுவதை தொழிலாகக் கொண்ட Drover’இன் (Hugh Jackman) துணையுடன் அந்த கடும் பயணத்தில் இறங்குகின்றார். இந்தப் பயணத்தில் பல்வேறு சவால்களையும் துயரங்களையும் சந்தித்தாலும் வெற்றிகரமாக தனது முயற்சியை நிறைவேற்றுகின்றார் Sarah. தவிர அந்தப் பயணத்தின்போது அவுஸ்ரேலியாவின் மீதிலும், Drover’இன் மீதிலும் காதல் வசப்படுகின்றார். கூடவே அந்த ஆதிவாசிச் சிறுவன் Nullah’வை கிட்டத்தட்ட தத்தெடுத்துக்கொள்கின்றார். இவரது பயணத்தின் வெற்றியால் கணவரின் பண்ணை இவரின் கைக்கு வந்து விட, அவுஸ்ரேலியாவில் பல்வேறு பற்றுக்களை ஏற்படுத்திக் கொள்கின்ற Sarah அங்கேயே தங்கி விடத்தீர்மானிக்கின்றார்.

படத்தி இரண்டாம் பகுதி, Nullah’வை அதிகாரிகளின் வலையிலிந்து காப்பாற்றி தன்னோடு வைத்துக்கொள்ள Sarah எதிர் நோக்கும் சவால்கள் பற்றியது. பண்ணையை தக்க வைத்துக் கொள்ள Sarah எடுத்துக்கொண்ட முயற்சிகள் வெற்றியில் முடிந்து விட, போட்டிப் பண்ணையை சேர்ந்தவர்கள் தமது சூழ்ச்சியை Nullah’வினூடாக செயற்படுத்த தீர்மானிக்கின்றார்கள். ஒழித்து ஒழித்து வைத்திருக்கும் Sarah’விடமிருந்து Nullah’வை கடத்தி கத்தோலிக்க அதிகாரிகளின் கையில் சேர்த்து விடுகின்றார்கள் போட்டிப் பண்ணைக்காரர்கள். இதனால் Nullah அவுஸ்ரேலியாவிலிருந்து தள்ளியிருக்கும் ஒரு சிறு தீவிலிருக்கும் கத்தோலிக்கப் பள்ளியில் அனுப்பிவைக்கப் படுகின்றான். இதே சமயம், இரண்டாம் உலக யுத்தத்திற்கான ஏற்பாடுகள் அவுஸ்ரேலியாவிலும் பெருக்கெடுக்க இராணுவத்திற்கு உதவுவதற்காக பிரிந்து சென்றுவிடுகின்றார் Drover. துணையின்றி தனித்திருக்கும் Sarah’விடம், Nullah’வைக் மீண்டும் காணவேண்டும் என்றால் பண்ணையை எழுதித்தா என்று நிற்கின்றார்கள் போட்டிப் பண்ணைக்காரர்கள். Sarah அதற்கு தயாரான நிலையில் உலக யுத்ததின் முழுவிகாரமும் அவுஸ்ரேலியாவையும் தொடுகின்றது — எங்கும் ஜப்பான் நாட்டின் கொடூரக் குண்டுவீச்சு என்று காலம் மாறிவிட்ட நிலையில் Sarah, Drover, Nullah மூவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் அறியமுடியாமல், சேர்வதற்கான வழியும் தெரியாமல் திண்டாடுகின்றார்கள். இவர்கள் இணைகின்றார்களா இல்லையா என்பது மிகுதிக் கதை.

இருவதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அவுஸ்ரேலியாவின் நிலைமை படம் அழகாக எடுத்துக் காட்டுகின்றது. அந்த மாட்டு மந்தையை அவரிகள் அவுஸ்ரேலியாவின் குறுக்காக ஓட்டிச்செல்லும் போது அவுஸ்ரேலியாவின் வித்தியாசமான அழகை ரசிக்கவும் வாய்ப்புக் கிடைக்கின்றது. என்றாலும் கதையை சொல்லும் விதத்தில் எங்கேயோ ஒரு குறைபாடு. படம் பெரும்பாலும் Nullah’வின் பின்னணி விமர்சனத்தோடு போகின்றது. சற்றே நகைச்சுவையுடன் செல்லும் படத்தின் முற்பகுதிக்கு அது பொருத்தமாக இருந்தாலும், உணர்ச்சிகள் கொதிக்கின்ற பின்பாகத்திற்கு அது பொருந்தவில்லை. அந்த இரு பாக-கதையமைப்பும் தேவைதானோ என்று இருக்கின்றது (படம் தமிழ்ப் படம் போல் 2.45 மணித்தியாலம் நீளம்!) Special effect’உம் (படத்தில் எக்கச் சக்கம்) தற்போதைய ஹாலிவூட் தராதரத்தில் இல்லை.

குறைகள் இருந்தாலும் அலுப்பில்லாமல் போகின்ற படம். Nicole Kidman’தான் படத்தின் மூலக்கதா பாத்திரம் என்றாலும், Hugh Jackman வரும் பாகத்தில் எல்லாம் திரையை முற்றுமுழுதாக கொள்ளை கொண்டு சென்று விடுகின்றார். அந்த பாரிய குண்டு வீச்சின் பிறகு தனது கறுப்பின நண்பரோடு உள்ளூர்த் தவறணையில் சாராயம் அருந்த முற்படு காட்சியில் நடிப்பின் உச்சத்தைத் தொடுகின்றார். பொழுது போக்கிற்காக தாராளமாகப் பார்க்கலாம்.

“Australia” IMDB இணைப்பு

பிப்ரவரி 17, 2009

Taken (2008): மகளைத் தொலைத்த அப்பாவின் சீற்றம்.

சில படங்கள் வெளியுலகெல்லாம் ஓடி, DVDயிலும் வந்த பிறகுதான் வட அமெரிக்க வெள்ளித்திரைகளிற்க்கு வரும் — அவ்வாற படங்களில் இதுவும் ஒன்று. பிந்தி வந்தாலும், வெகுவாக பாராட்டுக்களுடன் ஓடிக்கொண்டிருக்கின்றது. சாதாரணமான ஒரு ஆக்ஸன் கதைதான். என்றாலும் சிறந்த ஒரு முன்னணி நடிகர், செறிவான இயக்குணர், விறுவிறுப்பான படத்தொகுப்பு என்பவற்றை புகுத்திவிட கிடைக்கின்றது காற்றெனப் பறக்கின்ற ஒரு ஆக்ஸன் படம்.

Bryan Mills (Liam Neesan) ஒரு CIA உளவாளி. வாழ்க்கையின் பெரும் பகுதியை ஒற்றுவேலையில் செலவழிக்கும் இவரிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டு, இன்னொரு கல்யாணம் செய்துகொண்டு மகளையும் அழைத்துகொண்டு சென்றுவிடுகின்றார் இவரது மனைவி. காலம்கடந்தபின் ஞானோதயம் பெறும் இவர் மனைவியைத் தொலைத்தாலும் மகளைத் தொலைக்க மாட்டேன் என்ற முடிவுடன் CIA வேலையை விட்டுவிட்டு மகள் இருக்கும் அதே நகரில் வசித்துவருகின்றார். இப்படியான ஒரு சிக்கலான பிணைப்பை இவர் காப்பாற்றிக் கொண்டிருக்க, teenage பெண்ணான இவரது மகள் Kim (Maggie Grace) நண்பிகளுடன் France’ற்கு போகப் போகின்றேன் என்று வந்து நிற்கிறாள். வயது வந்தவர்கள் துணையில்லாமல் தொலைதூரத்திற்கு மகளை அனுப்புவது Bryan’ற்கு சற்றும் விருப்பமில்லாவிடினும், மகளினதும் முன்னாள் மனைவியினதும் வற்புறுத்தல்களினால் அரை மனதுடன் சம்மதிக்கின்றார். France விமான நிலையத்தில் வந்து இறக்கும் Kim’ஐயும் அவளது நண்பியையும் இலக்கு வைக்கின்றது பாலியலிற்காக பெண்களைக் கடத்தும் ஒரு குழுவென்று; இவர்களை பின் தொடர்ந்து வந்து இவர்களது தங்குமிடத்தையும் கண்டுகொள்கிறது. மகளை தனியே அனுப்பிவிட்டு தொடர்ந்து பதற்றத்தில் இருக்கும் Bryan, மகளிற்கு தொலைபேசி அழைப்பெடுக்கின்றார். இவர் Kim’உடன் உரையாடிக்கொண்டிருக்கும் அதேவேளையில் அந்தக் கடத்தல் கும்பல் வீடுடைப்புச் செய்து இரு பெண்களையும் கடத்த முனைகின்றது. ஆயிரம் கிலோமீற்றர்களுக்கு அப்பால் இருந்து கொண்டு அந்த கடத்தலை தவிர்க்க முடியாதென உணர்கின்ற Bryan, இருக்கும் சில நொடிகளிற்குள் கடத்தல்காரர்களின் சில அங்க அடையாளங்களை Kim’இடமிருந்து கேட்டறிகின்றார். அடுத்து Kim கடத்தப் பட்டுவிட, மகளை கண்டுபிடிக்கும் வெறியுடன் France’ற்கு வந்து வேட்டையைத் தொடங்குகின்றார் Bryan. குறுகிய காலத்திற்குள் மகளை கண்டுபிடிக்கவில்லையென்றால், பிறகு மகளின் விலாசமும் இருக்காது என்பதான ஒரு சூழ்நிலை. அவரின் பதட்டம், படத்தின் ஓட்டத்திற்கும் வந்துவிட பிறகு ஒரே விறுவிறுப்புத்தான்.

Liam Neeson ஒரு சிறந்த நடிகர். Batman Begin’இல் வில்லனாக இவரைப் பார்த்திருப்பீர்கள். 50 வயது தாண்டியும் ஆக்ஸன் பாத்திரத்தில் களைகட்டியிருக்கின்றார். மகளினுடனான அந்த தொலைபேசி உரையாடலில், குரலாலேயே நடித்திருக்கின்றார் என்று சொல்லலாம். படம் Quantum of Solace, Bourne Identity என்று முன்னைய பல ஆக்ஸன் படங்களை ஞாபகமூட்டினாலும் படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது அவற்றின் ஞாபகம் வந்து குழப்பவில்லை. ஆக்ஸன் விரும்பிகள் நம்பிப் பார்க்கலாம்.

“Taken” IMDB இணைப்பு

செப்ரெம்பர் 4, 2008

War, Inc. (2008): பாதை தவறிய படம்

நல்லதொரு நோக்கத்தோடு படத்தை எடுக்கத்தொடங்கிவிட்டு பாதைதவறித் தடுமாறியிருக்கின்றார்கள். உலகத்தில் நடக்கும் போர்கள் எல்லாவற்றிற்கும் பின்னால் வல்லரசுகளின் வணிக இலாபமே உள்ளது என்பதை ஒரு கடி நகைச்சுவை படமொன்றின் மூலம் காட்ட முயன்றிருக்கின்றார்கள். கடைசியில் கடியும் நகைச்சுவையும் இருக்கின்றதே ஒழிய சொல்லவந்த செய்தி பின்புலத்திற்குப் போய்விட்டது.

காசிற்காக கொலைசெய்வது Brand Hauserஇன் (John Cusack) வேலை. போரினால் நொந்து போயிருக்கும் (கற்பனை நாடு) Turaqistan நாட்டில் போட்டி நிறுவனத்தின் பெரிய தலையைத் தட்டுவதற்காக இவரை அனுப்புகின்றது Tamerlane நிறுவனம். கொலையை செய்வதற்கு திரைமறைப்பு மத்திய கிழக்கின் புகழ்பெற்ற பாடகி Yonicaஇன் (Hilary Duff) கல்யாண விழா. ஏற்கனவே தனது தொழிலில் சந்தோசமற்றிருக்கும் Hauser, செய்தியாளர் Natalie மீது (Marisa Tomei) காதலில் விழுகின்றார். இவர்களது வாழ்கைகள் அந்த சில நாட்களில் எவ்வாறான திருப்பங்களிற்குள்ளாகின்றது என்பது படத்தின் கதை.

எடுத்துக்கொண்ட political satire என்ற கருவை அடிக்கடி விட்டு விலத்துகின்றது படம். நடிகர்களில் எவ்வித பிழையும் இல்லை (பாடகி/நடிகை Hilary Duff கூட தனது பங்கை பிழையில்லாமல் செய்திருக்கின்றார்). கதாசிரியர்தான் குழம்பியிருக்கின்றார். அந்தச் சொதப்பலைவிட்டால் படம் பரவாயில்லை. நேரம் கடத்துவதற்குப் பார்க்கலாம். படத்தின் கருவைப் பற்றி நீங்கள் தீவிரமாக இருப்பீர்கள் என்றால் Lord of War (2005) போன்ற படங்களைப் பார்ப்பது நல்லது.

War, Inc. IMDB இணைப்பு

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.