திரை விமர்சனம்

ஏப்ரல் 4, 2009

Redbelt (2008): வாழ்க்கையில் ரெட்பெல்ட் பெறுவது எப்படி?

வழமையான தமிழ்படங்களிலிருந்து, வரிக்கு வரி வேறுபடுவதான ஒரு படம் பார்க்க வேண்டுமோ? இந்தப் படத்தைப் பாருங்கள். படத்தின் கதையைப் பற்றி விலாவாரியாக இங்கு சொல்வது சரியில்லை. படம் மைக் (Chiwetel Ejiofor) என்ற, ஜி-யுட்ஸு என அழைக்கப்படும் தற்பாதுகாப்பு கலையக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் ஒருவரின் வாழ்க்கைப் பற்றிச் சொல்கின்றது. வாழ்க்கையில் நேர்மையையும், கண்ணியத்தையும் நூறுவீதம் கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் ஒரு நல்ல மனிதர் மைக். நேர்மை சோறு போடுவதில்லை என்பதால், அவரது பயிற்சி மையமும், தனிப்பட்ட பொருளாதாரமும் வறுமைக் கோட்டைத் தட்டி நிற்கின்றது. இவரது திறமையை பாவித்து சண்டைப் போட்டிகளில் பங்குபெற்றால் நிறையப் பணம் உழைக்கலாம். என்றாலும், போட்டிகளில் பணத்திற்காக போட்டியிடுவது கலையை இழிவுபடுத்துவது போலாகும் என்ற இவரது கோட்பாடினால், அதற்கு இவர் தயாரில்லை. இன்னொரு பக்கத்தில், இவர் போட்டிகளில் பங்குபற்றினால் அதிக ரசிகர்கள் கவரப்படுவார்கள், அதனால் அந்தப் போட்டிகளில் இருந்து கிடைக்கும் வருமானம் உயரும் என்பதான நிலமை அந்தப் போட்டிகளை நடத்துபவர்களிற்கு. எனவே, மைக்கை சதி செய்து, போட்டிகளில் பங்குபற்றும்படியான நிலைமைக்கு தள்ளுவதற்கு திட்டம் தீட்டுகின்றார்கள். அந்த சதிவலைகளையும் அதிலிருந்து மைக் மீள்கின்றாரா என்பதையும் படம் காட்டுகின்றது.

நல்லவன் ஒருவனின் வாழ்வை சதிகாரர்கள் கெடுப்பது பல தமிழ்ப் படங்களில் பார்த்ததுதான். என்றாலும், இந்தப் படத்தில் அந்த சதியாளர்கள் பின்னும் வலைகளைப் பார்க்க சும்மா வயிறு பற்றி எரிகின்றது பாருங்கோ, அப்படியான ஒரு உணர்வை எந்த ஒரு தமிழ்ப் படமும் எனக்குத் தந்ததில்லை! அதிலும் முக்கியம், மைக்கின் நல்ல குணத்தையே அவரின் பகைவனாக அவன்கள் மாற்றுவது. என்றாலும், படம் தமிழ்ப் படங்களிலிருந்து உண்மையாக வேறு படுவது, சதிகாரர்களின் வலைக்குள் விழுந்தபின் மைக்கின் நடவடிக்கைகள். எங்களது படங்களில் என்றாலோ, “பொறுத்தது போதும் பொங்கி எழு” என்று சொல்லிவிட்டு, எதிரிகளை துவம்சம் பண்ணுவார் கதாநாயகன். ம்ம்ம்… சரியாக அப்படி இல்லை இங்கே. இலகுவாக ஆக்ஸன் படமாக மாறியிருக்கக் கூடிய படம். மிகவும் கடினப் பட்டு அதை இழுத்து நிறுத்தியிருக்கின்றார்கள். படத்தில் பல விடயங்கள், பார்த்து முடித்த பின்னரும் கேள்வியாக இருக்கும். பெரும்பாலான பார்வையாளரிற்கு அது மனத்திருப்தியைத் தராது என்றாலும், என்னைப் பொறுத்தவரை அது ஒரு கவிதை போல இருக்கின்றது. கவிதைகளின் கருத்தை ஆட்களிற்கு ஆட்கள் வெவ்வேறாக அர்த்தம் செய்து கொள்வது போல, இந்தப் படத்தின் சில விடயங்கள் பார்வையாளரின் தீர்ப்புக்கே விடப்பட்டுள்ளன. Chwetel’ன் நடிப்பு அபாரம். யோகி போன்ற ஒரு பாத்திரத்தில், உணர்ச்சிகளை கொட்டாமல் கொட்டி நடித்திருக்கின்றார். ஒரு தடம் பார்த்துவிட்டு உங்கள் அபிப்பிராயத்தைச் சொல்லுங்கள்.

“Redbelt” IMDB இணைப்பு

ஏப்ரல் 3, 2009

The Secret Life of Bees (2008): தேன் கூடுபோல குடும்பத்தைக் கட்டலாமே…

Obama ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கும் இந்தக் காலத்தில், இந்தப் படத்தைப் பார்க்கும்போது, “வாவ்! அமெரிக்கா ஒரு நாற்பத்து ஐந்து ஆண்டுகளில் எவ்வளவு தூரம் வந்திருக்கின்றது!” என்று வியப்படைவதைத் தவிர்க்கமுடியவில்லை. இப்படத்தின் கதை பெரும்பாலும் அன்பைத்தேடியலையும் ஒரு சிறுமியை மையமாகக் கொண்டிருந்தாலும், 1960களில் கறுப்பர்களிற்கான அடக்குமுறை அமெரிக்க மண்ணில் வேரோடி இருந்ததையும் இந்தப்படம் அழகாகவும், அவலமாகவும் காட்டுகின்றது.

நாலுவயதில் தற்செயலாக தாயைக் கொலைசெய்தவள் லில்லி (Dakota Fanning) (வாவ்!!) அந்தச் சம்பவம் பற்றிய சரியான ஞாபகம் இல்லாமல் தொடர்ச்சியான குற்ற மனப்பாங்குடன் வளர்கின்றாள். அதுபற்றி கொஞ்சமும் கவலைப் படாத கொடுமைக்கார அப்பா. லில்லிக்கு ஒரே துணை, லில்லி வீட்டு தோடம்பழ பண்ணையில் வேலை செய்யும் ஒரு கறுப்பினப் பெண் ரொசலின் (Jennifer Hudson.) 1964’ஆம் ஆண்டு அமெரிக்க கறுப்பினத்தவரின் சரித்திரத்தில் ஒரு முக்கியமான ஆண்டு — இந்த ஆண்டில்தான் கறுப்பர்களுக்கு சம உரிமை வழங்கும் சட்டமொன்று இயற்றப்பட்டது. இந்த சட்டத்தினால் மகிழ்வும் உத்வேகமும் கொள்ளும் ரொசலின் நகரத்தினுள் செல்லும்போது அங்கிருக்கும் சில இனத்துவேசக்காரர்களோடு சச்சரவுக்குள்ளாகின்றாள். சட்டம் பராளுமன்றத்தோடு நின்றுவிட, வெள்ளையர்களால் வெறித்தனமாக தாக்கப் பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டாலும், குற்றவாளியாகக் காவல்துறையினரால் காணப் படுகின்றாள் ரொசலின்! இதே வேளையில், 14 வயதை அடையும் லில்லி, தகப்பனோடு ரொசலினைப் பற்றி, தனது தாயைப் பற்றி என்று ஒரு பெரிய வாக்குவாததில் இறங்குகின்றாள். வாக்குவாதம் மிகுந்த வெறுப்பில் முடிய, வீட்டை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறுகின்றாள் லில்லி. வீட்டை விட்டு ஓடும் வழியில், ரொசலினையும் வைத்தியசாலையிலிருந்து களவாக விடுவித்துசெல்கின்றாள். ஓடுகாலியான லில்லிக்கும், ‘குற்றவாளியான’ ரொசலினிற்கும் போக்கிடமில்லாது போக, லில்லியின் தாயாரின் பழைய பெட்டியொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட புனித மேரியின் படமொன்றின் பின்னால் இருக்கும் நகரொன்றின் பெயரை இலக்காகக் கொண்டு தமது பயணத்தை தொடங்குகின்றனர். அந்த நகரத்தை வந்து அடையும் இருவரும், அங்கே தேன் வியாபாரம் செய்து கொண்டு, ஓரளவு பணக்காரர்களாக இருக்கும் கறுப்பின போட்ரைட் (Boatwright) சகோதரிகளைச் சந்தித்து அவர்களிடம் அடைக்கலம் புகுகின்றனர். இங்கே இவர்கள் எவ்வாறு அன்பையும் அமைதியையும் பெறுகின்றனர் என்பது கதை.

ஒரு நாவலிலிருந்து திரைக்குவந்த படமாதலால், கதையின் ஆழம் படத்தில் தெரிகின்றது. படம் சாந்தியுடன் முடிவடைகின்றது என்றாலும், லில்லி படும் மனவேதனைகளையும், கறுப்பர்களிற்கு எதிரான கொடுமைகளையும் காட்டும்போதில் படம் மனம் மனதைக் குடைகின்றது. அதற்குத் தோதாக படத்தின் நடிகைகள் குழுவும்: Dakota Fanning, Jennifer Hudson, மற்றும் மூத்த போட்ரைட் சகோதரியாக வரும் Queen Latifah மூவரும் தமது வழமையான நடித்திறனை காட்டியிருக்கின்றனர். மற்ற போட்ரைட் சகோதரிகளாக வரும் Alicia Keys, Sophie Okonedo கூட இந்தப் படத்தில் அபாரமான நடிப்பை வழங்கியிருக்கின்றனர். நல்லதொரு கதைக்கு, சிறந்த நடிகர்கள் பட்டாளமும் கிடைத்துவிட படம் இலகுவாக ‘நல்ல படம்’ என்ற வகைக்குள் சென்று விடுகின்றது. சந்தர்ப்பம் கிடைத்தால் பாருங்கள்.

“The Secret Life of Bees” IMDB இணைப்பு

மார்ச் 28, 2009

The Reader (2008): காலத்தை வென்ற காதல்

பொதுவாக Drama வகையிலான படங்கள் எனக்குப் பொருத்தமானவையல்ல — அவற்குக்கு கவனம் கொடுத்து பார்த்து முடிப்பது என்பது எனக்குக் கொஞ்சம் கஸ்டமான விடயம். அப்படியான என்னையும் சிந்தை சிதறாது இரண்டு மணித்தியாலம் கட்டிவைத்திருந்தது இந்தப் படம்! ஐந்து ஆஸ்காரிற்கு தெரிவாகி, அவற்றில் ஒன்றைத் தட்டிக் கொண்டு போன படம்; அது ஏன் என்பது படத்தைப் பார்க்கும்போது தெளிவாகத் தெரிகின்றது.

1958’ஆம் ஆண்டு ஜேர்மனி — இரண்டாம் உலகயுத்ததை முடித்துக் கொண்டு அதன் பாதிப்பிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டு வருகின்றது. இங்கே 36 வயதான Hanna’வுக்கும் (Kate Winslet), 15 வயதான Michael’க்கும் (David Kross) இடையில் ஆரம்பிக்கும் காதலைச் சித்தரிக்கின்றது படத்தின் முன்பகுதி. Hanna ஒரு பேரூந்து நடத்துணர் (ticket conductor). இவர் கிட்டதட்ட பாடசாலைப் பையனான Michael’ஐ வழைத்துப் போடுகின்றார் என்றே சொல்லலாம். இவர்கள் இருவருக்கும் இடையிலான உறவு பெரும்பாலும் உடலுறவு சம்பந்தப் பட்டது என்றாலும், அதில் இன்னுமொரு பெரும்பங்கு, Hanna’வின் வற்புறுத்தலில் பேரில், Michael அவளிற்கு புத்தகம் வாசித்து கதை சொல்வதில் போகினறது. மூக்குவரையில் காதலில் மூழ்கி இருக்கும் Michael, Hanna என்னசொன்னாலும் அதற்கு இணங்கிப் போகின்றான். இவர்களின் கள்ளத்தனமான் இந்த உறவு இவ்வாறு சென்று கொண்டிருக்கும்போது, Hanna’வுக்கு ஒரு அலுவலக வேலைக்கான பதவியுயர்வு வருகினறது. அத்துடன் திடீரென தலை மறைவாகிவிடுகின்றாள் Hanna!

மிகவும் மனமுடைந்து போகும் Michael கொஞ்சம், கொஞ்சமாக தெளிந்து பல்கலைக் கழகத்திற்குச் செல்கின்றான். அங்கு வக்கீல் துறையில் படிப்பைத் தொடர்கின்றான். இவனது பல்கலைக் கழக படிப்பின் ஒரு பகுதியாக ஒரு நீதிமன்ற வழக்கை பார்வையிடவேண்டி வருகின்றது. ஹிட்லர் காலத்தில் யூத மக்களை அடைத்து வைத்திருந்து படுகொலை செய்வதற்கு பெயர் பெற்ற ஒரு சிறைச்சாலை காவலாளிகள் மீது, அங்கிருந்து தப்பிய ஒரு பெண் போடும் வழக்கு. வழக்கைப் பார்வையிட செல்லும் Michael’ற்கு பெரிய அதிர்ச்சி காத்திருக்கின்றது — அங்கே குற்றவாளி கூண்டில் இருக்கும் ஆறு பேரில் ஒருத்தி Hanna! மிகுதிக் கதையை நான் இங்கு சொல்லக் கூடாது.

படத்தின் கதையோட்டம் மிகவும் அழகு; காதலில் மர்மம், மர்மத்தில் ஆச்சர்யம், இன்பத்தில் சோகம், சோசகத்தில் சுகம் என்று நுணுக்கமாக நெய்யப்பட்டிருக்கின்றது. நடிகர்கள் ஆளிற்கு ஆள் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கின்றார்கள். Kate Winslet இந்தப் படத்திற்காக ஆஸ்காரைத் தட்டிக்கொண்டது தகும் என்றாலும், அவரது முதிர்ச்சிக்கு ஈடு கொடுக்கின்றார்கள் மற்றைய அனைவரும். இளம் நடிகர் David Kross’உம் அபாரம். வயதுக்கு வந்த Michael ஆக வரும் Ralph Fiennes (எங்கட Harry Potter Voldemort) நெஞ்சத்தில் சுமையைக் கட்டிக்கொண்டு அவதிப்படும் பாத்திரத்தில் சிக்கென்று பொருந்துகின்றார். கொஞ்ச நேரத்திற்கு வந்து போகும் Lena Olin கூட பல்லாண்டு காலமாக மனதில் இருக்கும் வஞ்சத்தை விக்ஷமாகக் கொட்டும் வேளையில் செஞ்சை அள்ளிச் செல்கின்றார். படத்தில் கதை வசனங்கள் கூட அந்தமாதிரி! முக்கியமாக நீதி மன்றத்தில் Hanna அளிக்கும் பதில்களிலும், படத்தின் கடைசிக் கட்டத்தில் அந்த யூதமுகாமிலிருந்து தப்பிவந்த பெண்ணோடு Michael உரையாடும் காட்சியிலும். கூடவே நெறியாள்கை, ஒளியமைப்பு எல்லாவற்றிலும் சிறந்து நிற்கின்றது படம். படத்தின் முன் 30% பாகத்தில் Kate Winslet ஆடைகளுடன் இருப்பதை விட, இல்லாது இருப்பதுதான் அதிக நேரம். அது கூட விகாரமாக இல்லாது படத்துடன் இயல்பாக கலந்து விடுகின்றது.

தயாரிப்பாளர்கள் விடும் ஒரே பிழை, பட விளம்பரங்களில் படத்தை கிட்டத்தட்ட ஒரு மர்மப் படம் போன்று சித்தரித்திருப்பது. படத்தில் மர்மம் உண்டு என்றாலும், அது அங்கே படத்தின் அரைவாசியுடன் நின்றுவிடுகின்றது. படம் அடிப்படையில் ஒரு காதல் படம். தவிர, படத்தில் வரும் Michael’இன் ஆசிரியர் குறிப்பிடுவது போன்று, “குற்றவாளி” எனப்படுபவன் யார் என்பதை ஒரு ஆழமான கண்ணோட்டத்தோடு பார்க்க முனைவது படத்தின் மறைமுகமான நோக்கம். ஆங்கில பட இரசிகள் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.

“The Reader” IMDB இணைப்பு

மார்ச் 27, 2009

Marley & Me (2008): ஒரு நாயின்/மனிதனின் கதை.

நட்புக்கும் விசுவாசத்திற்கும் பெயர் பெற்றது நாய்கள். ஒரு நாயிற்கும் ஒரு குடும்பத்திற்கும் இடையிலான பிணைப்பை அழகாக எடுத்துக்காட்டுகின்றது இந்தப்படம். படம் John’உம் (Owen Wilson) Jennifer’உம் (Jennifer Aniston) திருமணம் முடிப்பதோடு ஆரம்பிக்கின்றது. இருவரும் பத்திரிகைத் தொழில் சார்ந்தவர்கள். முழு எதிர்காலத்தையுமே விலாவாரியாக திட்டமிட்டு நடத்திவருபவர் Jennifer. ஒரு சிறந்த களமுனை நிருபராக வர வேண்டும் என்பதை மட்டுமே ஒரே கனாவாகக் கொண்டிருக்கும் John, மனைவியின் திட்டமிடலிற்கு இயைந்து நடந்து வருகின்றார். திருமண வாழ்வின் முதற்கட்டமாக, Florida மாநிலத்தில் வேலையும் எடுத்து குடியேறுகின்றனர். இப்போது திட்டத்தின் அடுத்த கட்டம் — பிள்ளை பெறுவது. தனது கனா இன்னமும் நனாவாகாத நிலையில், பிள்ளை குட்டிகள் என்று மேலதிகப் பொறுப்பை ஏற்க John’க்கு தயக்கம். எனவே, நண்பனின் ஆலோசனைப்படி, மனைவிக்கு ஒரு நாய்க்குட்டியை பரிசளித்து மனைவியின் கவனத்தை திசைதிருப்ப முயற்சிக்கின்றார். நாயகளிலேயே மிகவும் பணிவானது Labrador வகை நாய்கள்தான் என்று சொல்லப்பட, அதிலேயும் மிகவும் சோர்ந்து போய்யிருக்கும் ஒரு நாய்க்குட்டியை தத்தெடுக்கின்றனர் John’உம் Jennifer’உம். Marley என பெயரிடப்படும் இந்த நாய்க்குட்டியோடு ஆரம்பமாகின்றது அவர்களது வாழ்வின் திருப்பம், இன்பம், துன்பம் எல்லாமே. சாதுவாக இருந்த குட்டி, மகா குழப்படிக்கார நாயாக வளருகின்றது. அது செய்யும் அநியாயம் படத்தின் முன்பாகத்தின் அட்டகாசமான கலகலப்பு. எவ்வளவுதான் பிற்போட்டாலும், ஒரு கட்டத்தில் பிள்ளைகள் என்ற பொறுப்பை எதிர்கொண்டே ஆகவேண்டும் எனும்போது John’இனதும், படத்தினதும் கலகலப்பு நின்று போகின்றது. பிள்ளைகள் குடும்பத்தில் வந்து சேர, Jennifer’இன் பல்லாண்டுத் திட்டங்களும் நொருங்கிப்போகின்றன. இதற்குள் இன்னமும் நிறைவேறாத John’இன் கனவு வேறு. இவ்வாறாக இவர்களின் குடும்பம் வாழ்க்கைச் சுழியில் சுற்றிச் சுழல்வதும், அதற்குள் Marley ஒரு மறைமுகமான நங்கூரமாக இருப்பதையும் படம் அழகாக எடுத்துக் காட்டுகின்றது.

படத்தின் சுபாவம், John’இனதும், Marley’இனதும் வயதிற்கு ஏற்றவாறாக மாறிக்கொண்டு செல்கின்றது: துடுக்குடனும், நகைச்சுவையுடனும் ஆரம்பிக்கும் படம், கலகலப்பே இல்லாத ஒரு பகுதியினுள்ளாகச் சென்று, சாந்தமாக முடிவடைகின்றது; கடைசி பத்து நிமிடத்திற்கு தவிர்க்க முடியாமல் கண்கலங்க வைக்கின்றது. “ஓ” என்று அழுகின்ற காட்சிகளை வைத்தால்தான் படம் உணர்வுபூர்வமாக (emotional) இருக்கமுடியும் என்பது தவறு என்று காட்டியிருக்கின்றார் இயக்குணர். முதன்மை நட்சத்திரங்கள் இருவரும் கதாபாத்திரங்களிற்கு அழகாக உயிரளித்திருக்கின்றார்கள். கொஞ்ச நேரத்திற்கு வரும், குழந்தை நட்சத்திரங்கள் கூட சிறப்பாகச் செய்திருக்கின்றார்கள்.

படம் நாயைப் பற்றியதா, அல்லது John’ஐப் பற்றியதா என்று ஒரு கேள்வி வரலாம். என்றாலும், சற்றே ஆறஅமர இருந்து யோசித்துப் பார்த்தால், John’இன் வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும், Marley எவ்வாறு நிர்ணயிக்கின்றது என்பதை உணரலாம். ஒருவிதத்தில், Marley எனும் நாய், John என்ற மனிதனின் ஒரு குறியீட்டு வடிவம் (symbolic form) என்று கூட வாதாடலாம். படம் கவலையாகத்தான் முடியும் என்பதை, படத்தின் முதலாவது காட்சியிலிருந்தே அறிந்து கொள்ளலாம். கவலையாக முடிந்தாலும், மனம் நிறைவாக இருக்கின்றது. தாராளமாகப் பார்க்கலாம். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் அனைவருமே இதை சரிசமமாக இரசிப்பார்கள் என்று நினைக்கின்றேன்.

“Marley & Me” IMDB இணைப்பு

மார்ச் 25, 2009

Winged Creatures (2008): சிறகுடைக்கப் பட்ட மனிதர்கள்

ஒரு துப்பாக்கியோடு ஒரு பொது இடத்துக்குள் நுழைவது, சும்மா எழுந்தமாதிரியாக கொஞ்சப்பேரைச் சுட்டுக்கொல்வது, பிறது தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொள்வது, இது கிட்டத்தட்ட ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது வட அமெரிக்காவில் இப்போது! இப்படியான ஒரு சம்பவத்தில் மாட்டி உயிர் தப்பும் ஐந்து பேரின் வாழ்வினை பின்தொடருகின்றது இந்தப் படம். சிறுமி Anne (Dakota Fanning) தனது அப்பாவோடு காப்பிக் கடைக்கு வருகின்றாள்; இவர்களோடு இணைந்து கொள்வது Anne’இன் நண்பன் Jimmy (Josh Hutcherson). கடையில் விற்பனைப் பெண் Carla (Kate Beckinsale); கடையின் இன்னோர் ஓரத்தில் தனக்கு புற்றுநோய் என்று அறிந்ததால் வாழ்க்கை வெறுத்து இருக்கும் Charlie (Forest Whitaker). வழமையான ஒரு காலைப் பொழுது. திடீரென ஒருவன் துப்பாக்கியோடு நுழைகின்றான். கடையில் இருக்கும் ஆட்களை ‘டப், டப்’ என்று போட்டுத்தள்ளுகின்றான். Anne’இன் அப்பா உட்பட பலர் இறந்து போக, தப்பிப் பிழைப்பவர்கள் மேலே கூறப்பட்ட நான்கு பேர்கள் மட்டுமே. இவர்களுடன் கடையிலிருந்து கண நிமிடத்திற்கு முன்னே புறப்பட்ட ஒரு வைத்தியன் Bruce (Guy Pearce). இதில் ஆகக் கொடுமை, Bruce கடையைவிட்டு வெளியேறும்போது, அந்த கொலையாளிக்கு கடையின் கதவைத் திறந்து விட்டது! இந்த கொடிய நிகழ்வின் பின்னர் இந்த ஐவரின் வாழ்வும் தலைகரணமாக மாறிவிடுகின்றது. Anne தீடீரென தீவிர பக்திவசப்பட்டுவிடுகின்றாள்; Jimmy பேசுவதை நிறுத்தி விடுகின்றான்; Carla நிஜ வாழ்வுடன் ஒட்டவே முடியாது, தனது கைக்குழந்தையையும் கவனிக்க முடியாது தவிக்கின்றாள்; ஒரு சின்ன துப்பாக்கிச் சன்ன உரசல் காயத்துடன் தப்பும் Charlie, தனது அதிஸ்டத்தை மேற்கொண்டு பரிசோதிக்க சூதாட்டத்தில் இறங்குகின்றான்; கொலையாளிக்கு கதவு திறந்துவிட்ட Bruce, மக்களைக் காப்பாற்றுவதில் வெறியாகி விடுகின்றான், அதன் உச்சக்கட்டமாக தனது மனைவிக்கு நோயைக்கொடுத்து பின்பு காப்பாற்ற முனைகின்றான்! இப்படி சின்னாபின்னமாகி விடும் இவர்களதும், இவர்களைச் சார்ந்தவர்களது வாழ்க்கையை எடுத்துக்காட்டுகின்றது படம். அதில் மிக மெலிதாக ஒரு மர்மத்தையும் கலந்திருக்கின்றார்கள்.

படத்தின் பெயர் “Winged Creatures” என்றாலும், படம் சிறகு உடைக்கப் பட்ட மனிதர்களின் அவலங்களைப் பற்றியது. உண்மையைச் சொல்லப் போனால் தொடக்கமும், முடிவும் இல்லாத ஒரு படம். இப்படியான படங்களிற்கு என்ன தேவை என்று கேட்கலாம். எனக்கென்றால், ஒரு ஓவியக்கண்காட்சியில் ஒரு சோகமான சித்திரத்தைப் பார்த்து ரசிப்பது போன்ற ஒரு உணர்வு; மனதை கனக்க வைத்து விட்டுச் செல்கின்றது. படத்தில் பெரும் பகுதி குழந்தை நட்சத்திரங்களான Dakota’க்கும் Josh’க்கும்; அநாசயமாகச் செய்திருக்கின்றார்கள். Kate Beckinsale’இன் அழகு சோகமான படத்தை சற்று குழப்புவதைத் தவிர, மற்றைய நட்சத்திரங்களும் நிறைவாகச் செய்திருக்கின்றார்கள். மிகவும் கருமையான மூலக்கருவைக் கொண்ட ஒரு படம். நீங்கள் அதற்கு தயாரென்றால் தாராளமாகப் பார்க்கலாம்.

“Winged Creaturs” IMDB இணைப்பு

மார்ச் 18, 2009

Swing Vote (2008): ஒற்றை வோட்டில் ஜனாதிபதி.

மனைவி விவாகரத்து செய்துவிட்டு சென்றுவிட, வாழ்க்கை வெறுத்து உதவாக்கரை அப்பாவாக வாழ்கின்றார் Bud Johnson. வயது பன்னிரண்டு என்றாலும், வீட்டையும், அப்பாவையும், தன்னையும் பராமரிக்கும் பொறுப்பை அநாசயமாக எடுத்து நடத்துகின்றாள் மகள் Molly. இப்படியாக இவர்கள் இருக்க, நாட்டில் ஜனாதிபதி தேர்தல் வருகின்றது. புத்திசாலியான Molly, நாட்டின் இறைமை, அரசியல் என்பவற்றில் மிகவும் அக்கறை உடையவள்; Bud’ஓ அதற்கு நேர் எதிர் — அரசியல் பற்றிய அறிவிலும், ஆர்வத்திலும். தேர்தல் அன்று பாடசாலை செல்லும் Molly, அப்பாவை வாக்குப் போடும்படி வற்புறுத்திவிட்டு செல்லுகின்றாள். பாடசாலை முடிய Molly’யும், Bud’உம் வாக்குச் சாவடியில் சந்திப்பதாக ஏற்பாடு. எதிலும் உதவாக்கரையாக இருக்கும் Bud’க்கு அன்று நாள் சரியில்லை — அன்று அவர் அவரது வேலையிலிருந்து நீக்கப் படுகின்றான். கவலைக்கு இலகுவான தீர்வாக, Bud தவறணைக்குச் சென்று ஊத்திப் போட்டுக்கொண்டு படுத்துவிடுகின்றார். இங்கே அப்பாவுக்காக வாக்குச் சாவடியில் காத்திருக்கிறாள் Molly. தகப்பன் வராமல்போக, வாக்குச் சாவடி மூடப்படும் தருவாயிலிருக்க, அங்கேயிருக்கும் வேலையாட்களிற்கு கடுக்காய் கொடுத்துவிட்டு, தகப்பனிற்காக தான் கள்ள ஓட்டு போட முயல்கின்றாள் Molly. அப்பாவிற்காக கள்ளக் கையெழுத்துப் போட்டுவிட்டு, வாக்குச்சீட்டை பெட்டியில் போடும் தருவாயில், மின்சாரம் சாவடியில் தவறுதலாக துண்டிக்கப் பட்டுவிட இவள் இட்ட வாக்கு சீராக பதியப் படவில்லை (அமெரிக்காவில் வாக்குப் பெட்டியெல்லாம் இப்போது இலத்திரனியலாக்கப் பட்டுவிட்டது.) இப்போது வெளியுலகின் பார்வையில், Bud வாக்களித்து விட்டாலும், அது கணக்கிடப் படவில்லை.

சாதாரணமாக அது ஒரு பிரச்சனையில்லை; ஆனால் இந்த முறை நிலைமை சாதாரணமில்லை — நடாளாவிய ரீதியில் அமெரிக்காவின் இரு ஜனாதிபதி வேட்பாளரிற்கான வாக்குகளின் எண்ணிக்கை சமப்பட்டுவிட, இப்போது Bud’இன் கணக்கில் எடுக்கப் படாத வாக்கு ஒன்றுமட்டுமே அமெரிக்காவின் ஜனாதிபதியை தீர்மானிக்கும் அதிகாரத்தைப் பெற்றுவிடுகின்றது. இப்படியான ஒரு நிலையைத்தான் “Swing Vote” என அழைப்பார்கள்.

இப்போது, அரசியல் பிரச்சாரத்திற்காக சாதாரணமாக பல மில்லியன் டாலர்களை செலவழிக்கும் இரு கட்சிகளும், தனி மனிதனை தன்பக்கம் இழுப்பதற்காக, வரைபடத்திலேயே இல்லாத குக்கிராமமான Bud’இன் ஊருக்கு வந்து இறங்குகின்றன. தண்ணி காணாத உடலும், ஊத்தை உடுப்புமாக இருக்கும் Bud ஒரே நாளில் நாடளாவிய பிரபல்யமாகி விடுகின்றான். திடீர் பிரபல்யத்தினால் Bud குழம்பிப் போனாலும், அப்போதும் அசையாமல் நிற்கின்றாள் Molly. இந்த நிகழ்வை பயன்படுத்தி அப்பாவை நல்வழிப் படுத்தலாம் எனவும் முயற்சிக்கின்றாள். என்றாலும் பணத்தை அள்ளிக் கொட்டும் இரு ஜனாதிபதி வேட்பாளர்களின் முயற்சிகள், Bud’ஐ மேலும் மேலும் Molly’யை விட்டுப் பிரிக்கின்றன. இந்த அரசியல் சகதியிலிருந்து Bud’உம், Molly’யும் எவ்வாறு மீளுகின்றார்கள், Bud’இன் ஓட்டு யாருக்கு போய்ச் சேருகின்றது என்பதை படம் சொல்கின்றது.

Bud ஆக வரும் Kevin Costner அந்த உதவாக்கரைப் பாத்திரத்தில் வந்து பொருத்தமாக வெறுப்பேத்துகின்றார். என்றாலும், இடையில், விட்டுச் சென்றுவிட்ட மனைவியை சந்திக்கும் காட்சியில் பரிதாபப் படவும் வைக்கின்றார். இருந்தாலும், படத்தின் கனத்தை பெரும்பாலும் தாங்கிச் செல்வது Molly’யாக வரும் Madeline Carroll‘தான். அலட்டிக் கொள்ளாமல் செய்திருக்கின்றார். படம் பெரும்பாலும் நகைச்சுவைதான் என்றாலும், தேவையான இடத்தில் எல்லாம் மனத்தைக் கனக்க வைக்கின்றது. கடைசிக் காட்சியில் Bud’இன் பேச்சும் அருமை; படத்தை முடித்திருக்கும் விதமும் அருமை (என்றாலும் அநேகருக்குப் பிடிக்காது என்று நினைக்கின்றேன்.) நம்ப முடியாத கதையை, சுவாரசயமாக தந்திருக்கின்றார்கள். பார்க்கலாம்; கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் சென்டிமென்ட் என்று அலுப்பில்லாமல் போகும்.

“Swing Vote” IMDB இணைப்பு

மார்ச் 17, 2009

The Women (2008): பெண்களை வைத்து, பெண்களிற்காக, பெண்களைப் பற்றி…

“மகளிர் மட்டும்” என்று சொல்லி ஒரு படம் வந்தது ஞாபகம் இருக்கும்; என்றாலும் இந்தப் படம்தான் மகளிர் மட்டும் என்பதற்கு வரைவிலக்கணம். படத்தில் மருந்துக்கும் ஆண் வாடை இல்லை! அட, கதாநாயகி வீட்டில் இருக்கும் நாய் கூட பெண் நாய்தான்!! அப்பிடி ஒரு படத்தை துணிந்து எடுத்திருக்கின்றார்கள். நல்ல முயற்சிதான்; பிழைப்பது என்னவென்றால், இப்படியான ஒரு நடிகர் குழுவை வைத்து எடுக்கக்கூடிய கதைகள் ஒரு குறுகிய வட்டத்தினுள்தான் இருக்கமுடியும் என்பது. விளைவு, இனிமேல் இல்லையென்ற ஒரு Chick-flick கதை. 😦

நான்கு ஆத்மாந்த நண்பிகள் — குடும்பத்தலைவி Mary; வேலையில் இளஞர் பட்டாளத்திற்கு ஈடு கொடுக்க சிரமப் பட்டுக்கொண்டிருக்கும் Sylvia; பிள்ளைபெறும் தொழிற்சாலை போல Edie; மற்றும் அடுத்த புதிய நாவலை எழுத கைவராது தடுமாறிக்கொண்டிருக்கும் எழுத்தாளர் Alex. கதை பெரும்பாலும் Mary’ஐச் சுற்றிப் போகின்றது. மணவாழ்க்கைக்காக சொந்த வாழ்வின் அபிலாசைகளை உதறிவிட்டு இருக்கும் Mary’இன் கணவன், ஒரு ஒப்பனைக் கடை பெண் ஒருத்தியுடன் கள்ளத்தொடர்பு கொளவதும், அதைத் தொடர்ந்து Mary’யின் வாழ்வு தலை கீழாவதும், நண்பிகளுடன் துணையுடன் அதை மீண்டும் சீராக்குவதும் கதை.

படத்தில் இருப்பது எல்லாரும் பெண்கள் என்பதால் பார்க்க நன்றாக இருக்கும் என்று ஜொள்ளு வடித்துக் கொண்டு பார்க்கப் போகும் ஆண்களிற்கு எச்சரிக்கை; படத்தின் நாயகிகள் எல்லாம் பெரும்பாலும் கடந்த வம்சாவழி நாயகிகள், பெரும்பாலும் இளமையைக் கடந்தவர்கள். கதையமைப்பு பெண்களிற்குத்தான் பிடிக்க வேண்டும். இருந்தாலும் பெரிய புதியதான கதையில்லை என்பதால் பெண்களையும் எவ்வளவு தூரம் கவரும் என்று தெரியவில்லை. முற்று முழுதாக பெண்களை வைத்து எடுக்கப் பட்டு இருக்கும் அந்த புதிய முயற்சிக்காகப் பார்க்கலாம்.

“The Women” IMDB இணைப்பு

மார்ச் 12, 2009

The Other Boleyn Girl (2008): ஒரு பெண் மனது வைத்தால்…

16’ஆம் நூற்றாண்டின் இங்கில்லாந்து அரசன் 8’ம் ஹென்றி காலத்தில், பணம், புகழ், செல்வாக்கு எவ்வாறு இரு ஆருயிர் சகோதரிகளின் வாழ்க்கைகளை சிதைக்கின்றது என்பதை படம் எடுத்துக்காட்டுகின்றது. படத்தில் வரும் முக்கிய பாத்திரங்கள் யாவரும் இங்கிலாந்தின் சரித்திரத்தில் உண்மைப் பாத்திரங்கள்; பெரும்பான்மையான சம்பவங்களும் உண்மைதான். அவற்றிற்கு ஒரு கற்பனையான கதைப் பிணைப்பை கொடுத்து மனத்தை கனக்க வைக்குமாறு படத்தை எடுத்திருக்கின்றார்கள். ஒரு நாவலை தழுவி எடுக்கப் பட்டிருந்தாலும், எந்தவித பிடியையும் நழுவவிடாமல் படம் ஓடுகின்றது (நான் அந்த நாவலை படிக்கவில்லை.)

ஓரளவு செல்வாக்கான Boleyn குடும்பத்தில் பிறந்த சகோதரிகள் Anne’உம், Mary’யும். Anne (Natalie Portman) கூர்மையான சிந்தனை, பெரிய வாழ்க்கைக்கான இலட்சியம் என்பவற்றோடு இருப்பவள்; Mary (Scarlett Johansson) அதற்கு எதிர் — அழகில் Anne’ஐ விட சற்றே அதிகம் என்றாலும், காதல் நிறைந்த, சிக்கலற்ற வாழ்க்கை போதும் என்று இருப்பவள். இவர்கள் இருவரின் வாழ்க்கைகளையும் வைத்து அரசியல் சதுரங்கம் ஆடத் தீர்மானிக்கின்றார்கள் இவர்களின் மாமனும், அப்பாவும். அரசன் Henry’யின் (Eric Bana) மனைவி தொடர்ந்து ஆண் வாரிசை தர தவறிவர தவிப்பில் இருக்கின்றான் Henry. இதன்பின் அரசன் எப்படியும் இன்னொரு பெண் துணையைத் தேடுவான் என்று உணரும் இவர்கள், அரசனின் கவனத்தை Boleyn பெண்களின் பக்கம் திருப்பத் திட்டம் தீட்டுகின்றார்கள். சமிபத்தில் Mary திருமணம் செய்து விட்டதால், அரசனை அடிபணியவைக்க Anne’ஐ தயார்ப் படுத்துகின்றார்கள். பகடைக்காய் போல தன்னை பயன்படுத்த இவர்கள் முயல்வது பிடிக்கவில்லை என்றாலும், வரப்போகும் செல்வாக்கை எண்ணி அந்தத் திட்டத்திற்கு சமமதிக்கின்றாள் Anne. இவர்களின் இருப்பிடத்திற்கு அரசன் Henry வருகை தரும் தருணத்தில் இவர்களது திட்டம் ஆரம்பிக்கின்றது. என்றாலும், இவர்களது திட்டத்திற்கு அடியாக, Henry’யோடும் அரச பட்டாளத்தோடும் வேட்டையாட செல்லும் Anne’ன் துடுக்குப் போக்கினால் அரசன் காயப்பட்டுப் போகின்றான். Anne’ஐ மீண்டும் முன்னணியில் வைத்திருந்து அரசனின் கோபத்திற்கு மேலும் ஆளாக விருப்பமில்லை; அதே சமயம் அரசனையையும் தங்களது வலையிலிருந்து தப்பிக்க விட விருப்பமில்லை. எனவே வேறு ஒரு கேவலமான திட்டத்திற்குப் போகின்றனர். காயம் பட்டுகிடக்கும் Henry’ஐ பராமரிக்க இப்போது Mary’ஐ அனுப்புகின்றார்கள். ஏற்கனவே திருமணமான Mary, கபடம் எதுவுமில்லாது தனது பணியைச் செய்ய, சபலக்காரணான Henry, அவளின் மீதில் மையல் கொள்கின்றான். எனவே, தனது விடுமுறையை முடித்துச் செல்லும்போது, Mary’ஐயும் குடும்பத்தையும் அரண்மனை வேலைக்கு வரும்படி ஆணையிட்டுவிட்டுச் செல்கின்றான் Henry. அரசனின் ஆணை Mary’ஐ வைப்பாட்டியாக வைத்துக்கொள்வதற்கான போர்வையென்று அனைவருக்கும் தெரிகின்றது. தங்களது திட்டம் பலித்ததாக பூரித்துப் போகும் அப்பாவும், மாமனாரும்; எதிர்த்துப் பேச வாயில்லாத கணவன்; தனது அபிலாசையை களவெடுத்துக் கொண்டதாக குற்றச்சாட்டும் சகோதரி Anne; இந்தக் குழப்பங்களுக்குள் நடப்பவை எதிலும் சற்றும் நாட்டம் இல்லையென்றாலும் அரசனது ஆணையையும் குடும்பத்தின் எதிர்காலத்திற்காகவும் கற்பை பலிகொடுக்கின்றாள் Mary.

தனது எதிர்காலத்தை Mary திருடிவிட்டதாக தொடர்ந்து குற்றம் சாட்டும் Anne, எந்தவிதத்திலாவது தனது எதிர்காலத்தை நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற அவாவில் ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கும் வேறு ஒரு அரச பிரபல்யத்தை கைக்குள் போட்டு இரகசியத் திருமணம் செய்து கொள்கின்றாள். இதை அறியவரும் Anne’இன் குடும்பம், Anne’ஐ பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்பி விடுகின்றது. அதற்கும், Mary’தான் தன்னைக் காட்டிக் கொடுத்ததாக குற்றம் சாட்டுகின்றாள் Anne.

Anne பிரான்ஸ் போய்விட, Mary’க்கும் Henry’க்கும் இடையிலான உறவு வலுப்படுகின்றது. Mary காதல் வயப்படுகின்றாள்; கூடவே கர்ப்பமும் அடைகின்றாள். கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் வரும் உடற் சிக்கல் ஒன்றினால், 24 மணிநேரமும் படுக்கையில் ஓய்வெடுக்க வேண்டும் என வைத்தியர்களினால் பணிக்கப் படுகின்றாள் Mary. மீளவும், பெண்துணையின்றி சபலக் காரணான Henry; Mary’யினது தகப்பனாரிற்கும், மாமனிற்கும் மீண்டும் தலையிடி. வழமைபோல தங்களிற்குத் தெரிந்த ஒரேயொரு தீர்வை எடுக்கின்றார்கள் — இப்போது Mary’யின் இடத்தை நிரப்புவதற்கு, Anne’ஐ பிரான்ஸிலிருந்து வரவழைக்கின்றார்கள்!

பிரான்ஸிலிருந்து புதிய கோலத்துடன் வந்து இறங்குகின்றாள் Anne — அப்பாவினது, மாமாவினதும், அரசனதும் பேச்சுக்கெல்லாம் மாடுமாதிரி தலையாட்டுவதை விடுத்து, அழகினாலும், புத்தியினாலும், நரித்தனத்தினாலும் தனது வாழ்க்கையைத் தீர்மானிக்க ஆரம்ப்பிக்ககின்றாள் Anne. கூப்பிட்டதும் கட்டிலுக்கு வரமாட்டேன் என்றுகொண்டு, அதே சமயம் Henry’ஐ கொஞ்சம் கொஞ்சமாக வசியப் படுத்துகின்றாள் Anne. தனது அபிலாசைக்கு குறுக்கே நிற்கும் அனைவரின் வாழ்க்கையையும் நசித்துத் சின்னாபின்னப் படுத்துகின்றாள். அதற்குள் கூடப் பிறந்த சகோதரி Mary, Henry’யின் உத்தியோக பூர்வ மனைவி, எல்லோரும் அடங்கும். Henry’யின் முதல் மனைவியை விவாகரத்து பண்ணவைத்து அரசியாக சிம்மாசனம் ஏறுகின்றாள். இப்படியாக பலரின் வாழ்வினையும் சிதைத்து தனது இலட்சியத்தை எட்டும் Anne, எப்படி அதை அனுபவிக்க முடியாமல் போகின்றது என்பது மிகுதிக் கதை.

படத்தில் சகல கதாபாத்திரங்களும் கச்சிதம். வழமையாக நெஞ்சத்தை அள்ளிப்போகும் பாத்திரங்களில் வரும் Natalie Portman (“Star Wars” படங்களில் Senator Padme’யாக வருபவர்) வில்லியான பாத்திரத்தில் வெளுத்து வாங்குகின்றார்! அதிலும் கடைசியாக தனது வாழ்வைத் தானாகவே சிதைத்து தடுமாறும்போதில் மனம் இரங்கவும் வைக்கின்றார். Scarlett Johanson’ற்கு இயல்பாக ஒட்டுகின்ற பாத்திரம். அடிக்கு மேல் அடிவாங்கிய பின்னரும் சகோதரியையும், அரசனையும் காதலிக்கின்ற ஒரு பாத்திரத்தை அலட்டிக் கொள்ளாமல் செய்திருக்கின்றார். வசன அமைப்புகள், உடை, மற்றும் நகைகள் எல்லாம் அந்தமாதிரி.

இப்படியான வரலாற்றுக் படங்களை மேலைத்தேயர்கள் எடுக்கக் கூடியதாக இருப்பதற்கு காரணம், அந்தளவு தூரம் வரலாற்றுக் குறிப்புகள் இவர்களிற்கு கிடைக்கக் கூடியதாக இருப்பதுவே. இந்தியாவில் என்னதான் செழிப்பான அரச பரம்பரைகள் வாழ்ந்திருந்தாலும், வரலாற்றில் உண்மையில் என்ன நடந்தது என்பது எங்களிற்கு தொடர்ந்து கேள்விக்குறியாக இருப்பது மிகவும் கவலைக்குரிய் விடயம். வரலாற்றில் ஈடுபாடு உள்ளவர்களிற்கு ஒரு விருந்து இந்தப் படம். இதைப் பார்த்து முடித்தால் “Elizabeth (1998)“, “Elizabeth: The Golden Age (2007)” படங்களையும் பாருங்கள்.

“The Other Boleyn Girl” IMDB இணைப்பு

பிப்ரவரி 24, 2009

Australia (2008): அழகான ஒரு அவுஸ்ரேலியப் பயணம்.

அவுஸ்ரேலியாவின் சுற்றுலாத்துறைக்கு ஒரு விளம்பரமாகக் கருதப்பட்ட/கருதப்படும் ஒரு படம். படத்தைப் பார்ப்பவர்கள் அவுஸ்ரேலியாவின் இயற்கை அழகில் மயங்கிவிடுவார்கள் என்று சொல்லப் பட்டது. என்றாலும் எனக்கு அப்படி மயக்கம் ஒன்றும் பெரிதாக வரவில்லை. பெரும்பாலும அவுஸ்ரேலிய பாலைவனப் பரப்பிலேயே படம் சுற்றி சுற்றி ஓடுகின்றது. படத்தின் கதையைப் பார்த்தால் இரண்டு புத்தகங்களை ஒன்றன் பின் ஒன்றாக படித்தது போல் அமைந்திருக்கின்றது.

படம் இரண்டாம் உலகயுத்த ஆரம்ப காலத்தில் நடைபெறுவதாக எடுக்கப் பட்டிருக்கின்றது. படத்தின் முதற் பகுதி இங்கிலாந்திலிருந்து அவுஸ்ரேலியாவுக்கு வருகின்ற Lady Sarah Ashley’ஐ (Nicole Kidman) ஒட்டிப் போகின்றது. அவுஸ்ரேலியாவில் இறைச்சிக்கான மாட்டுப் பண்ணையை இயக்கிவருகின்ற தனது கணவரின் பண நிலவரம் மோசமாகி வருகின்றது என்பதை அறியும் Sarah, அந்தப் பண்ணையை விற்றுவிட்டு இங்கிலாந்து திரும்ப கணவரை வைப்புறுத்தும் நோக்கத்தோடு அவுஸ்ரேலியா பயணமாகின்றார். இவர் அவுஸ்ரேலியாவின் ஒதுக்குப் புறமான இடத்தில் இருக்கும் பண்ணையை வந்தடைவதற்கு சற்று முதலாக இவரின் கணவர் கொலை செய்யப் படுகின்றார். சாட்சியங்கள் அந்தக் கொலைக்கு அவுஸ்ரேலிய ஆதிவாசிகளின் தலைவர்தான் காரணம் என்று காட்டினாலும், உண்மையில் அந்தக் கொலையைச் செய்தது போட்டிப் பண்ணையைச் சேர்ந்தவர்கள்தான் என்று அறிகின்றார் Sarah. நிர்வாகிக்க ஆணின் தலைமையின்றி Sarah’வின் பண்ணையை கைவிடும்படியான நிர்ப்பந்தம். ஆனால், பண்ணையை விற்பதற்கு கண்வரை வைப்புறுத்துவதற்கு அவுஸ்ரேலியா வந்த Sarah, அந்த பண்ணையை கைவிடுவதில்லை என தீர்மானிக்கின்றார். அதற்கு இரு காரணங்கள்: ஒன்று, கணவரை கொலை செய்தவர்களிடமேயே பணிந்து போகக் கூடாது என்ற ஒரு வீறாப்பு; மற்றது, பண்ணையில் வசித்து வரும் ஆதிவாசி சிறுவன் Nullah’வின் எதிர்காலத்தை பாதுகாக்கும் அவா (அப்போதைய காலத்தில் ஆதிவாசிச் சிறுவர்களை பெற்றோரிடமிருந்தும், சொந்தங்களிடமிருந்தும் பிரித்து, வலுக்கட்டாயமாக கத்தோலிக்க முகாமில் சேர்த்து விடும் பழக்கம் இருந்தது.) பண்ணையைக் காப்பாற்ற ஒரேயொரு வழி, இறைச்சிக்குத் தயாராக இருக்கும் பண்ணையின் மாட்டுகூட்டத்தை பண்ணையில் இருந்து நகரத்திற்கு ஓட்டிச்சென்று அங்கிருக்கும் இங்கிலாந்து இராணுவத்திற்கு விற்பனை செய்வது. பிரச்சனை என்னவென்றால், மாட்டுக்கூட்டமென்றால் சும்மா பத்து பதினைந்து என்று இல்லை 1,500 மாடுகள்! தவிர பண்ணையிலிருந்து நகரத்திற்கு செல்வதற்கு அவுஸ்ரேலியாவின் பாலைவனாந்தரங்களைக் கடந்து செல்ல வேண்டும். பண்ணையில் துணைக்கு ஆட்களும் போதுமானதாக இல்லை. இவ்வளவு பிரச்சனைகளின் மத்தியிலும் மனந்தளராத Sarah, மாட்டுப்பட்டி ஓட்டுவதை தொழிலாகக் கொண்ட Drover’இன் (Hugh Jackman) துணையுடன் அந்த கடும் பயணத்தில் இறங்குகின்றார். இந்தப் பயணத்தில் பல்வேறு சவால்களையும் துயரங்களையும் சந்தித்தாலும் வெற்றிகரமாக தனது முயற்சியை நிறைவேற்றுகின்றார் Sarah. தவிர அந்தப் பயணத்தின்போது அவுஸ்ரேலியாவின் மீதிலும், Drover’இன் மீதிலும் காதல் வசப்படுகின்றார். கூடவே அந்த ஆதிவாசிச் சிறுவன் Nullah’வை கிட்டத்தட்ட தத்தெடுத்துக்கொள்கின்றார். இவரது பயணத்தின் வெற்றியால் கணவரின் பண்ணை இவரின் கைக்கு வந்து விட, அவுஸ்ரேலியாவில் பல்வேறு பற்றுக்களை ஏற்படுத்திக் கொள்கின்ற Sarah அங்கேயே தங்கி விடத்தீர்மானிக்கின்றார்.

படத்தி இரண்டாம் பகுதி, Nullah’வை அதிகாரிகளின் வலையிலிந்து காப்பாற்றி தன்னோடு வைத்துக்கொள்ள Sarah எதிர் நோக்கும் சவால்கள் பற்றியது. பண்ணையை தக்க வைத்துக் கொள்ள Sarah எடுத்துக்கொண்ட முயற்சிகள் வெற்றியில் முடிந்து விட, போட்டிப் பண்ணையை சேர்ந்தவர்கள் தமது சூழ்ச்சியை Nullah’வினூடாக செயற்படுத்த தீர்மானிக்கின்றார்கள். ஒழித்து ஒழித்து வைத்திருக்கும் Sarah’விடமிருந்து Nullah’வை கடத்தி கத்தோலிக்க அதிகாரிகளின் கையில் சேர்த்து விடுகின்றார்கள் போட்டிப் பண்ணைக்காரர்கள். இதனால் Nullah அவுஸ்ரேலியாவிலிருந்து தள்ளியிருக்கும் ஒரு சிறு தீவிலிருக்கும் கத்தோலிக்கப் பள்ளியில் அனுப்பிவைக்கப் படுகின்றான். இதே சமயம், இரண்டாம் உலக யுத்தத்திற்கான ஏற்பாடுகள் அவுஸ்ரேலியாவிலும் பெருக்கெடுக்க இராணுவத்திற்கு உதவுவதற்காக பிரிந்து சென்றுவிடுகின்றார் Drover. துணையின்றி தனித்திருக்கும் Sarah’விடம், Nullah’வைக் மீண்டும் காணவேண்டும் என்றால் பண்ணையை எழுதித்தா என்று நிற்கின்றார்கள் போட்டிப் பண்ணைக்காரர்கள். Sarah அதற்கு தயாரான நிலையில் உலக யுத்ததின் முழுவிகாரமும் அவுஸ்ரேலியாவையும் தொடுகின்றது — எங்கும் ஜப்பான் நாட்டின் கொடூரக் குண்டுவீச்சு என்று காலம் மாறிவிட்ட நிலையில் Sarah, Drover, Nullah மூவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் அறியமுடியாமல், சேர்வதற்கான வழியும் தெரியாமல் திண்டாடுகின்றார்கள். இவர்கள் இணைகின்றார்களா இல்லையா என்பது மிகுதிக் கதை.

இருவதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அவுஸ்ரேலியாவின் நிலைமை படம் அழகாக எடுத்துக் காட்டுகின்றது. அந்த மாட்டு மந்தையை அவரிகள் அவுஸ்ரேலியாவின் குறுக்காக ஓட்டிச்செல்லும் போது அவுஸ்ரேலியாவின் வித்தியாசமான அழகை ரசிக்கவும் வாய்ப்புக் கிடைக்கின்றது. என்றாலும் கதையை சொல்லும் விதத்தில் எங்கேயோ ஒரு குறைபாடு. படம் பெரும்பாலும் Nullah’வின் பின்னணி விமர்சனத்தோடு போகின்றது. சற்றே நகைச்சுவையுடன் செல்லும் படத்தின் முற்பகுதிக்கு அது பொருத்தமாக இருந்தாலும், உணர்ச்சிகள் கொதிக்கின்ற பின்பாகத்திற்கு அது பொருந்தவில்லை. அந்த இரு பாக-கதையமைப்பும் தேவைதானோ என்று இருக்கின்றது (படம் தமிழ்ப் படம் போல் 2.45 மணித்தியாலம் நீளம்!) Special effect’உம் (படத்தில் எக்கச் சக்கம்) தற்போதைய ஹாலிவூட் தராதரத்தில் இல்லை.

குறைகள் இருந்தாலும் அலுப்பில்லாமல் போகின்ற படம். Nicole Kidman’தான் படத்தின் மூலக்கதா பாத்திரம் என்றாலும், Hugh Jackman வரும் பாகத்தில் எல்லாம் திரையை முற்றுமுழுதாக கொள்ளை கொண்டு சென்று விடுகின்றார். அந்த பாரிய குண்டு வீச்சின் பிறகு தனது கறுப்பின நண்பரோடு உள்ளூர்த் தவறணையில் சாராயம் அருந்த முற்படு காட்சியில் நடிப்பின் உச்சத்தைத் தொடுகின்றார். பொழுது போக்கிற்காக தாராளமாகப் பார்க்கலாம்.

“Australia” IMDB இணைப்பு

பிப்ரவரி 17, 2009

Vicky Cristina Barcelona (2008): முக்கோண, நாற்கோண, ஐங்கோண காதல் கதை.

படத்தின் பெயர் உண்மையிலேயே “Vicky and Cristina in Barcelona” என்றுதான் இருந்திருக்கவேண்டும். அதுதான் படத்தின் கதையும். Vicky’யும் (Rebecca Hall) Cristina’வும் (Scarlett Johansson) ஆத்மாந்த நண்பிகள் எனினும் காதல் விடயத்தில் எதிரும் புதிருமான எண்ணப்பாடு கொண்டவர்கள் — மனதுக்குப் பிடித்த, வாழ்க்கைகு ஏற்றவன் ஒருவனோடு வாழ்வில் settle ஆவதற்குத்தான் காதல் என்பது Vicky’யின் கொள்கை; காதல் ஒரு adventure என்பது Cristina’வினது கொள்கை. நிச்சயதார்த்தம் முடிந்து இருக்கும் Vicky’யும், சமிபத்தில் (மீண்டும்) ஒரு காதல் தோல்வியைச் சந்தித்து இருக்கும் Cristina’வும் கோடைக்காலத்தில் சிலமாதங்களை கழிப்பதற்காக Barcelona’வில் (Spain) இருக்கும் Vicky’யின் உறவினர் வீட்டிற்கு வருகின்றனர். மகிழ்ச்சியாக கழிந்துகொண்டிருக்கும் நாட்களில் குழப்பத்தைக் கொண்டுவருகின்றார் அங்கே இவர்கள் சந்திக்கும் ஒரு ஓவியன் Juan (Javier Bardem.) Playboy வகையில் இருக்கும் Juan இலகுவாக Cristina’வின் மனதை கொள்ளை கொண்டுவிடுகின்றான். முதலில் Juan’ஐ வெறுக்கும் Vicky’யும் Juan’இன் மென்மையான மற்றைய முகத்தை அறிந்த பின்னர் Juan’உடன் காதல் வயப்படுகின்றார். இந்த முக்கோணக் காதலில் மேலதிக குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு வந்து சேர்கின்றார் Juan’இன் முன்னாள் மனைவி Maria (Penelope Cruz) — விவாகரத்து எடுத்த நாட்களில் Juan’ஐ கத்தியால் குத்தமுயன்றவர்!! Cristina-Maria-Juan-Vicky-Vicky’யின் எதிர்கால கண்வன் என்று ஒரே காதல் குழப்பம். இந்த குழப்பம் எங்கே சென்று முடிகின்றது என்பது படம்.

படத்தின் நடிகர்கள் எல்லாரும் சிறப்பாகச் செய்திருந்தாலும் துணை நடிகையாக வரும் Penelope Cruz எல்லாரையும் தூக்கிச் சாப்பிட்டு விடுகின்றார். ஆங்கிலத்தில் கதைப்பதும், சடாரென ஸ்பானிய மொழிக்கு மாறி பொரிந்து தள்ளுவதுமாக முழுக்கவனத்தையும் ஈர்த்துவிடுகின்றார். இந்தப் பாத்திரத்திற்காக இவர் ஆஸ்காரிற்கு தெரிவு செய்யப்பட்டிருப்பது முற்றிலும் தகும்!

மெலிதான நகைச்சுவையுடன் மிகவும் அமைதியாக படத்தை எடுத்திருக்கின்றார் Woody Allen (எழுத்தாக்கமும் இவர்தான்.) பின்னணி இசையே இல்லை என்று சொல்லலாம். Woody Allen’ஐ கிட்டத்தட்ட தமிழ்த் திரையுலக பாலச்சந்தரோடு ஒப்பிடலாம். குழப்பமான கதாபாத்திரங்களை முன்வைத்துவிட்டு கேள்விகளோடு படத்தை முடிப்பது இவரின் வழக்கம். இந்தப்படமும் அப்படித்தான். “…and they lived happily ever after” என்பதான முடிவுக்கு சாத்தியமேயில்லை! அப்படியான ஒரு படத்திற்கு நீங்கள் தயாரென்றால் ரசித்துப் பார்க்கக் கூடிய ஒரு படம்.

“Vicky Cristina Barcelona” IMDB இணைப்பு

செப்ரெம்பர் 3, 2008

In the Valley of Elah (2007): டேவிட்டும் கோலியாத்தும்

டேவிட் – கோலியாத் கதையைப் பால்யப் பருவத்தில் படித்திருப்பீர்கள்: மாமேரு மலைபோலிருந்த கோலியாத்தை சின்னஞ்சிறு சிறுவன் டேவிட் கவண்கல்லுக் கொண்டு வெற்றியடைந்த கதை. அந்த டேவிட்-கோலியாத் சண்டை நடந்த பள்ளத்தாக்குக்குப் (valley) பெயர்தான் Ella. அந்த புகழ்பெற்ற கதையை பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் சண்டையோடு ஒப்பிட்டு படம் எடுத்திருக்கின்றார்கள். என்றாலும் இந்த புதியகதையில் டேவிட் வெற்றி பெற்றதாகக்காட்டாமல் விடுவதுதான் படத்தின் சிறப்பு அம்சம்.

ஈராக்கிலில் இராணுவ சேவை செய்துவிட்டு நாடு திரும்பும் ஒரு இராணுவ வீரன் Mike திடீரென முகாமிலிருந்து காணாமல் போய் விடுகின்றான். ‘இராணுவத்திலிருந்து தப்பி ஓட்டம்’ என்ற இராணுவத்தின் முடிவை ஏற்க மறுக்கின்றார் Mikiஇன் தகப்பன் Hank (Tommy Lee Jones). இராணுவம் இவரின் முறைப்பாடுகளை அலட்சியம் செய்ய, ஏதாவது ஒரு முடிவு தெரிந்தே தீர வேண்டும் என்ற உறுதியோடு உள்ளூர் காவல்துறையின் உதவியை நாடுகின்றார் Hanks. முதலில் இவரின் முறைப்பாடுகளை புறம்தள்ளினாலும், இவரது வேண்டுகோளில் விடயம் உள்ளதென்று அறிந்தபின் Mikiஇன் தலைமறைவை Hankஓடு இணைந்து துப்புத்துலக்க முனைகின்றார் காவல்துறை அதிகாரி Emily (Charlize Theron). இவர்களது புலனாய்வு வெளிக்கொண்டுவரும் அவலங்களே படத்தின் கதை.

தற்போதைய தகவல்துறையின் பொதுவான போக்கு என்னவென்றால் ஈராக்கில் நடக்கும் போரைக் கண்டிப்பது, ஆனால் அங்கு பணி செய்யும் இராணுவவீரர்களை மாவீரர்களாகக் (Heroes) காட்டுவது. அதை விடுத்து அந்த இராணுவ வீரர்களும் சாதாரண மனிதர்கள்தான், அவர்களை இந்த அநியாயமான போர் எவ்வளவு தூரம் கெடுக்கின்றது என்பதை தெளிவாகவும், விகாரமாகவும் காட்டியிருக்கின்றது இந்தப் படம். அதிலும் இந்தப் படம் உண்மைச் சம்பவங்களை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்டிருப்பதென்பதை எண்ணும்போது சற்றே அதிர்ச்சியாகவும் உள்ளது. படத்தின் இரு பிரதான பாத்திரங்களும் படத்தின் முழுப்பொறுப்பையும் தோளில் தாங்கி அழகாக கொண்டு சென்றிருக்கின்றார்கள். 2007 ஆண்டிற்கான சிறந்த நடிகரிற்கான ஆஸ்காரிற்கு Tommy Lee Jones இந்தப் படத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்டதையும் இங்கு குறிப்பிடவேண்டும். படத்தின் கடைசியில் அந்த கொடி பறக்கவிடும் காட்சியில் சொல்லவந்த செய்தியை அழகாக சொல்லியிருப்பது மிகவும் இரசிக்கக்கூடியதாக இருக்கின்றது. தொய்து போகாத, அழகான படம்; என்றாலும் சிறுவர்களோடு பார்க்க முடியாது.

“In the Valley of Elah” IMDB இணைப்பு

Create a free website or blog at WordPress.com.