திரை விமர்சனம்

மார்ச் 26, 2009

Inkheart (2008): எழுதப்பட்ட வார்த்தைகளின் சக்தி

Fantasy எனப்படும் மந்திர தந்திரங்கள் கலந்த நாவல் வகை இங்கே மேற்குலகில் பிரபல்யம். இப்போது, Lord of the Rings, Harry Potter பட வரிசைகளின் வெற்றிக்குப் பிறகு, இவ்வகையான கதைகள் திரையரங்குகளையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கின்றன. இவ்வாறான ஒரு படமே Inkheart ஆகும். படம் 12 வயது சிறுமி Maggie’ஐப் (Eliza Bennett) பின்தொடர்ந்து போகின்றது. தான் மூன்று வயதாக இருக்கும் போது தனது தாய் Resa (Sienna Guillory) தன்னை கைவிட்டுவிட்டு ஓடிப்போய் விட்டதாக நம்பிக்கொண்டிருக்கின்றாள் Maggie. என்றாலும் உண்மை அதுவல்ல. Maggie’யின் அப்பா Mortimer’க்கு (Brenden Fraser) ஒரு அமானுக்ஷ்யமான சக்தியுண்டு. இவர் எந்த கதைப்புத்தகத்தை வாய்விட்டு வாசிக்கின்றாரோ அதில் இருக்கும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் எல்லாம் நிஜத்திற்கு வந்து விடும் (என்ன “Bedtime Stories” ஞாபகம் வருகுதோ?) அதில் இன்னொரு அம்சம் என்னவென்றால் பல விடயங்கள் புத்தகத்திலிருந்து நிஜத்திற்கு வந்துவிட, நிஜத்திலிருக்கும் ஒரு மனிதர் புத்தகத்துக்குள் போய்விடுவார்! தனது சக்தியைப் பற்றி அறியாத Mortimer, மூன்றுவயதான Maggie’க்கு “Inkheart” எனும் புத்தகத்தை வாசிக்க, கதைப் புத்தகத்திலிருந்து Dustfinger (Paul Bettany) எனும் ஒரு நெருப்பு வித்தைக்காரனும், Capiricon (Andy Serkis) எனும் வில்லன் பாத்திரமொன்றும் இவ்வுலகத்திற்கு வந்து விடுகின்றனர். இவர்களிற்குப் பதிலாக Maggie’இன் அம்மா புத்தகத்தினுள் சென்று விடுகின்றார். Dustfinger புத்தகத்திலிருக்கும் தனது குடும்பத்துடன் திரும்ப இணையத் துடித்தாலும், புத்தகத்தினுள் திரும்பப்போக விருப்பமில்லாத Capricon, அந்தப் புத்தகத்தை பறித்துக்கொண்டு தலைமறைவாகிவிடுகின்றான். Resa’வை திரும்ப இவ்வுலகத்திற்கு கொண்டுவருவதற்கோ அந்தப் புத்தகம் வேண்டும். ஆனால் அந்தப் புத்தகமோ கிடைப்பதற்கு அரிய ஒரு பழைய புத்தகம். எனவே ஒன்பது ஆண்டுகளாக அந்தப் புத்தகத்தைதேடி உலகத்தின் மூலைமுடுக்களில் இருக்கும் பழைய புத்தகக்கடையெல்லாம் ஏறி இறங்கிக்கொண்டிருக்கின்றார் Mortimer. கூடவே உண்மையான காரணம் தெரியாத Maggie’யும்.

இவர்கள் புத்தகத்தைத் தேடிக்கொண்டிருக்க, இவர்களைத் தேடிக்கொண்டிருக்கின்றார்கள் Dustfinger’உம், Capricon’உம். குடும்பத்துடன் மீள இணைவதற்காக Dustfinger’உம், வேறு கதைப்புத்தகத்தகங்களிலிருந்து செல்வங்களை வரவழைப்பத்தற்காக Capricon’உம். இந்த இரு குழுவும், Maggie’ஐயும் தகப்பனாரையும் நெருங்க, Resa’வின் மாமியார் Elinor (Helen Mirren) வீட்டில் தஞ்சம் புகுகின்றனர் Maggie’யும் Mortmier’உம். கடைசியாக அதுவும் சரிவராது போக, குடும்பத்தோடு Capricon’இடன் அகப்படுகின்றனர். பிறகென்ன வழமையான சாகசங்கள், சில ஆச்சரியங்கள், நகைச்சுவைகள் எல்லாவத்தையும் கலந்து யாவரும் நலம் என்று கதையை முடிக்கின்றார்கள்.

அவ்வளவு பெரிய நட்சத்திரப் பட்டாளம் இருந்தாலும், படம் மிகவும் சாதாரணம். படத்தின் சில அம்சங்கள் புதிதாக, இரசிக்கக கூடியதாக இருக்கின்றது. special effects’உம் பரவாயில்லை. பொதுவாக தொய்வில்லாது, அலுப்படிக்காது படம் போகின்றது. என்றாலும் புதியது என்று பெரிதாக ஒன்றும் இல்லை. அண்மையில் வந்து நொடுங்கிப்போன “Eragon“, “Golden Compass” படங்களின் வரிசையில் இதையும் சேர்த்துவிடலாம். படத்தைப் பார்க்கும்போது, அதன் மூலமான புத்தகத்தைப் படிக்கவேண்டும் என்ற ஆவல் வருவது உண்மை. என்றாலும் அந்த நாவல்கள் ஜேர்மன் மொழியில் இருப்பது துரதிஸ்டம். படம் பொதுவாக சிறாருக்கான படம்தான். சும்மா நேரத்தைப் போக்காட்டுவதற்குப் பார்க்கலாம்.

“Inkheart” IMDB இணைப்பு

மார்ச் 21, 2009

Bedtime Stories (2008): நிஜத்திற்கு வரும் கதைகள்.

Walt Disney தயாரித்து அளிக்கும் படங்கள் என்றால் குடும்பத்தோடு நம்பிப்போய், சந்தோசமாக கொஞ்ச நேரத்தை செலவழித்துவிட்டு வரலாம். அந்த வரிசையில் இன்னொரு படம் இது. படத்தைப் பார்க்கும்போது நீங்கள் ஞாபகம் வைக்கவேண்டிய விடயம் இது சிறாரிற்கான படம் என்பதுதான். அதுக்குள் கதையிலேயும், லாஜிக்கிலேயும் பிழைபிடிக்கின்ற நோக்கில் இருப்பீர்கள் என்றால் இது உங்களிற்கான படம் இல்லை.

Skeeter’இனதும் (Adam Sandler), Wendy’இனதும் (Couteney Cox) அப்பா சிறியதொரு தங்குமிட விடுதி நடத்தி வருகின்றார். விடுதி தொழிலில் படுத்துவிட, அதை நண்பன் Barry’க்கு விற்க வேண்டிய தேவை. அதை விற்கும்போது, மகன் Skeeter வயதிற்கு வந்த பின்னர் அவனுக்கு விடுதி முகாமையாளர் வேலை வழங்கவேண்டும் என்று வாக்குறுது வாங்குகின்றார். காலம் செல்ல, Skeeter’இன் தகப்பனார் காலமாகி விட, அவரிற்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதி மறக்கப்பட்டுவிடுகின்றது. வயதுக்கு வந்த Skeeter, பராமரிப்பு தொழில்நுட்பவியலாளராக இருக்கின்றான். அப்பாவின் நண்பன் Barry எப்போவாவது தனது வாக்குறுதியைக் காப்பாற்றுவார் என நம்பி நம்பி வாழ்வில் நொந்து போய் இருக்கின்றான்.

இவனது சகோதரி Wendy’யோ திருமணமாகி, இரு குழந்தைகளிற்கும் தாயாகிவிடுகின்றார். பின்பு, மணவாழ்வு கசந்துவிட, விவாகரத்துப் பெற்றுவிடுகின்றார். அத்தோடு வேலையும் பறிபோய்விட, வேலையைத் தேடி இன்னொரு மாகாணத்திற்கு செல்லும் Wendy, தனது பிள்ளைகளிற்கு காப்பாக பகலில் நண்பி/சக-ஆசிரியை Jill’ஐயும் (Keri Russell), இரவில் சகோதரன் Skeeter’ஐயும் அமர்த்திவிட்டு போகின்றார். சிறுபிள்ளைகளை பராமரிப்பதில் சற்றும் அனுபவம் இல்லாத Skeeter, தனக்குத்தெரிந்த ஒரேயொரு முயற்சியைக் கைகொள்கின்றார் — இயற்றி கதை சொல்வது. அப்போது ஆரம்பமாகின்றது மந்திர ஜாலம்….

மருமக்கட் பிள்ளைகளிற்கு Skeeter சொல்லும் கதையெல்லாம் அடுத்த நாள் நிஜத்திற்கு வந்து விடுகின்றது! தனது சொந்த வாழ்வின் கதையை கற்பனையாக்கி Skeeter சொல்ல, அது சோகமாக இருக்கின்றது என்று சொல்லி, கதைக்குள் தாங்கள் நுழைந்து, கதையை சந்தோசமாக்குகின்றார்கள் மருமக்கள். தொடர்ந்து மறுநாள் Skeeter’ன் வாழ்வில் நல்ல திருப்பங்கள் எல்லாம் ஏற்படுகின்றன. இரவுக்குக் கதைக்கும், அன்றைய நாளிற்கும் தொடர்பைக் கண்டு கொள்ளும் Skeeter, மறுநாள் இரவு கதையை சந்தோசமாக இயற்றுகின்றான். ஆனால், கதையில் ஒரு திருப்பமும் இல்லையென்று சொல்லி முடிவை மாற்றுகின்றார்கள் மருமக்கட் பிள்ளைகள். முந்தைய நாளிற்கு நேரெதிரான நாளொன்றை அனுபவிக்கும் Skeeter, இரவுக் கதையில் இருந்து நிஜத்திற்கு வருவது தான் சொல்லும் பாகங்கள் அல்ல, தனது மருமக்கள் மாற்றியமைக்கும் பாகங்களே என்று அறிகின்றான். பிறகென்ன, நல்லதாக கதையை மாற்றச் செய்வதற்கு மருமக்களை தூண்ட Skeeter எடுக்கும் முயற்சிகள் கலப்பாகப் போகின்றது.

சிறுவர்களிற்கான Fairy Tale கதைகள் போன்று, வில்லன், காதலி, நண்பன் என்று எல்லாம் படத்தில் உண்டு. கலகலப்பாக படத்தைக் கொண்டு போய், என்னதான் அதிக்ஷ்டம் வாழ்வில் விளையாடினாலும், வாழ்வின் ஒரு கட்டத்தில் எமது வாழ்வின் போக்கை நாம் எமது கையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற செய்தியோடு படத்தை முடிக்கின்றார்கள். Adam Sandler’க்கு என்று அளந்து செய்தமாதிரி ஒரு படம்; வழமையான Dramedy பாத்திரத்தில் வந்து கலக்குகின்றார். அந்த இரு சிறு பிள்ளைகளும் அந்தமாதிரி! முக்கியமாக அந்த சிறு பெண் அவ்வளவு ஒரு கொள்ளை அழகு!! மற்றைய அனைத்து பாத்திரங்களுமே, படத்தில் சிக்கென்று ஒட்டுகின்றார்கள். படத்தில் இருக்கும் கணிசமான அளவு special effect’உம் தராதரமாக இருக்கின்றது. மொத்தத்தில் சந்தோசமாக சிறுவர்களோடு ஒரு ஒன்றரை மணி நேரத்தைக் கழிப்பதற்கு மிகவும் தகுந்ததொரு படம்.

“Bedtime Stories” IMDB இணைப்பு

மார்ச் 11, 2009

Twilight (2008): காதல், இரத்தத்தில்…

என்னவோ தெரியாது, இங்கே மேற்கத்தைய மக்களிற்கு இரத்தக்காட்டேறி (vampire) சம்பந்தப்பட்ட படங்கள் என்றால் அப்பிடியொரு நாட்டம். அப்பிடிப்பட்ட படம் எப்பிடியும் வருடத்திற்கு ஒன்றாவது வந்து விடும். அப்பிடியிருக்கையில் இரத்தக்காட்டேறியை மையமாகக் கொண்டு Stephenie Meyer எழுதிய Twilight புத்தகத்தொடர் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாகிவிட அதை விட்டுவைப்பார்களோ? அந்தத்தொடரின் முதலாவது பாகம்தான் இந்தப் படம்.

தாயார் மீள் திருமணம் செய்துகொண்டு, புது கணவனின் தொழில் காரணத்தால் அவருடன் வேறிடம் செல்லவேண்டியிருப்பதால், கொதிக்கின்ற Arizona மாநிலத்திலிருந்து, சொந்தத் தகப்பன் இருக்கும், எப்போதும் வானம் அழுது வடியும் Washington மாநிலத்திற்கு இடம் பெயர்கின்றாள் 17 வயது Bella Swan (Kristen Stewart.) புதுப் பாடசாலையில் இவளை இலகுவாக ஒரு மாணவர் குழாம் நண்பியாக ஏற்றுக் கொண்டாலும், இவளது கவனம் வித்தியாசமான போக்குடன், எல்லாரையும் விட்டு தனித்து இயங்கும் குழு ஒன்றின் மீது ஈர்க்கப் படுகின்றது; முக்கியமாக அதிலிருக்கும் சகமாணவன் Edward Cullen மீது (Robert Pattinson — நம்ம Harry Potter Cedric பாருங்கோ.) போதாக் குறைக்கு Edward’ஏ இவளுக்கு ஆய்வுகூட பங்காளியாகவும் அமர்த்தப் படுகின்றான். Bella இவனை நோக்கி ஈர்க்கப்பட, Edward’ஓ இவளைக் கண்டாலே அருவருப்பதுபோல தோற்றம் காட்டுகின்றான். இதனால் குழப்பமடையும் Bella அதற்கு காரணம் கேட்பதற்காக சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருக்கும்போது, வாகனத் தரிப்பிடத்தில் நடக்கும் விபத்திலிருந்து Bella’வின் உயிரைக் காப்பாற்றுகின்றான் Edward; அதுவும் சும்மாயில்லை — மோத வந்த வாகனத்தை கையினால் தடுத்து நிறுத்தி. Edward பற்றிய மர்மம் இன்னமும் முற்றிப் போக, மேற்கொண்டு ஆய்வுசெய்யும் (நம்ம Googling’தான்!) Bella, Edward ஒரு இரத்தக் காட்டேறி என உய்த்தறிகின்றாள். இந்தக் கண்டுபிடிப்போடு Edward’ஐ இவள் எதிர் கொள்ள, அவனும் அதை ஏற்றுக்கொள்கின்றான். அவன் மட்டுமல்ல, அவனது முழுக் குடும்பமுமே. என்றாலும், இவர்கள் மனித இரத்தத்தை உணவாகக் கொள்வதை விடுத்து மிருக இரத்தத்தோடு மட்டும் வாழ்க்கையை ஓட்டுகின்றார்கள். இரகசியங்கள் பரிமாறப் பட, இருவர்களிற்கும் இடையில் இரும்புப் பிணைப்பாகக் காதல் பிறக்கின்றது.

அடிபாடு, துரத்தல் என்றெல்லாம் படத்தின் பின்பகுதியில் இருந்தாலும், மொத்தத்தில் உருக உருக காதல் செய்வதைத் தவிர, அங்க பெரிசா ஒரு கதையும் இல்லை. வழமையாக இரத்தக் காட்டேறி படங்கள் என்றால், பயங்கரம், ஆக்ஸன், பாலியல் என்றுதான் அமைந்திருக்கும் — என்வே இவை பொதுவாக ஆண்களிற்கான படங்களாகத்தான் அமையும். அந்த விதத்தில் Twilight மாறுபட்டது — இதை ஒரு Chick-Flick என்று சொல்லிவிடலாம்; அதாவது பெண்களிற்கு மிகவும் பிடிக்கக் கூடிய படம். அதிலும் Teenage பெண்களிற்கு.

கதைப் புத்தகங்களிலிருந்து திரைக்கு வரும் படங்களின் வழமையான சாபக்கேடு இதற்கும் உண்டு — ஆங்காங்கே சில காட்சிகள், சம்பவங்களிற்கு படத்தில் தரப்படும் விளக்கம் போதுமானதாக இல்லை என்பதாக ஒரு குறைபாடு. என்றாலும் இரண்டு விடயத்தில் படம் சிறந்து நிற்கின்றது. ஒன்று, அந்தக் காதல் சோடி — காமம் இல்லாமல், திரை முழுவதும் காதலை கனிய கனிய வடிய விடுகின்றார்கள்! மற்றது, அழகான ஒளிப்பதிவு; படத்தில் ஓடும் காதலைப் போல, கமெராவும் மென்மையாக ஓடுகின்றது. எனவே, கதையின் ஆழத்திற்கு வரும் முன்னர், படத்தின் முன்பாதியில் அலுப்புத்தட்டினாலும், பின் பாதியை அலுப்பில்லாமல் கொண்டு போயிருக்கின்றார்கள். மென்மையுள்ளம் கொண்டவர் என்றால் பார்க்கலாம், குறை சொல்ல மாட்டீர்கள்.

“Twilight” IMDB இணைப்பு

பிப்ரவரி 19, 2009

City of Ember (2008): உலகைத் தொலைத்த பின் 200 ஆண்டுகளிற்குப் பிறகு…

பூவுலகம் போன்ற கற்பனை உலகம் ஒன்றில் நடப்பதாக அமைக்கப்பட்டிருக்கும் கதை — அது எமது பூமியில் நடக்கும் கதைதான் என்று வாதிப்பதற்கும் சாத்தியமுண்டு. ஒரு காலப்பகுதியில் உலகத்தின் வெளிப்பரப்பு மனித வாழ்க்கைக்கு தகுதியில்லாது போய்விடுகின்றது. அதன் காரணமாக பாதாள நகரமொன்றை மனிதர்கள் உருவாக்குகின்றார்கள். இது மின்சாரம் போன்ற, ember என அழைக்கப்படும், ஒரு சக்தியினால் உயிரூட்டப்படுகின்றது. இந்த “city of ember” நகரத்திலிருந்து மீள உலகின் மேற்பரப்புக்கு வரும் வழியை பொதுமக்களிடமிருந்து மறைத்துவிடுகின்றார்கள் அவ்வுலகின் அதிகாரிகள்; அந்த இரகசியம் ஒரு பெட்டியிலிடப்பட்டு மூடப்பட்டு “city of ember”‘இன் நகரக் ஆளுணர்கள் ஊடாக பரம்பரை பரம்பரையாக பாதுகாக்கப் பட்டு வருகின்றது. இந்த இரசியத்தை தொடர்ந்து பாதுகாக்கும் விதமாக அந்த பெட்டியும் விசேடமாக வடிவமைக்கப் பட்டிருக்கின்றது — அதை யாராலும் திறக்க முடியாது, ஆனால் 200 ஆண்டுகளின் பின்னர் அது தானாகவே திறக்கும்.

வருடங்கள் உருண்டோட, city of ember நகரவாசிகள் வெளியுலக சிந்தனையையே மறந்து வாழத்தொடங்குகின்றார்கள். தவிர நகர எல்லையை தாண்ட முயற்சிப்பது தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்படுகின்றது. செம்மறியாட்டு வாழ்க்கை போல மக்களின் வாழ்க்கை — உரிய வயதுக்கு வந்தபின்னர் வாலிவர்களிற்கான (ஆண்களும் பெண்களும்) வேலை குலுக்கல் சீட்டிளுப்பு மூலம் தெரிவு செய்யப்படுகின்றது. சுய விருப்பங்கள் பற்றியோ, புது எண்ணப்பாடுகள் பற்றியோ சிந்தனையின்றி வாழ்க்கை சென்றுகொண்டிருக்கின்றது. இவ்வாறு நூற்றாண்டுகள் ஓடிவிட, பரம்பரை பரம்பரையாக வந்துகொண்டிருந்த நகரக் ஆளுணர்கள் வம்சம் குறித்த ஒரு ஆளுணரின் அகால மரணத்தினால் முறிந்துவிடுகின்றது; அந்த மரணத்துடன் city of ember’ஐ விட்டு வெளியேறும் இரகசியத்தைக் கொண்ட பெட்டியும் மறக்கப்பட்டு பரணையில் இடப்பட்டு தூசு கட்டத்தொடங்கி விடுகின்றது. நகரத்தின் ஆளுமை இப்போது ஒரு சுய நலக்காரணான Cole’ன் (Bill Murray) கையில் வந்து விட, 200 ஆண்டு காலம் கழியும் தருவாயில் அந்த இரகசியப் பெட்டி திறந்து கொள்ளும்போதிலும் அதை கவனிக்க எவருமில்லை.

இவ்வளவு கதையும் படத்தின் ஒரு சிறு முன்பகுதி. படத்தின் பிரதான கதை பருவத்துக்கு வரும் இரு வாலிபர்களை சுற்றி அமைகின்றது. Lina (Saorise Ronan) முறிந்து விட்ட நகர ஆளுணர் பரம்பரையில் பிறந்த ஒரு துடிப்பான பெண்; இவளின் நண்பன் Doon (Harry Treadaway). இவர்கள் வேலை செய்வதற்கான பிராயத்தை அடையும் தருவாயில் நகரத்தின் வாழ்க்கைத்தரம் கணிசமான அளவில் சீர் கெட்டுப் போகத் தொடங்கிவிடுகின்றது. Ember’ஐ உற்பத்தி செய்யும் இயந்திரம் அடிக்கடி செயலிழந்து போக, நகரம் அடிக்கடி இருட்டடிப்புக்கு உள்ளாகின்றது; தவிர, நகரத்தின் உணவுக் களஞ்சியமும் (தகரத்தில் அடைக்கப்பட்ட உணவுகள்தான் 200 வருடங்களாக காப்பாற்றிவருகின்றது) முடிந்து போகும் தருவாயிலுள்ளது. இவற்றையெல்லாம் பொதுமக்களிடமிந்து மறைத்து விட்டு, உணவு பண்டங்களை பதுக்கத்தொடங்குகின்றான் Cole. தங்களது நகரம் அழிவின் வாயிலில் உள்ளது என்பதை உணர்வது Lina’வும் Doon’உம் மட்டுமே.

200 வருட இரகசியத்தை கட்டிக்காத்து வந்த அந்த பெட்டியை தற்செயலாகக் கண்டு பிடிக்கின்றாள் Lina. ஆனால் அதற்குள் இருந்த ஆவணமோ காலத்தின் போக்கினால் சின்னா பின்னமாக கிழிக்கப்பட்டு இருக்கின்றது; அவற்றில் சில துண்டுகள் முற்றாகவே தொலைந்தும் போய்க் கிடக்கின்றது. தனது உய்த்தறியும் திறனினால், நகரத்தை விட்டு வெளியேறும் இரகசியம் அந்த சிதைந்து போன ஆவணத்தில்தான் இருக்கின்றது என உணரும் Lina, விடுபட்டுப் போன தகவல் துகள்களை Doon’உடன் இணைந்து திரட்டி, நகரத்திலிருந்து வெளியேறும் வழியை கண்டுபிடிக்க முயல்வது படத்தின் மிகுதிகதை. இதில் முக்கியம் என்னவெனில், “நகரத்திற்கு வெளியே” என்பது என்னவென்றே இவர்களிற்குத் தெரியாது.

சிறுவர்களிற்கான ஒரு சாகசக் கதை போன்று வெளிப்பார்வைக்குத் தெரிந்தாலும், நிறைய தத்துவ கருத்துக்கள் செறிந்து இருக்கின்றது. உதாரணத்திற்கு படத்தின் அடிப்படையில், எவ்வாறாக மனிதர்கள் முதுமை அடைய செம்மறியாடுத் தனமான மனப்பாங்கு வளர்ந்து வருகின்றது என்று காட்டப் படுகின்றது. இவ்வாறாக மேலும் பலவிடயங்களைச் சொல்லலாம்.

Atonement படத்தில் வயதிற்கு மிகுந்த நடிப்புத்திறனைக் காட்டி ஆஸ்காரிற்கு தெரிவான Saoirse Ronan’ற்கு வயதுக்கு ஏற்ற ஒரு படம். அலட்டிக் கொள்ளாமல் செய்திருக்கின்றார். சாகசக் கதையென்றாலும் அவ்வளவுதூரம் விறுவிறுப்பு இல்லாமல் இருப்பதுதான் படத்தின் ஒரு பிழை. மற்றப்படி படத்தில் ஒரு குறையும் இல்லை. அந்த வித்தியாசமான ஒரு கற்பனைப் பாதாள நகரத்தை திரைக்கு கொண்டுவந்ததில் தமது திறணை வெளிக்காட்டியிருக்கின்றார்கள் பட, மற்றும் ‘செட்’ இயக்குணர்கள். பெரும்பாலும் சிறுவர்களிற்கான படம்தான் என்றாலும் வயதுக்கு வந்தவர்களும் தாராளமாகப் பார்க்கலாம்.

“City of Ember” IMDB இணைப்பு

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.