திரை விமர்சனம்

ஏப்ரல் 2, 2009

The Spirit (2008): படத்தில் உயிரோட்டமே இல்லை

காமிக்ஸ் புத்தகங்களை வெள்ளித்திரைக்கு கொண்டுவருவது அண்மையில் வாடிக்கையாகிவிட்டது. அதில் இதுவும் ஒன்று. “Sin City”, “300” போன்ற வித்தியாசமான வெற்றிப்படங்களைத் (அவைகளும் காமிக்ஸ் புத்தகங்களிலிருந்து திரைக்கு வந்தவைதான்) தந்த இயக்குணர் Frank Miller‘இன் இன்னொரு படைப்பு இது. Sin City எடுக்கப் பட்ட அதே விதத்தில் இந்தப் படத்தையும் எடுத்திருக்கின்றனர். ஆனால், தனியே திரைபட வடிவமைப்பு மட்டும்தான் Sin City போன்று, அதைத்தவிர மற்ற எல்லாவற்றிலும் கோட்டை விட்டுவிட்டார்கள்.

காவல்துறை அதிகாரி Denny (Gabriel Macht), கடமையின் போது சுட்டுக்கொல்லப் படுகின்றார். வீரமரியாதையுடன் ஆளைப்புதைத்து விட்டு வந்தால், இரவோடு இரவாக உயிர்பெற்று புதை குழியிலிருந்து எழும்பி வருகின்றார். உயிர் பெற்று வருவது மட்டுமில்லை, இலகுவாக காயங்களிலிருந்தும், வலியிலிருந்தும் குணமடையும் உடலையும் பெற்றிருக்கின்றார். இதன் பின், தனது பழைய வாழ்விற்கு திரும்பச் செல்லாது, “The Spirit” என்னும் பெயரோடு சட்டத்தைக்காக்கும் முகமூடி அணிந்த வீரனாக உருவாகின்றார். இவரிற்கு எதிராக இவரைப் போன்றே உடல்வாகு கொண்ட “The Octopus” (Samuel L. Jackson) என்னும் வில்லன். முற்றுமுழுதாக சாகாவரம் பெற்று, கடவுளாக வரவேண்டும் என்பது Octopus’இன் கனா. அதற்கு, சரித்திரத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்து எடுக்கப்பட்ட Hercules’இன் இரத்தத்தை தேடி அலைகின்றார் Octopus. இதற்கு இடையில், Denny’இன் பழைய காதல், புதுக்காதல், இடைக்காதல் என்று மணத்திற்கு வரிசையாய் பெண்குழாம். அவ்வளவு இருந்தும் பார்ப்பவர்களிற்கு இடையில் தூக்கம் வந்து விடுகின்றது!

படம் வருவதற்கு முன்பு எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு. திரைக்கு வந்தபின் சப்பென்று போய்விட்டது. ஹாலிவூட்டின் பெருந்தோல்விகளில் இதுவும் ஒன்று. படத்தின் பரபரப்புக்கு ஒரு காரணம், அதில் இருக்கும் நடிகைகள் பட்டாளம்: Sarah Paulson, Eva Mendis, Scarlett Johansson, Stana Katic, Paz Vega, Jaime King என்று வரிசையாக பல கவர்ச்சிகரமான நடிகைகள். கடைசியில் பார்த்தால், படத்தில் எவருமே பெரிதாக கவர்ச்சிகரமாகத் தெரியவில்லை (அப்படியான ஒரு ஓளிவடிவம்.) படத்தி்ன் கதை சிறுபிள்ளைத்தனமானது, ஆனால் படம் சிறுவர்களிற்கு உகந்தது அல்ல. இடைக்கிடை நகைச்சுவை போல ஏதோ ஒன்றை முயல்கின்றார்கள். பார்ப்பவர்களிற்கு அங்கே சிரிக்கவேண்டுமோ, இல்லையோ என்று ஒரே தடுமாற்றம். கதையும், கதைவசனமும் அப்பிடியென்றால், நடிப்பைப் பற்றிக் கேட்கத்தேவையில்லை. Sarah Paulson’ற்குத்தான் அங்கே நடிப்பத்ற்கு சிறியதொரு வாய்ப்பு. Samuel L. Jackson’ஐப் போட்டு நாறடித்திருக்கின்றார்கள்.

பார்ப்பதற்கு அந்த நடிகைகளைத்தவிர படத்தில் ஒன்றுமே இல்லை. அந்த நடிகைகளைக்கூட, தனித்தனியே, அவர்களின் வேறு படங்களில் பார்ப்பது நல்லது. இதில் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

“The Spirit” IMDB இணைப்பு

ஏப்ரல் 1, 2009

RockNRolla (2008): லண்டன் தாதாக்களின் ஆடு புலி ஆட்டம்.

முழங்கால் அளவுக்கு தண்ணி இருக்கும் குட்டைக்குள்ள எருமை மாட்டை விட்டு குழப்பின மாதிரி ஒரு கதை. அந்தளவு குழப்பத்தையும் ஒரு ரசனையோடு எடுத்திருக்கிறாங்கள் பாருங்கோ, அதுதான் அருமை! எழுத்தாளர், இயக்குணர் Guy Ritchie‘இன் முன்னைய படங்களைப் பார்த்திருந்தீர்களென்றால் உங்களிற்கு விளங்கும். பாதாள உலகு (underworld) தாதாக்களை மையமாக வைத்த படம்தான். படத்தில நல்ல மனுசன் எண்டு ஒருத்தரும் இல்லை.

லென்னி எண்டு பெரியதாதா. லண்டனில் எந்த காணி, நிலம் சம்பந்தமான கள்ள வியாபாரம் என்றாலும் இவரின் கைக்குள்ளால்தான் போகவேணும். சின்னதா வியாபாரம் தொடங்க இவரிட்ட காணிவாங்கி மாட்டுப்பட்ட சின்னதொரு திருட்டுக் கும்பல் “the wild bunch”. லென்னியின்ற குழியுக்குள்ள மாட்டுப்பட்ட இவையள் இப்ப லென்னிக்கு கொஞ்ச மில்லியன் பவுண்ட்ஸ் கடன்! இதுக்குள்ள ரக்ஷ்யாவில இருந்து வருகைதருகின்றார் ரக்ஷ்யா-தாதா யூரி. லண்டனில வியாபாரத்தை பரப்புவதற்கு காணி, நிலம் வாங்க லென்னியின் உதவியை நாடுகின்றார் யூரி. சட்ட திட்டங்களையெல்லாம் சரிபடுத்தி யூரியின் முதலீட்டுக்கு வழிபண்ண சுளையா ஏழு மில்லியன் பவுண்ட்ஸ் கேட்கிறார் லென்னி. அதுக்குச் சம்மதிச்சது மட்டுமில்லாம “இந்தா, என்ர ராசியான ஓவியம் இது, இதையும் கொஞ்ச நாள் வைச்சிரு” எண்டு அதை லென்னியிடம் குடுத்து அனுப்புகிறார் யூரி. இப்ப ஏழு மில்லியன் காசு திரட்ட வேண்டிய தேவை யூரிக்கு. தன்ரை கணக்காளர் ஸ்டெல்லாவுக்கு அழைப்பு எடுத்து, காசுக்கு வழி பார் என்கிறார் யூரி. காசுக்கு வழி பார்த்த கையோடு, தன்ரை பங்குக்கு தானும் கொஞ்சம் விளையாட நினைக்கின்றார் ஸ்டெல்லா. யூரியின் ஆட்களை காசை எடுத்து வா எண்டு அனுப்பி விட்டு, உள்ளூர் கொள்ளைக்க்கூட்டம் ஒண்டை வைத்து அந்தக் காசை வழிப்பறி பண்ணுகின்றார். அட, அந்த உள்ளூர் கொள்ளைக்கூட்டம் ஆரெண்டு பார்த்தால் லென்னியிடன் ஏமாந்த “the wild bunch”தான்! இதுக்குள்ள லென்னியின் அலுவலகத்திலிருந்த யூரியின் ஓவியம் திடீரென தலைமறைவு! களவெடுத்தது ஆராக இருக்கலாம் எண்டு ஆராய்ந்து பார்த்தால், செத்துவிட்டேன் எண்டு புரளியைக் கிளப்பிவிட்டு தலை மறைவாகிப்போன லென்னியின் தத்துபிள்ளை, முன்னாள் பாடகன், போதைப்பொருள் அடிமை ஜொன்னி. லண்டனின் எங்கயோ ஒரு பொந்துக்குள்ள ஒளிந்து இருக்கும் ஜொன்னியைத்தேடி லென்னி இங்க அலைய, ஏழு மில்லியனை வழிப்பறி கொடுத்த யூரி, தனது ராசியான ஓவியம் கைமாறியதே அதற்கு காரணம் எண்டு தீர்மானிக்கின்றார். இப்ப ஓவியத்தை திருப்பித்தா எண்டு யூரி கேட்க, அது துலைஞ்சு போச்சு எண்டு சொல்ல ஏலாமல் லென்னி திண்டாட, லென்னி டபிள்-கேம் விளையாடுகின்றார் என யூரி சந்தேகப் படத்தொடங்குகின்றார். கொஞ்சம் கொஞ்சமா தனது விசுபரூபத்தைக் காட்டத்தொடங்குகின்றார் யூரி. மறுபக்கத்தில், அப்பாவுக்கு அலுப்படிக்க எண்டு கடத்திக் கொண்டு வந்த ஓவியமோ ஜொன்னியின் கையை விட்டுவிட்டு தப்பி லோக்கல் சந்தைக்கு வந்து விடுகின்றது! இதுக்கெல்லாம் இன்னொரு பக்கத்தில், சின்னத் தாதாக்களை போலிசுக்கு போட்டுக் குடுக்கும் ரகசியாமான ஒருவன்; அவனை ஆரெண்டு கண்டிபிடிக்க “wild bunch” குழுவில் ஒருவன் தீவிர முயற்சி.

இப்பிடியான ஒரு இடியாப்பச் சிக்கல் கதையை நகைச் சுவையோடு, விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கின்றார்கள். மிகவும் வேகமான, பக்கா லண்டன் தாதா ஸ்டையில் கதை. அது அரைவாசி ஒரு இளவும் விளங்கவில்லை என்பதுதான் பிரச்சினை! கொஞ்சம் கவனம் பிசகினாலும் கதை விளங்காமல் போய்விடுமோ எண்டு பயப்பிடும்படியான வேகம். அவ்வளவு சிக்கல் கதைக்குள்ளேயும், லாஜிக் ஒன்றுமே பிசகவில்லை. படம் முழுதாக Guy Riitche’யின் படம்தான் என்றாலும், நடிகர்களும் காலைவாரவில்லை. அந்த அந்த பாத்திரங்களில் அனைவரும் நன்றாக பொருந்திப் போகின்றார்கள். படத்தில் ஆக்ஸன் மிகச் சிறிய அளவில்தான், மற்றப்படி ஒரு Crime கதைதான். வித்தியாசமான படத்தைப் பார்க்க ஆசைப் படுகின்றவர்கள் சந்தோசமாக பார்க்கக் கூடிய படம்.

“RockNRolla” IMDB இணைப்பு

மார்ச் 31, 2009

The Other End of the Line (2008): சிரியாவின் ஹாலிவூட் படம்

அண்மைக் காலமாக இந்தியத் துணைக்கண்டத்தின் தாக்கம் ஹாலிவூட்டில் தெரியத்தொடங்கியிருக்கின்றது. “Inside Man” ரகுமானின் “சய்ய சய்யா” இசையோடு ஆரம்பித்தது; அண்மையில் வந்த “The Accidental Husband” பல ரகுமான் இசையை கொண்டிருந்ததுடன், ஒரு முழு “தெனாலி” படப் பாட்டோடு முடிவடைந்தது. ஆஸ்கார் வரை சென்ற “Elizabeth: The Golden Age“இன் பின்னணி இசையில் ரகுமானின் பங்கும் உண்டு. இவ்வாறு ரகுமான் ஹாலிவூட்டில் நுளைந்து பல காலம்; அவருக்குக் கிடைத்த ஆஸ்கார், வெளிப்படையான ஒரு அங்கீகாரம் மட்டுமே. இவர் தவிர அடுத்த பிரபல்யம் ஐஸ்வர்யா ராய் — “Bride & Prejudice (2004)“இலிருந்து “The Pink Panther 2 (2008)” வரை பல ஹாலிவூட்டில் படங்களில் தோன்றியிருக்கின்றார். இப்போது கடைசியாக பாலிவூட்டிலிருந்து, ஹாலிவூட்டிற்கு இறக்குமதி நம்ம சிரியா சரன்.

சிரியா இருக்கிறார் என்ற ஒரு காரணத்திற்காகவே இந்தப் படத்தைப் பார்த்தது (நான் சிரியா ரசிகன் இல்லை என்றாலும்.) ம்ம்ம்…. சிரியாவுக்கு இனிவரும் காலத்திலேயாவது நடிப்பதற்கு நல்லவேறு ஏதாவது படம் கிடைக்கும் என்று நம்புவோமாக; இன்னொரு பக்கம் யோசித்தால், இந்தியாவில இவர் நடித்த படங்களோடு ஒப்பும்போது இது எவ்வளவோ பரவாயில்லை என்றும் தோன்றுகின்றது (எனக்குத் தெரிந்த வரையில்.)

சாதாரண ஹாலிவூட் (அல்லது பொலிவூட்) காதல் படம். பம்பாயிலிருக்கும் அமெரிக்க வங்கியொன்றிற்கான தொலைபேசி மையத்தில் (call center) வேலை செய்பவர் பிரியா (சிரியா சரன்.) மனது நிறைய கனவுகளோடு இருப்பவரிற்கு, பெற்றோர் வற்புறுத்தலின் பேரில் திருமணம் நிச்சயமாகியிருக்கின்றது. இவ்வாறு இருக்கும் காலத்தில் அமெரிக்காவில் இருக்கும் Granger (Jesse Metcalfe) என்னும் வாடிக்கையாளரோடு தொலைபேசியில் உரையாடும் இடத்தில் காதல் வயப்படுகின்றார். தான் San Fransisco’வில் இருப்பதாக பொய் சொல்லும் பிரியா, Granger வியாபார விடயமாக San Fransisco செல்வதையும் அறியுமிடத்து, ஒரு திடீர் தைரியத்தில் விமானமேறி அவரைச் சந்திக்க அமெரிக்கா சென்றுவிடுகின்றார் — வீட்டாரிற்குத் தெரியாமல் (பம்பாயில் அப்பிடி எல்லாம் செய்யலாமோ!!?) பிறகென்ன வழமையான மோதல், காதல், ஊடல், கூடல் என்று படம் போகின்றது (வரி பிசகாது!)

படத்தில் கதைக்கோ, நடிப்புக்கோ பெரிதாக இடம் இல்லையென்றாலும், படத்தின் முன்னணிகள் இருவரும் இளமைத் துள்ளலில் இருப்பதனால், படம் பார்ப்பதற்கு வெறுப்பாக இல்லை. சிரியா இரண்டு விதமாக ஆங்கிலத்தை பேசுவது (accent) நன்றாக இருக்கின்றது (அது உண்மையாகவே அவரது குரல் என்றால்.) பிரியாவின் அப்பாவாக வரும் அனுபம் கெர் ஹிந்தியில் பெரிய நடிகர் என்று நினைக்கின்றேன். என்றாலும் அவர் ஆங்கிலத்தில் உரையாடும்போது எங்கேயோ உதைக்கின்றது. அவரது ஆங்கிலம் பிழையென்று இல்லை. என்றாலும், இந்தியாவில் நடக்கும் சம்பவங்களை இந்திய மொழியிலேயே எடுத்திருக்கவேண்டும். அதை ஆங்கிலத்தில் எடுக்கும் போது ஒருவருமே கதாபாத்திரங்களோடு ஒட்டவில்லை. பம்பாயில் எல்லாரும் இப்ப ஆங்கிலத்தில்தான் பேசுகின்றார்களோ தெரியாது! காதல் பித்தர்களும், சிரியா கிறுக்கர்களும் பார்க்கலாம். மற்றவர்கள் ஒதுங்கிக் கொள்ளவும்.

“The Other End of the Line” IMDB இணைப்பு

மார்ச் 27, 2009

Marley & Me (2008): ஒரு நாயின்/மனிதனின் கதை.

நட்புக்கும் விசுவாசத்திற்கும் பெயர் பெற்றது நாய்கள். ஒரு நாயிற்கும் ஒரு குடும்பத்திற்கும் இடையிலான பிணைப்பை அழகாக எடுத்துக்காட்டுகின்றது இந்தப்படம். படம் John’உம் (Owen Wilson) Jennifer’உம் (Jennifer Aniston) திருமணம் முடிப்பதோடு ஆரம்பிக்கின்றது. இருவரும் பத்திரிகைத் தொழில் சார்ந்தவர்கள். முழு எதிர்காலத்தையுமே விலாவாரியாக திட்டமிட்டு நடத்திவருபவர் Jennifer. ஒரு சிறந்த களமுனை நிருபராக வர வேண்டும் என்பதை மட்டுமே ஒரே கனாவாகக் கொண்டிருக்கும் John, மனைவியின் திட்டமிடலிற்கு இயைந்து நடந்து வருகின்றார். திருமண வாழ்வின் முதற்கட்டமாக, Florida மாநிலத்தில் வேலையும் எடுத்து குடியேறுகின்றனர். இப்போது திட்டத்தின் அடுத்த கட்டம் — பிள்ளை பெறுவது. தனது கனா இன்னமும் நனாவாகாத நிலையில், பிள்ளை குட்டிகள் என்று மேலதிகப் பொறுப்பை ஏற்க John’க்கு தயக்கம். எனவே, நண்பனின் ஆலோசனைப்படி, மனைவிக்கு ஒரு நாய்க்குட்டியை பரிசளித்து மனைவியின் கவனத்தை திசைதிருப்ப முயற்சிக்கின்றார். நாயகளிலேயே மிகவும் பணிவானது Labrador வகை நாய்கள்தான் என்று சொல்லப்பட, அதிலேயும் மிகவும் சோர்ந்து போய்யிருக்கும் ஒரு நாய்க்குட்டியை தத்தெடுக்கின்றனர் John’உம் Jennifer’உம். Marley என பெயரிடப்படும் இந்த நாய்க்குட்டியோடு ஆரம்பமாகின்றது அவர்களது வாழ்வின் திருப்பம், இன்பம், துன்பம் எல்லாமே. சாதுவாக இருந்த குட்டி, மகா குழப்படிக்கார நாயாக வளருகின்றது. அது செய்யும் அநியாயம் படத்தின் முன்பாகத்தின் அட்டகாசமான கலகலப்பு. எவ்வளவுதான் பிற்போட்டாலும், ஒரு கட்டத்தில் பிள்ளைகள் என்ற பொறுப்பை எதிர்கொண்டே ஆகவேண்டும் எனும்போது John’இனதும், படத்தினதும் கலகலப்பு நின்று போகின்றது. பிள்ளைகள் குடும்பத்தில் வந்து சேர, Jennifer’இன் பல்லாண்டுத் திட்டங்களும் நொருங்கிப்போகின்றன. இதற்குள் இன்னமும் நிறைவேறாத John’இன் கனவு வேறு. இவ்வாறாக இவர்களின் குடும்பம் வாழ்க்கைச் சுழியில் சுற்றிச் சுழல்வதும், அதற்குள் Marley ஒரு மறைமுகமான நங்கூரமாக இருப்பதையும் படம் அழகாக எடுத்துக் காட்டுகின்றது.

படத்தின் சுபாவம், John’இனதும், Marley’இனதும் வயதிற்கு ஏற்றவாறாக மாறிக்கொண்டு செல்கின்றது: துடுக்குடனும், நகைச்சுவையுடனும் ஆரம்பிக்கும் படம், கலகலப்பே இல்லாத ஒரு பகுதியினுள்ளாகச் சென்று, சாந்தமாக முடிவடைகின்றது; கடைசி பத்து நிமிடத்திற்கு தவிர்க்க முடியாமல் கண்கலங்க வைக்கின்றது. “ஓ” என்று அழுகின்ற காட்சிகளை வைத்தால்தான் படம் உணர்வுபூர்வமாக (emotional) இருக்கமுடியும் என்பது தவறு என்று காட்டியிருக்கின்றார் இயக்குணர். முதன்மை நட்சத்திரங்கள் இருவரும் கதாபாத்திரங்களிற்கு அழகாக உயிரளித்திருக்கின்றார்கள். கொஞ்ச நேரத்திற்கு வரும், குழந்தை நட்சத்திரங்கள் கூட சிறப்பாகச் செய்திருக்கின்றார்கள்.

படம் நாயைப் பற்றியதா, அல்லது John’ஐப் பற்றியதா என்று ஒரு கேள்வி வரலாம். என்றாலும், சற்றே ஆறஅமர இருந்து யோசித்துப் பார்த்தால், John’இன் வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும், Marley எவ்வாறு நிர்ணயிக்கின்றது என்பதை உணரலாம். ஒருவிதத்தில், Marley எனும் நாய், John என்ற மனிதனின் ஒரு குறியீட்டு வடிவம் (symbolic form) என்று கூட வாதாடலாம். படம் கவலையாகத்தான் முடியும் என்பதை, படத்தின் முதலாவது காட்சியிலிருந்தே அறிந்து கொள்ளலாம். கவலையாக முடிந்தாலும், மனம் நிறைவாக இருக்கின்றது. தாராளமாகப் பார்க்கலாம். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் அனைவருமே இதை சரிசமமாக இரசிப்பார்கள் என்று நினைக்கின்றேன்.

“Marley & Me” IMDB இணைப்பு

மார்ச் 26, 2009

Inkheart (2008): எழுதப்பட்ட வார்த்தைகளின் சக்தி

Fantasy எனப்படும் மந்திர தந்திரங்கள் கலந்த நாவல் வகை இங்கே மேற்குலகில் பிரபல்யம். இப்போது, Lord of the Rings, Harry Potter பட வரிசைகளின் வெற்றிக்குப் பிறகு, இவ்வகையான கதைகள் திரையரங்குகளையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கின்றன. இவ்வாறான ஒரு படமே Inkheart ஆகும். படம் 12 வயது சிறுமி Maggie’ஐப் (Eliza Bennett) பின்தொடர்ந்து போகின்றது. தான் மூன்று வயதாக இருக்கும் போது தனது தாய் Resa (Sienna Guillory) தன்னை கைவிட்டுவிட்டு ஓடிப்போய் விட்டதாக நம்பிக்கொண்டிருக்கின்றாள் Maggie. என்றாலும் உண்மை அதுவல்ல. Maggie’யின் அப்பா Mortimer’க்கு (Brenden Fraser) ஒரு அமானுக்ஷ்யமான சக்தியுண்டு. இவர் எந்த கதைப்புத்தகத்தை வாய்விட்டு வாசிக்கின்றாரோ அதில் இருக்கும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் எல்லாம் நிஜத்திற்கு வந்து விடும் (என்ன “Bedtime Stories” ஞாபகம் வருகுதோ?) அதில் இன்னொரு அம்சம் என்னவென்றால் பல விடயங்கள் புத்தகத்திலிருந்து நிஜத்திற்கு வந்துவிட, நிஜத்திலிருக்கும் ஒரு மனிதர் புத்தகத்துக்குள் போய்விடுவார்! தனது சக்தியைப் பற்றி அறியாத Mortimer, மூன்றுவயதான Maggie’க்கு “Inkheart” எனும் புத்தகத்தை வாசிக்க, கதைப் புத்தகத்திலிருந்து Dustfinger (Paul Bettany) எனும் ஒரு நெருப்பு வித்தைக்காரனும், Capiricon (Andy Serkis) எனும் வில்லன் பாத்திரமொன்றும் இவ்வுலகத்திற்கு வந்து விடுகின்றனர். இவர்களிற்குப் பதிலாக Maggie’இன் அம்மா புத்தகத்தினுள் சென்று விடுகின்றார். Dustfinger புத்தகத்திலிருக்கும் தனது குடும்பத்துடன் திரும்ப இணையத் துடித்தாலும், புத்தகத்தினுள் திரும்பப்போக விருப்பமில்லாத Capricon, அந்தப் புத்தகத்தை பறித்துக்கொண்டு தலைமறைவாகிவிடுகின்றான். Resa’வை திரும்ப இவ்வுலகத்திற்கு கொண்டுவருவதற்கோ அந்தப் புத்தகம் வேண்டும். ஆனால் அந்தப் புத்தகமோ கிடைப்பதற்கு அரிய ஒரு பழைய புத்தகம். எனவே ஒன்பது ஆண்டுகளாக அந்தப் புத்தகத்தைதேடி உலகத்தின் மூலைமுடுக்களில் இருக்கும் பழைய புத்தகக்கடையெல்லாம் ஏறி இறங்கிக்கொண்டிருக்கின்றார் Mortimer. கூடவே உண்மையான காரணம் தெரியாத Maggie’யும்.

இவர்கள் புத்தகத்தைத் தேடிக்கொண்டிருக்க, இவர்களைத் தேடிக்கொண்டிருக்கின்றார்கள் Dustfinger’உம், Capricon’உம். குடும்பத்துடன் மீள இணைவதற்காக Dustfinger’உம், வேறு கதைப்புத்தகத்தகங்களிலிருந்து செல்வங்களை வரவழைப்பத்தற்காக Capricon’உம். இந்த இரு குழுவும், Maggie’ஐயும் தகப்பனாரையும் நெருங்க, Resa’வின் மாமியார் Elinor (Helen Mirren) வீட்டில் தஞ்சம் புகுகின்றனர் Maggie’யும் Mortmier’உம். கடைசியாக அதுவும் சரிவராது போக, குடும்பத்தோடு Capricon’இடன் அகப்படுகின்றனர். பிறகென்ன வழமையான சாகசங்கள், சில ஆச்சரியங்கள், நகைச்சுவைகள் எல்லாவத்தையும் கலந்து யாவரும் நலம் என்று கதையை முடிக்கின்றார்கள்.

அவ்வளவு பெரிய நட்சத்திரப் பட்டாளம் இருந்தாலும், படம் மிகவும் சாதாரணம். படத்தின் சில அம்சங்கள் புதிதாக, இரசிக்கக கூடியதாக இருக்கின்றது. special effects’உம் பரவாயில்லை. பொதுவாக தொய்வில்லாது, அலுப்படிக்காது படம் போகின்றது. என்றாலும் புதியது என்று பெரிதாக ஒன்றும் இல்லை. அண்மையில் வந்து நொடுங்கிப்போன “Eragon“, “Golden Compass” படங்களின் வரிசையில் இதையும் சேர்த்துவிடலாம். படத்தைப் பார்க்கும்போது, அதன் மூலமான புத்தகத்தைப் படிக்கவேண்டும் என்ற ஆவல் வருவது உண்மை. என்றாலும் அந்த நாவல்கள் ஜேர்மன் மொழியில் இருப்பது துரதிஸ்டம். படம் பொதுவாக சிறாருக்கான படம்தான். சும்மா நேரத்தைப் போக்காட்டுவதற்குப் பார்க்கலாம்.

“Inkheart” IMDB இணைப்பு

மார்ச் 24, 2009

Zack and Miri Make a Porno (2008): பேசாமல் அதையே எடுத்திருக்கலாம், இந்தப் படத்தை விட்டுவிட்டு.

ஹாலிவூட்டில் இடைக்கிடை நகைச்சுவைக்கும் அருவருப்புக்கும் இடையில் நின்று ஊசலாடுகின்ற மாதிரி சில படங்கள் வரும். அந்த வகையில் இதுவும் ஒன்று. படம் தணிக்கையின் கத்திரிக்கோலில் இரண்டு தரம் மாட்டுப்பட்டு கடைசியாக ஒருவாறு ‘R’-முத்திரையுடன் வந்திருக்கின்றது. இந்த படத்தின் முகப்புப் படத்தைக்கூட (poster) தணிக்கை அனுமதிக்காமல் கடைசியாக இங்கே பக்கத்தில் காட்டப்பட்டிருக்கும் படத்தோடு திருப்திப்பட வேண்டியதாயிற்று! இந்த போஸ்டர்தான் படத்தில் மெச்சக் கூடிய ஒரே ஒரு விடயம்.

படத்தின் கதை மிகவும் எளிமையானது — பள்ளிக்கூடத்திலிருந்தே நண்பர்கள் Zack’உம் (Seth Rogen) Miri’யும் (Elizabeth Banks). வாழ்க்கையில் பொதுவாக எதிலும் முன்னேறாத இருவரும் சிறுசிறு வேலைகளைச் செய்து கொண்டு ஒரு வீட்டில் இரு அறையில் வசித்துவருகின்றார்கள். பணத்தை சரியாக பாவிக்கத்தெரியாத இருவரும், கையில் காசில்லாது, இருக்கின்ற வீட்டிலிருந்து துரத்தப் படும் நிலையில் இருக்கின்றார்கள். வேறு ஒரு உன்னத யோசனையும் வராத நிலையில் ஒரு நீலப்படத்தை (porn) எடுத்து அதில் நடிக்கவும் தீர்மானிக்கின்றார்கள். இவ்வளவு காலமும் சும்மா நண்பர்களாகவே வாழ்ந்து வந்த இருவரும், படத்திற்காக உடலுறவு கொள்ளவேண்டிய தேவை. அது சிக்கலாகி, பிறகு காதலாவது கதை.

படம் சிரிக்க வைக்கின்றது என்றாலும், அந்த ஊத்தைப் பகிடிகள் வெறுப்பேறுகின்றன. அது எனது வயதுக்குத்தான் பொருந்தவில்லையோ தெரியாது. நீங்கள்தான் பார்த்துவிட்டு சொல்லவேண்டும். அந்த நகைச்சுவைகளைத் தவிர படத்தில் ஒன்றுமேயில்லை. உடலுறவு, தனியே உடல் சம்பந்தப்பட்ட விடயமல்ல என்பது கதையின் மூலக்கரு. என்றாலும் கதையிலேயோ, காதலிலேயோ லாஜிக்கே இல்லை. நடிப்புத்திறனைக் காட்டுவதற்க்கோ படத்தில் எவ்வித தேவையும் இல்லை. நீங்கள் இவ்வாறான நகைச்சுவைகளை, அல்லது Elizabeth Banks’ஐ (என்னைப்போல) இரசிப்பவரானால் பார்க்கலாம். மற்றப்படி நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

“Zack and Miri Make a Porno” IMDB இணைப்பு

மார்ச் 21, 2009

Bedtime Stories (2008): நிஜத்திற்கு வரும் கதைகள்.

Walt Disney தயாரித்து அளிக்கும் படங்கள் என்றால் குடும்பத்தோடு நம்பிப்போய், சந்தோசமாக கொஞ்ச நேரத்தை செலவழித்துவிட்டு வரலாம். அந்த வரிசையில் இன்னொரு படம் இது. படத்தைப் பார்க்கும்போது நீங்கள் ஞாபகம் வைக்கவேண்டிய விடயம் இது சிறாரிற்கான படம் என்பதுதான். அதுக்குள் கதையிலேயும், லாஜிக்கிலேயும் பிழைபிடிக்கின்ற நோக்கில் இருப்பீர்கள் என்றால் இது உங்களிற்கான படம் இல்லை.

Skeeter’இனதும் (Adam Sandler), Wendy’இனதும் (Couteney Cox) அப்பா சிறியதொரு தங்குமிட விடுதி நடத்தி வருகின்றார். விடுதி தொழிலில் படுத்துவிட, அதை நண்பன் Barry’க்கு விற்க வேண்டிய தேவை. அதை விற்கும்போது, மகன் Skeeter வயதிற்கு வந்த பின்னர் அவனுக்கு விடுதி முகாமையாளர் வேலை வழங்கவேண்டும் என்று வாக்குறுது வாங்குகின்றார். காலம் செல்ல, Skeeter’இன் தகப்பனார் காலமாகி விட, அவரிற்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதி மறக்கப்பட்டுவிடுகின்றது. வயதுக்கு வந்த Skeeter, பராமரிப்பு தொழில்நுட்பவியலாளராக இருக்கின்றான். அப்பாவின் நண்பன் Barry எப்போவாவது தனது வாக்குறுதியைக் காப்பாற்றுவார் என நம்பி நம்பி வாழ்வில் நொந்து போய் இருக்கின்றான்.

இவனது சகோதரி Wendy’யோ திருமணமாகி, இரு குழந்தைகளிற்கும் தாயாகிவிடுகின்றார். பின்பு, மணவாழ்வு கசந்துவிட, விவாகரத்துப் பெற்றுவிடுகின்றார். அத்தோடு வேலையும் பறிபோய்விட, வேலையைத் தேடி இன்னொரு மாகாணத்திற்கு செல்லும் Wendy, தனது பிள்ளைகளிற்கு காப்பாக பகலில் நண்பி/சக-ஆசிரியை Jill’ஐயும் (Keri Russell), இரவில் சகோதரன் Skeeter’ஐயும் அமர்த்திவிட்டு போகின்றார். சிறுபிள்ளைகளை பராமரிப்பதில் சற்றும் அனுபவம் இல்லாத Skeeter, தனக்குத்தெரிந்த ஒரேயொரு முயற்சியைக் கைகொள்கின்றார் — இயற்றி கதை சொல்வது. அப்போது ஆரம்பமாகின்றது மந்திர ஜாலம்….

மருமக்கட் பிள்ளைகளிற்கு Skeeter சொல்லும் கதையெல்லாம் அடுத்த நாள் நிஜத்திற்கு வந்து விடுகின்றது! தனது சொந்த வாழ்வின் கதையை கற்பனையாக்கி Skeeter சொல்ல, அது சோகமாக இருக்கின்றது என்று சொல்லி, கதைக்குள் தாங்கள் நுழைந்து, கதையை சந்தோசமாக்குகின்றார்கள் மருமக்கள். தொடர்ந்து மறுநாள் Skeeter’ன் வாழ்வில் நல்ல திருப்பங்கள் எல்லாம் ஏற்படுகின்றன. இரவுக்குக் கதைக்கும், அன்றைய நாளிற்கும் தொடர்பைக் கண்டு கொள்ளும் Skeeter, மறுநாள் இரவு கதையை சந்தோசமாக இயற்றுகின்றான். ஆனால், கதையில் ஒரு திருப்பமும் இல்லையென்று சொல்லி முடிவை மாற்றுகின்றார்கள் மருமக்கட் பிள்ளைகள். முந்தைய நாளிற்கு நேரெதிரான நாளொன்றை அனுபவிக்கும் Skeeter, இரவுக் கதையில் இருந்து நிஜத்திற்கு வருவது தான் சொல்லும் பாகங்கள் அல்ல, தனது மருமக்கள் மாற்றியமைக்கும் பாகங்களே என்று அறிகின்றான். பிறகென்ன, நல்லதாக கதையை மாற்றச் செய்வதற்கு மருமக்களை தூண்ட Skeeter எடுக்கும் முயற்சிகள் கலப்பாகப் போகின்றது.

சிறுவர்களிற்கான Fairy Tale கதைகள் போன்று, வில்லன், காதலி, நண்பன் என்று எல்லாம் படத்தில் உண்டு. கலகலப்பாக படத்தைக் கொண்டு போய், என்னதான் அதிக்ஷ்டம் வாழ்வில் விளையாடினாலும், வாழ்வின் ஒரு கட்டத்தில் எமது வாழ்வின் போக்கை நாம் எமது கையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற செய்தியோடு படத்தை முடிக்கின்றார்கள். Adam Sandler’க்கு என்று அளந்து செய்தமாதிரி ஒரு படம்; வழமையான Dramedy பாத்திரத்தில் வந்து கலக்குகின்றார். அந்த இரு சிறு பிள்ளைகளும் அந்தமாதிரி! முக்கியமாக அந்த சிறு பெண் அவ்வளவு ஒரு கொள்ளை அழகு!! மற்றைய அனைத்து பாத்திரங்களுமே, படத்தில் சிக்கென்று ஒட்டுகின்றார்கள். படத்தில் இருக்கும் கணிசமான அளவு special effect’உம் தராதரமாக இருக்கின்றது. மொத்தத்தில் சந்தோசமாக சிறுவர்களோடு ஒரு ஒன்றரை மணி நேரத்தைக் கழிப்பதற்கு மிகவும் தகுந்ததொரு படம்.

“Bedtime Stories” IMDB இணைப்பு

மார்ச் 20, 2009

The Tale of Despereaux (2008): சின்னஞ்சிறு நாயகனும், பென்னம் பெரிய படிப்பினைகளும்

அண்மைக் காலத்தில் பார்த்த காட்டூன் படங்களிற்குள் வித்தியாசமான படம். நகைச்சுவையும், கலகலப்பையும் மட்டும் வைத்து படத்தை எடுக்காமல், நல்ல பல செய்திகளையும் புகுத்தி தந்திருக்கின்றார்கள். கிராபிக்ஸின் தரத்திலும் குறை வைக்கவில்லை.

புத்தகத்திலிருந்து திரைக்கு வந்த கதையாதலால், இந்தத் திரைக்கதையை வழமையான காட்டூன் படங்களின் கதைகளைப்போல இரண்டு வரியில் சொல்லிவிட முடியாது. படம் கற்பனையான ஒரு அரசாட்சியில் வசிக்கும் ஒரு பெருச்சாளியையும் (rat), ஒரு சுண்டெலியையும் (mouse) மையமாகக் கொண்டு போகின்றது. கப்பல் ஒன்றை வசிப்பிடமாகக் கொண்டிருக்கும் பெருச்சாளி Roscuro, Dor நகரத்தில் நடைபெறும் வருடாந்த சூப் (soup) பெருவிழாவைப் பார்க்க வருகின்றது. அரசசபை சூப்பின் வாசம் வெகுவாகக் கவர, அதை எட்டிப் பார்க்கும் Roscuro தவறிப்போய் அரசியின் சூப்பிற்குள் விழுந்து விடுகின்றது. எலி விழுந்த சூப்பைக் குடித்த அதிர்ச்சியில் அரசி மாரடப்பில் இறந்து விடுகின்றார்! மனைவியை இழந்த கவலையிலும், ஆத்திரத்திலும் நாட்டில் சூப்பிற்கும், பெருச்சாளிகளிற்கும் அதிகாரபூர்வமாகத் தடைவிதித்துவிட்டு கண்ணீரும் கம்பலையுமாக அமர்ந்துவிடுகின்றார் அரசர். அரசனின் பராமரிப்பின்றி நாடு சீரழிந்து கொண்டு செல்கின்றது; கூடவே அப்பாவால் கைவிடப்பட்ட அரசிளங்குமாரியும். மக்களிடமிருந்து தப்பியோடும் Roscuro, பாதாளச் சிறைச்சாலையின் அடியில் இருக்கும் பெருச்சாளி நகரத்தில் வந்து தஞ்சமடைகின்றது.

இவை இவ்வாறு இருக்க, அரண்மனையில் இருக்கும் சுண்டெலி நகரத்தில் பிறக்கின்றது கதாநாயகன் Despereaux. பிறந்ததிலிருந்தே மற்றைய சுண்டெலிகளின் சுபாவத்திலிருந்து மாறுபட்டு நிற்கின்றது. சுண்டெலிகளிலேயே மிகவும் சிறிதான தோற்றமும், ஆளைவிட பெரிய காதையும், கண்ணையும் கொண்டது இது; மற்றைய சுண்டெலிகள் முறையாக பயப்பிடுவது எப்படி என்பதை பள்ளிக்கூடத்தில் பயின்று கொண்டிருக்க :-), பாடப் புத்தகத்தில் பூனையின் படத்தை வரைந்து வாத்தியாருக்கு வெறுப்பேற்றுகின்றது Despereaux!! அரண்மனை நூலகத்திலிருக்கும் புத்தகங்களை எவ்வாறு அரித்து தின்னலாம் என்று Despereaux’ற்கு படிப்பிக்க அதை அழைத்து வருகின்றது Despereaux’இன் அண்ணா; Despereaux’வோ புத்தகங்களை நன்னுவதை விடுத்து, அதைப் படிப்பதில் ஆழ்ந்துவிடுகின்றது. வீர சாகசக் கதைகளைப் படிக்கும் Despereaux, தன்னையும் அரசிளங்குமாரிகளை காப்பாற்றும் வீரனாக வடிவமைத்துக் கொள்கின்றது. கதையின் நடுவே அரண்மனையில் வசிக்கும் உண்மையான இளவரசியையும் சந்தித்து நட்புக் கொள்கின்றது. ஆனால் மனிதரோடு தொடர்பு வைப்பது சுண்டெலியுலகத்தில் தண்டனைக்குரிய குற்றமாதலால், Despereaux’இன் இந்தத்தொடர்புப்பைக் கண்டிக்கும் சுண்டெலிக்கூட்டம், அவனை பாதாளச் சிறைக்குழியில் போட்டுவிடுகின்றனர். இங்கே Roscuro’வைச் சந்திக்கின்றது Despereaux. பிறகு இவர்களின் வாழ்வு, எவ்வாறு நாட்டின் எதிர்காலத்தோடு இணைக்கப் படுகின்றது என்பதை, ஏக்கம், ஏமாற்றம், வீரச்செயல் என்று பல்வேறு உணர்வுகளோடு சொல்லுகின்றது மிகுதிப் படம்.

அந்த வித்தியாசமான பின்னணி வர்ணனையோடு படம் ஆரம்பிக்கும்போதே, படம் வழமையான காட்டூன் படங்கள் போல் இருக்கப் போவதில்லை என சற்றே அறியலாம். அரசி மண்டையைப் போடும்போது அது உறுதியாகின்றது. அருமையான கிராபிக்ஸ் தவிர எனக்குப் பிடித்தது பின்னணி இசை — சிறுவர் படங்களிற்கான இசைபோலன்றி சற்றே பக்குவப்பட்ட இசை. படத்தின் பாத்திரங்களிற்கு குரல் கொடுத்தவர்கள் எல்லாரும் பிரபல்யங்கள் (Harry Potter’இன் Hermione ஆக வரும் Emma Watson‘தான் இளவரசிக்குக் குரல் கொடுத்திருப்பது.) எல்லோரும் நன்றாகச் செய்திருக்கின்றார்கள். படத்தில் சூப்புக்கும், மழைக்கும், சூரியனுக்கும் என்ன சம்பந்தம் என்பதுதான் எனக்கு விளங்கவில்லை; எதையையோ symbolic’க்காக சொல்ல முற்பட்டிருக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன். குடும்பத்தில் இருக்கும் சிறாரோடு, பெரியவர்களும் பார்க்கக் கூடிய படம்.

“The Tale of Despereaux” IMDB இணைப்பு

மார்ச் 18, 2009

Swing Vote (2008): ஒற்றை வோட்டில் ஜனாதிபதி.

மனைவி விவாகரத்து செய்துவிட்டு சென்றுவிட, வாழ்க்கை வெறுத்து உதவாக்கரை அப்பாவாக வாழ்கின்றார் Bud Johnson. வயது பன்னிரண்டு என்றாலும், வீட்டையும், அப்பாவையும், தன்னையும் பராமரிக்கும் பொறுப்பை அநாசயமாக எடுத்து நடத்துகின்றாள் மகள் Molly. இப்படியாக இவர்கள் இருக்க, நாட்டில் ஜனாதிபதி தேர்தல் வருகின்றது. புத்திசாலியான Molly, நாட்டின் இறைமை, அரசியல் என்பவற்றில் மிகவும் அக்கறை உடையவள்; Bud’ஓ அதற்கு நேர் எதிர் — அரசியல் பற்றிய அறிவிலும், ஆர்வத்திலும். தேர்தல் அன்று பாடசாலை செல்லும் Molly, அப்பாவை வாக்குப் போடும்படி வற்புறுத்திவிட்டு செல்லுகின்றாள். பாடசாலை முடிய Molly’யும், Bud’உம் வாக்குச் சாவடியில் சந்திப்பதாக ஏற்பாடு. எதிலும் உதவாக்கரையாக இருக்கும் Bud’க்கு அன்று நாள் சரியில்லை — அன்று அவர் அவரது வேலையிலிருந்து நீக்கப் படுகின்றான். கவலைக்கு இலகுவான தீர்வாக, Bud தவறணைக்குச் சென்று ஊத்திப் போட்டுக்கொண்டு படுத்துவிடுகின்றார். இங்கே அப்பாவுக்காக வாக்குச் சாவடியில் காத்திருக்கிறாள் Molly. தகப்பன் வராமல்போக, வாக்குச் சாவடி மூடப்படும் தருவாயிலிருக்க, அங்கேயிருக்கும் வேலையாட்களிற்கு கடுக்காய் கொடுத்துவிட்டு, தகப்பனிற்காக தான் கள்ள ஓட்டு போட முயல்கின்றாள் Molly. அப்பாவிற்காக கள்ளக் கையெழுத்துப் போட்டுவிட்டு, வாக்குச்சீட்டை பெட்டியில் போடும் தருவாயில், மின்சாரம் சாவடியில் தவறுதலாக துண்டிக்கப் பட்டுவிட இவள் இட்ட வாக்கு சீராக பதியப் படவில்லை (அமெரிக்காவில் வாக்குப் பெட்டியெல்லாம் இப்போது இலத்திரனியலாக்கப் பட்டுவிட்டது.) இப்போது வெளியுலகின் பார்வையில், Bud வாக்களித்து விட்டாலும், அது கணக்கிடப் படவில்லை.

சாதாரணமாக அது ஒரு பிரச்சனையில்லை; ஆனால் இந்த முறை நிலைமை சாதாரணமில்லை — நடாளாவிய ரீதியில் அமெரிக்காவின் இரு ஜனாதிபதி வேட்பாளரிற்கான வாக்குகளின் எண்ணிக்கை சமப்பட்டுவிட, இப்போது Bud’இன் கணக்கில் எடுக்கப் படாத வாக்கு ஒன்றுமட்டுமே அமெரிக்காவின் ஜனாதிபதியை தீர்மானிக்கும் அதிகாரத்தைப் பெற்றுவிடுகின்றது. இப்படியான ஒரு நிலையைத்தான் “Swing Vote” என அழைப்பார்கள்.

இப்போது, அரசியல் பிரச்சாரத்திற்காக சாதாரணமாக பல மில்லியன் டாலர்களை செலவழிக்கும் இரு கட்சிகளும், தனி மனிதனை தன்பக்கம் இழுப்பதற்காக, வரைபடத்திலேயே இல்லாத குக்கிராமமான Bud’இன் ஊருக்கு வந்து இறங்குகின்றன. தண்ணி காணாத உடலும், ஊத்தை உடுப்புமாக இருக்கும் Bud ஒரே நாளில் நாடளாவிய பிரபல்யமாகி விடுகின்றான். திடீர் பிரபல்யத்தினால் Bud குழம்பிப் போனாலும், அப்போதும் அசையாமல் நிற்கின்றாள் Molly. இந்த நிகழ்வை பயன்படுத்தி அப்பாவை நல்வழிப் படுத்தலாம் எனவும் முயற்சிக்கின்றாள். என்றாலும் பணத்தை அள்ளிக் கொட்டும் இரு ஜனாதிபதி வேட்பாளர்களின் முயற்சிகள், Bud’ஐ மேலும் மேலும் Molly’யை விட்டுப் பிரிக்கின்றன. இந்த அரசியல் சகதியிலிருந்து Bud’உம், Molly’யும் எவ்வாறு மீளுகின்றார்கள், Bud’இன் ஓட்டு யாருக்கு போய்ச் சேருகின்றது என்பதை படம் சொல்கின்றது.

Bud ஆக வரும் Kevin Costner அந்த உதவாக்கரைப் பாத்திரத்தில் வந்து பொருத்தமாக வெறுப்பேத்துகின்றார். என்றாலும், இடையில், விட்டுச் சென்றுவிட்ட மனைவியை சந்திக்கும் காட்சியில் பரிதாபப் படவும் வைக்கின்றார். இருந்தாலும், படத்தின் கனத்தை பெரும்பாலும் தாங்கிச் செல்வது Molly’யாக வரும் Madeline Carroll‘தான். அலட்டிக் கொள்ளாமல் செய்திருக்கின்றார். படம் பெரும்பாலும் நகைச்சுவைதான் என்றாலும், தேவையான இடத்தில் எல்லாம் மனத்தைக் கனக்க வைக்கின்றது. கடைசிக் காட்சியில் Bud’இன் பேச்சும் அருமை; படத்தை முடித்திருக்கும் விதமும் அருமை (என்றாலும் அநேகருக்குப் பிடிக்காது என்று நினைக்கின்றேன்.) நம்ப முடியாத கதையை, சுவாரசயமாக தந்திருக்கின்றார்கள். பார்க்கலாம்; கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் சென்டிமென்ட் என்று அலுப்பில்லாமல் போகும்.

“Swing Vote” IMDB இணைப்பு

மார்ச் 17, 2009

The Women (2008): பெண்களை வைத்து, பெண்களிற்காக, பெண்களைப் பற்றி…

“மகளிர் மட்டும்” என்று சொல்லி ஒரு படம் வந்தது ஞாபகம் இருக்கும்; என்றாலும் இந்தப் படம்தான் மகளிர் மட்டும் என்பதற்கு வரைவிலக்கணம். படத்தில் மருந்துக்கும் ஆண் வாடை இல்லை! அட, கதாநாயகி வீட்டில் இருக்கும் நாய் கூட பெண் நாய்தான்!! அப்பிடி ஒரு படத்தை துணிந்து எடுத்திருக்கின்றார்கள். நல்ல முயற்சிதான்; பிழைப்பது என்னவென்றால், இப்படியான ஒரு நடிகர் குழுவை வைத்து எடுக்கக்கூடிய கதைகள் ஒரு குறுகிய வட்டத்தினுள்தான் இருக்கமுடியும் என்பது. விளைவு, இனிமேல் இல்லையென்ற ஒரு Chick-flick கதை. 😦

நான்கு ஆத்மாந்த நண்பிகள் — குடும்பத்தலைவி Mary; வேலையில் இளஞர் பட்டாளத்திற்கு ஈடு கொடுக்க சிரமப் பட்டுக்கொண்டிருக்கும் Sylvia; பிள்ளைபெறும் தொழிற்சாலை போல Edie; மற்றும் அடுத்த புதிய நாவலை எழுத கைவராது தடுமாறிக்கொண்டிருக்கும் எழுத்தாளர் Alex. கதை பெரும்பாலும் Mary’ஐச் சுற்றிப் போகின்றது. மணவாழ்க்கைக்காக சொந்த வாழ்வின் அபிலாசைகளை உதறிவிட்டு இருக்கும் Mary’இன் கணவன், ஒரு ஒப்பனைக் கடை பெண் ஒருத்தியுடன் கள்ளத்தொடர்பு கொளவதும், அதைத் தொடர்ந்து Mary’யின் வாழ்வு தலை கீழாவதும், நண்பிகளுடன் துணையுடன் அதை மீண்டும் சீராக்குவதும் கதை.

படத்தில் இருப்பது எல்லாரும் பெண்கள் என்பதால் பார்க்க நன்றாக இருக்கும் என்று ஜொள்ளு வடித்துக் கொண்டு பார்க்கப் போகும் ஆண்களிற்கு எச்சரிக்கை; படத்தின் நாயகிகள் எல்லாம் பெரும்பாலும் கடந்த வம்சாவழி நாயகிகள், பெரும்பாலும் இளமையைக் கடந்தவர்கள். கதையமைப்பு பெண்களிற்குத்தான் பிடிக்க வேண்டும். இருந்தாலும் பெரிய புதியதான கதையில்லை என்பதால் பெண்களையும் எவ்வளவு தூரம் கவரும் என்று தெரியவில்லை. முற்று முழுதாக பெண்களை வைத்து எடுக்கப் பட்டு இருக்கும் அந்த புதிய முயற்சிக்காகப் பார்க்கலாம்.

“The Women” IMDB இணைப்பு

மார்ச் 7, 2009

Burn After Reading (2008): குழப்பமோ, குழப்பம்; சிரிப்போ, சிரிப்பு!!

வாவ்! ஒரு இடியப்ப சிக்கல் கதையை தெளிவாக எடுத்து, அதை நகைச்சுவை படமாகத் தந்திருக்கிறார்கள். கதை என்னவென்று சொல்ல வேண்டுமோ, சரி அது இதுதான்: CIA’இல் பல்லாண்டுகள் வேலை செய்து வந்த Osbourne (John Malkovich) உள்பகை காரணமாக ராஜினாமாச் செய்கின்றார். இப்போது வேலைவெட்டி எதுவுமின்றி இருப்பதால் தனது CIA அனுபவத்தை கதையாக எழுத முனைகின்றார். இவரது மனைவி Katie (Tilda Swinton) — ஒரு வைத்தியர். மணவாழ்வில் சுகமற்று இருக்கும் இவருக்கு, கணவன் வேலையை ராஜினாமா பண்ணிவிட்டு வந்தது கடைசி அடி. வேலையில்லாமல் இருக்கும் கணவன் குடும்பச் சேமிப்பை கரைக்கும் முன்னர் விவாகரத்து செய்ய தீர்மானிக்கின்றார். Katie’யின் விவாகரத்து வக்கீல், விவாகரத்தை முன்வைக்கும் முன்னர் Osbourne’இன் முழு பொருளாதார நிலவரத்தையும் அறிந்து கொள்ளும்படி katie’க்கு ஆலோசனை சொல்கின்றார். அதன் பேரில் Osbourne’இன் கண்ணணியில் இருக்கும் ஆவணங்களை களவாக பதிவிறக்கி ஒரு CD’இல் இட்டு வக்கீலின் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றார் Katie. அந்த ஆவணங்களுடன் Osbourne’இன் நாவல் முயற்சிக்கான குறிப்புக்களும் வந்து சேர்ந்து விடுகின்றன. அந்த CD’யை வக்கீல் தனது செயலாளரிடம் கொடுக்க, அவர் அதை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் வழியில் உடற்பயிற்சி மையத்தில் (gym) தொலைத்து விடுகின்றார். அந்த CD’யைக் கண்டெடுக்கின்றார்கள் அங்கே வேலை செய்யும் இரண்டு மாங்காய் மடையர்களான Linda’வும் Chad’உம். Linda (Frances DcDormand) முதுமையின் எல்லையைத் தொட்டுவிட்ட பெண்; தனது காதலற்ற வாழ்க்கைக்கு தனது முதுமைக் கோலமே காரணம் எனத்தீர்மானித்து பிளாஸ்டிக் அறுவைச்சிகிச்சை மூலம் அதை மாற்ற தீர்மானிக்கின்றார் — பிரச்சனை என்னவெனின், அந்த சிகிச்சையைக்குத் தேவையான பணம் இல்லை. Chad (Brad Pitt) மூளையை பராமரிப்பதில் அக்கரை செலுத்தாது, உடலை பராமரிப்பதில் மட்டும் அக்கறை செலுத்தும் ஒருவன். கண்டெடுக்கப்பட்ட CD’யில் இருக்கும் Osbourne’இன் குறிப்புகளை காணும் இவர்கள் இருவரும் CIA’இன் ரகசிய கோப்பொன்றை கண்டுபிடித்திருப்பதாக தீர்மானிக்கின்றார்கள். மடையர்களாக இருந்தாலும், மனத்தளவில் நல்லவர்களான இவர்கள், அந்த இரகசியக் கோப்பை உரியவரிடம் ஒப்படைக்கத் தீர்மானிக்கின்றார்கள். அந்த நற்செயலிற்காக பணப்பரிசொன்றும் கிடைக்கும் என்று நம்புகின்றார்கள் (Linda இதில் பாரிய அளவில் நம்பியிருக்கின்றார்.) வாழ்க்கையில் விரக்தியில் இருக்கும் Osbourne’க்கு நடுச்சாமத்தில் தொலைபேசி அழைப்பு வருகின்றது Linda, Chad இடமிருந்து. இவர்கள் என்ன பேசுகின்றார்கள் என்பதைபற்றி எவ்வித விளக்கமும் இல்லாத Osbourne இவர்கள் தன்னை ஏதோவிதமாக blackmail பண்ணுகின்றார்கள் என்று தீர்மானிக்கின்றார்கள். இதற்கிடையில் Harry (George Clooney) என்னும் ஒரு பாத்திரம். திறைசேரியில் (treasury) வேலை செய்யும் கலியாணமான Harry, Katie (Osbourne’இன் மனைவி) உடன் கள்ளக்காதல் வைத்திருப்பது மாத்திரமின்றி, இணையத்தளத்திலிருக்கும் Dating சேவையொன்றையும் பாவித்து வெவ்வேறு பெண்களோடும் தொடர்பு வைத்திருக்கின்றார். இவ்வாறாக சந்திக்கும் பெண்களில் கடைசி Linda! திறைசேரியில் வேலைசெய்யும் Harry’யையும், பழைய CIA உளவாளி Osbourne’ஐயும் இதையெல்லாம் வெளியே இருந்து அவதானித்துக் கொண்டிருக்கும் CIA’க்கு இது எல்லாம் ஒரு பெருங்குழப்பமாக இருக்கின்றது. இத்தனைக்கு நான் இங்கே சொன்னது அவ்வளவும் ஒரு 25% குழப்பம்தான். மிச்சக் குழப்பத்தை நீங்களாகவே அறிந்து கொள்வதுதான் சுவையாக இருக்கும்.

பொதுவாக படம் மெலிதான ஒரு நகைச்சுவையுடன், கொஞ்சம் serious’ஆகத்தான் போகுகின்றது. படத்தின் நடுவிலும், கடைசியிலும் வரும் CIA அதிகாரிகள் உரையாடும் காட்சிதான் வெடிச் சிரிப்பு. படத்தில் குழப்பம் ஆளை ஆள் சரியாகப் புரிந்து கொள்ளாததுதான்; அதிலும் உச்சக்கட்டம் இவ்வளவு குழப்பத்தையும் CIA புரிந்து கொள்ளும் விதம்! அந்த மாதிரி!! படம் கொஞ்சம் பெண்களிற்கு எதிரான படம் போல — ஏனெனில் படத்தில் வரும் குழப்பத்திற்கெல்லாம் பெரும்பாலும் மூலக்காரணம் பெண்கள்தான்.

படத்தில் இருக்கும் பெரிய புகழ்பெற்ற நட்சத்திரக்குழுவும், தங்களிற்கு வழமையற்ற பாத்திரங்களிலே வருகின்றனர். என்றாலும் வெழுத்து வாங்குகின்றார்கள். அப்படியிருந்தாலும் கதாசிரியருக்குத்தான் ஒரு “ஓ” போடவேண்டும். அப்பிடியொரு சிக்கலான நகைச்சுவைக் கதையொன்றை, கொஞ்சமும் லாஜிக் பிசகாமல் வடிவமைத்திருக்கின்றார்கள். வழமையான கதைகளுடன் வரும் படங்களை பார்த்து வருகின்ற கண்ணுக்கும் மனதுக்கும் ஒரு விருந்து. என்றாலும் சிறுவர்களிற்கான படம் அல்ல.

“Burn After Reading” IMDB இணைப்பு

பிப்ரவரி 17, 2009

Vicky Cristina Barcelona (2008): முக்கோண, நாற்கோண, ஐங்கோண காதல் கதை.

படத்தின் பெயர் உண்மையிலேயே “Vicky and Cristina in Barcelona” என்றுதான் இருந்திருக்கவேண்டும். அதுதான் படத்தின் கதையும். Vicky’யும் (Rebecca Hall) Cristina’வும் (Scarlett Johansson) ஆத்மாந்த நண்பிகள் எனினும் காதல் விடயத்தில் எதிரும் புதிருமான எண்ணப்பாடு கொண்டவர்கள் — மனதுக்குப் பிடித்த, வாழ்க்கைகு ஏற்றவன் ஒருவனோடு வாழ்வில் settle ஆவதற்குத்தான் காதல் என்பது Vicky’யின் கொள்கை; காதல் ஒரு adventure என்பது Cristina’வினது கொள்கை. நிச்சயதார்த்தம் முடிந்து இருக்கும் Vicky’யும், சமிபத்தில் (மீண்டும்) ஒரு காதல் தோல்வியைச் சந்தித்து இருக்கும் Cristina’வும் கோடைக்காலத்தில் சிலமாதங்களை கழிப்பதற்காக Barcelona’வில் (Spain) இருக்கும் Vicky’யின் உறவினர் வீட்டிற்கு வருகின்றனர். மகிழ்ச்சியாக கழிந்துகொண்டிருக்கும் நாட்களில் குழப்பத்தைக் கொண்டுவருகின்றார் அங்கே இவர்கள் சந்திக்கும் ஒரு ஓவியன் Juan (Javier Bardem.) Playboy வகையில் இருக்கும் Juan இலகுவாக Cristina’வின் மனதை கொள்ளை கொண்டுவிடுகின்றான். முதலில் Juan’ஐ வெறுக்கும் Vicky’யும் Juan’இன் மென்மையான மற்றைய முகத்தை அறிந்த பின்னர் Juan’உடன் காதல் வயப்படுகின்றார். இந்த முக்கோணக் காதலில் மேலதிக குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு வந்து சேர்கின்றார் Juan’இன் முன்னாள் மனைவி Maria (Penelope Cruz) — விவாகரத்து எடுத்த நாட்களில் Juan’ஐ கத்தியால் குத்தமுயன்றவர்!! Cristina-Maria-Juan-Vicky-Vicky’யின் எதிர்கால கண்வன் என்று ஒரே காதல் குழப்பம். இந்த குழப்பம் எங்கே சென்று முடிகின்றது என்பது படம்.

படத்தின் நடிகர்கள் எல்லாரும் சிறப்பாகச் செய்திருந்தாலும் துணை நடிகையாக வரும் Penelope Cruz எல்லாரையும் தூக்கிச் சாப்பிட்டு விடுகின்றார். ஆங்கிலத்தில் கதைப்பதும், சடாரென ஸ்பானிய மொழிக்கு மாறி பொரிந்து தள்ளுவதுமாக முழுக்கவனத்தையும் ஈர்த்துவிடுகின்றார். இந்தப் பாத்திரத்திற்காக இவர் ஆஸ்காரிற்கு தெரிவு செய்யப்பட்டிருப்பது முற்றிலும் தகும்!

மெலிதான நகைச்சுவையுடன் மிகவும் அமைதியாக படத்தை எடுத்திருக்கின்றார் Woody Allen (எழுத்தாக்கமும் இவர்தான்.) பின்னணி இசையே இல்லை என்று சொல்லலாம். Woody Allen’ஐ கிட்டத்தட்ட தமிழ்த் திரையுலக பாலச்சந்தரோடு ஒப்பிடலாம். குழப்பமான கதாபாத்திரங்களை முன்வைத்துவிட்டு கேள்விகளோடு படத்தை முடிப்பது இவரின் வழக்கம். இந்தப்படமும் அப்படித்தான். “…and they lived happily ever after” என்பதான முடிவுக்கு சாத்தியமேயில்லை! அப்படியான ஒரு படத்திற்கு நீங்கள் தயாரென்றால் ரசித்துப் பார்க்கக் கூடிய ஒரு படம்.

“Vicky Cristina Barcelona” IMDB இணைப்பு

செப்ரெம்பர் 4, 2008

War, Inc. (2008): பாதை தவறிய படம்

நல்லதொரு நோக்கத்தோடு படத்தை எடுக்கத்தொடங்கிவிட்டு பாதைதவறித் தடுமாறியிருக்கின்றார்கள். உலகத்தில் நடக்கும் போர்கள் எல்லாவற்றிற்கும் பின்னால் வல்லரசுகளின் வணிக இலாபமே உள்ளது என்பதை ஒரு கடி நகைச்சுவை படமொன்றின் மூலம் காட்ட முயன்றிருக்கின்றார்கள். கடைசியில் கடியும் நகைச்சுவையும் இருக்கின்றதே ஒழிய சொல்லவந்த செய்தி பின்புலத்திற்குப் போய்விட்டது.

காசிற்காக கொலைசெய்வது Brand Hauserஇன் (John Cusack) வேலை. போரினால் நொந்து போயிருக்கும் (கற்பனை நாடு) Turaqistan நாட்டில் போட்டி நிறுவனத்தின் பெரிய தலையைத் தட்டுவதற்காக இவரை அனுப்புகின்றது Tamerlane நிறுவனம். கொலையை செய்வதற்கு திரைமறைப்பு மத்திய கிழக்கின் புகழ்பெற்ற பாடகி Yonicaஇன் (Hilary Duff) கல்யாண விழா. ஏற்கனவே தனது தொழிலில் சந்தோசமற்றிருக்கும் Hauser, செய்தியாளர் Natalie மீது (Marisa Tomei) காதலில் விழுகின்றார். இவர்களது வாழ்கைகள் அந்த சில நாட்களில் எவ்வாறான திருப்பங்களிற்குள்ளாகின்றது என்பது படத்தின் கதை.

எடுத்துக்கொண்ட political satire என்ற கருவை அடிக்கடி விட்டு விலத்துகின்றது படம். நடிகர்களில் எவ்வித பிழையும் இல்லை (பாடகி/நடிகை Hilary Duff கூட தனது பங்கை பிழையில்லாமல் செய்திருக்கின்றார்). கதாசிரியர்தான் குழம்பியிருக்கின்றார். அந்தச் சொதப்பலைவிட்டால் படம் பரவாயில்லை. நேரம் கடத்துவதற்குப் பார்க்கலாம். படத்தின் கருவைப் பற்றி நீங்கள் தீவிரமாக இருப்பீர்கள் என்றால் Lord of War (2005) போன்ற படங்களைப் பார்ப்பது நல்லது.

War, Inc. IMDB இணைப்பு

Create a free website or blog at WordPress.com.