திரை விமர்சனம்

மார்ச் 28, 2009

The Reader (2008): காலத்தை வென்ற காதல்

பொதுவாக Drama வகையிலான படங்கள் எனக்குப் பொருத்தமானவையல்ல — அவற்குக்கு கவனம் கொடுத்து பார்த்து முடிப்பது என்பது எனக்குக் கொஞ்சம் கஸ்டமான விடயம். அப்படியான என்னையும் சிந்தை சிதறாது இரண்டு மணித்தியாலம் கட்டிவைத்திருந்தது இந்தப் படம்! ஐந்து ஆஸ்காரிற்கு தெரிவாகி, அவற்றில் ஒன்றைத் தட்டிக் கொண்டு போன படம்; அது ஏன் என்பது படத்தைப் பார்க்கும்போது தெளிவாகத் தெரிகின்றது.

1958’ஆம் ஆண்டு ஜேர்மனி — இரண்டாம் உலகயுத்ததை முடித்துக் கொண்டு அதன் பாதிப்பிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டு வருகின்றது. இங்கே 36 வயதான Hanna’வுக்கும் (Kate Winslet), 15 வயதான Michael’க்கும் (David Kross) இடையில் ஆரம்பிக்கும் காதலைச் சித்தரிக்கின்றது படத்தின் முன்பகுதி. Hanna ஒரு பேரூந்து நடத்துணர் (ticket conductor). இவர் கிட்டதட்ட பாடசாலைப் பையனான Michael’ஐ வழைத்துப் போடுகின்றார் என்றே சொல்லலாம். இவர்கள் இருவருக்கும் இடையிலான உறவு பெரும்பாலும் உடலுறவு சம்பந்தப் பட்டது என்றாலும், அதில் இன்னுமொரு பெரும்பங்கு, Hanna’வின் வற்புறுத்தலில் பேரில், Michael அவளிற்கு புத்தகம் வாசித்து கதை சொல்வதில் போகினறது. மூக்குவரையில் காதலில் மூழ்கி இருக்கும் Michael, Hanna என்னசொன்னாலும் அதற்கு இணங்கிப் போகின்றான். இவர்களின் கள்ளத்தனமான் இந்த உறவு இவ்வாறு சென்று கொண்டிருக்கும்போது, Hanna’வுக்கு ஒரு அலுவலக வேலைக்கான பதவியுயர்வு வருகினறது. அத்துடன் திடீரென தலை மறைவாகிவிடுகின்றாள் Hanna!

மிகவும் மனமுடைந்து போகும் Michael கொஞ்சம், கொஞ்சமாக தெளிந்து பல்கலைக் கழகத்திற்குச் செல்கின்றான். அங்கு வக்கீல் துறையில் படிப்பைத் தொடர்கின்றான். இவனது பல்கலைக் கழக படிப்பின் ஒரு பகுதியாக ஒரு நீதிமன்ற வழக்கை பார்வையிடவேண்டி வருகின்றது. ஹிட்லர் காலத்தில் யூத மக்களை அடைத்து வைத்திருந்து படுகொலை செய்வதற்கு பெயர் பெற்ற ஒரு சிறைச்சாலை காவலாளிகள் மீது, அங்கிருந்து தப்பிய ஒரு பெண் போடும் வழக்கு. வழக்கைப் பார்வையிட செல்லும் Michael’ற்கு பெரிய அதிர்ச்சி காத்திருக்கின்றது — அங்கே குற்றவாளி கூண்டில் இருக்கும் ஆறு பேரில் ஒருத்தி Hanna! மிகுதிக் கதையை நான் இங்கு சொல்லக் கூடாது.

படத்தின் கதையோட்டம் மிகவும் அழகு; காதலில் மர்மம், மர்மத்தில் ஆச்சர்யம், இன்பத்தில் சோகம், சோசகத்தில் சுகம் என்று நுணுக்கமாக நெய்யப்பட்டிருக்கின்றது. நடிகர்கள் ஆளிற்கு ஆள் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கின்றார்கள். Kate Winslet இந்தப் படத்திற்காக ஆஸ்காரைத் தட்டிக்கொண்டது தகும் என்றாலும், அவரது முதிர்ச்சிக்கு ஈடு கொடுக்கின்றார்கள் மற்றைய அனைவரும். இளம் நடிகர் David Kross’உம் அபாரம். வயதுக்கு வந்த Michael ஆக வரும் Ralph Fiennes (எங்கட Harry Potter Voldemort) நெஞ்சத்தில் சுமையைக் கட்டிக்கொண்டு அவதிப்படும் பாத்திரத்தில் சிக்கென்று பொருந்துகின்றார். கொஞ்ச நேரத்திற்கு வந்து போகும் Lena Olin கூட பல்லாண்டு காலமாக மனதில் இருக்கும் வஞ்சத்தை விக்ஷமாகக் கொட்டும் வேளையில் செஞ்சை அள்ளிச் செல்கின்றார். படத்தில் கதை வசனங்கள் கூட அந்தமாதிரி! முக்கியமாக நீதி மன்றத்தில் Hanna அளிக்கும் பதில்களிலும், படத்தின் கடைசிக் கட்டத்தில் அந்த யூதமுகாமிலிருந்து தப்பிவந்த பெண்ணோடு Michael உரையாடும் காட்சியிலும். கூடவே நெறியாள்கை, ஒளியமைப்பு எல்லாவற்றிலும் சிறந்து நிற்கின்றது படம். படத்தின் முன் 30% பாகத்தில் Kate Winslet ஆடைகளுடன் இருப்பதை விட, இல்லாது இருப்பதுதான் அதிக நேரம். அது கூட விகாரமாக இல்லாது படத்துடன் இயல்பாக கலந்து விடுகின்றது.

தயாரிப்பாளர்கள் விடும் ஒரே பிழை, பட விளம்பரங்களில் படத்தை கிட்டத்தட்ட ஒரு மர்மப் படம் போன்று சித்தரித்திருப்பது. படத்தில் மர்மம் உண்டு என்றாலும், அது அங்கே படத்தின் அரைவாசியுடன் நின்றுவிடுகின்றது. படம் அடிப்படையில் ஒரு காதல் படம். தவிர, படத்தில் வரும் Michael’இன் ஆசிரியர் குறிப்பிடுவது போன்று, “குற்றவாளி” எனப்படுபவன் யார் என்பதை ஒரு ஆழமான கண்ணோட்டத்தோடு பார்க்க முனைவது படத்தின் மறைமுகமான நோக்கம். ஆங்கில பட இரசிகள் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.

“The Reader” IMDB இணைப்பு

மார்ச் 22, 2009

The Happening (2008): என்ன நடந்தது சியாமளனுக்கு..?

The Sixth Sense” (1999) பார்த்த காலத்திலேயிருந்து Night சியாமளனின் தீவிர ரசிகன் நான். அதன் பின் வந்த அவரது சகல படங்களையும் பார்த்திருக்கின்றேன். என்றாலும், The Sixth Sense அளவுக்கு இன்னொரு படத்தை தர அவரால் முடியவில்லை. “Night சியாமளன் தரமான முடிவு” மாதிரியான முடிவை நாங்கள் படத்தில் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டதுதான் அதற்கு காரணமோ தெரியாது. இதுவரை காலமும் வந்த இவரது படங்களிலேயே மிகப் பெரிய ஏமாற்றம் இந்தப் படம். இதற்கு முந்திய “Lady in the Water” படத்தில் fantasy கருவமைப்புக்குத் தாவிய Night சியாமளன், மீண்டும் தனக்கு பழக்கமான மர்மம், பயங்கரம் என்ற கதைக்கருவுக்கு வந்திருக்கின்றார் இந்தப் படத்தில். என்றாலும், ஹாலிவூட்டில் ஆயிரம் தரம் முதலேயே எடுக்கப் பட்ட கதையை இவரும் முயன்றிருப்பதுதான் ஏனென்றுதான் தெரியவில்லை!! 😦

New York’இல் மக்கள் திடீரென ஒருவிதமான நோய்க்கு உண்டாகின்றனர் — விளைவு, எல்லோரும் இடம், முறை பராமல் தற்கொலை பண்ணத்தொடங்குகின்றனர்! இது பயங்கரவாதிகளின் தாக்குதல் என (வழமை போல) நினைக்கின்ற அரசாங்கத்தின் சித்தாந்தங்களிற்கு அப்பாற்பட்டு, மிக விரைவாக அண்டைய மாநிலங்களிற்கும் பரவத்தொடங்குகின்றது இந்த நோய். பக்கத்து மாநிலத்தில் இருக்கும் Philadelphia நகரத்தில் பாடசாலை விஞ்ஞான ஆசிரியர் Elliot (Mark Wahlberg). இந்த நோயைப்பற்றி அறியும் இவர் மனைவி Alma’வுடன் (Zooey Deschanel) நகரத்தைவிட்டு தப்பி ஓடத் தீர்மானிக்கின்றார். வேகமாக பரவும் அந்த நோயோடு இவர்கள் கண்ணாம் பூச்சி ஆட்டம் ஆடுவதை ஒட்டி படம் போகின்றது.

படத்தில் வழமை போல “Night சியாமளன் முடிவு” இல்லாததுதான் படத்தில் வித்தியாசம். 8-( ஹாலிவூட்டில் ஆஸ்காரிற்கு எதிரான விருது Razzi விருதுகளாகும். ஒவ்வொரு ஆண்டும் ஹாலிவூட்டில் திறமையைக் காட்டியவர்களிற்கு ஆஸ்கார் விருது அளிக்கப்பட, ஹாலிவூட்டை நாறடித்தவர்களிற்கு Razzi ‘விருது’ அளிக்கப்படும். சென்ற ஆண்டில், மோசமான படம், மோசமான இயக்குணர், மோசமான நடிகர், மோசமான கதைவசனம் என்று நான்கு Razzi ‘விருதுகளிற்கு’ தெரிவானது இந்தப் படம் (நல்லகாலத்திற்கு ஒன்றையும் வெல்லவில்லை.) Mark Wahlberg சிறந்தவொரு நடிகர், இதிலே சொதப்பியிருக்கின்றார் 😦 (இடைக்கிடையில், இவரையும் அந்த நோய் பாத்தித்துவிட்டதோ என்று எண்ணும்வகையில்!) கதைவசனமும் அப்படியே… என்றாலும், இயக்கத்தை அந்தளவு மோசம் என்று சொல்ல முடியாது. அந்த நோயின் பயங்கரத்தை காட்டுவதில் நெஞ்சை சில்லிட வைக்கின்றார் சியாமளன். ஒளிப்பதிவும் அவ்வாறே. கொஞ்சம் நட்டுக் கழண்ட பாத்திரம் ஒன்றில் வரும் Zooey Deschanel’இன் நடிப்பையும் பாராட்டலாம். ஒரு விதத்தில் பார்க்கப்போனால், Night சியாமளன் மட்டும் இதை எடுத்திருக்காவிடில் இதை நல்ல படமென்றே சொல்லிவிடலாம். என்றாலும், சியாமளனிடமிருந்து வரும்போது அதை மன்னிக்க முடியவில்லை.

வந்த சியாமளன் படங்களில் முதலாவதாக ‘R’-முத்திரை தாங்கி வந்திருக்கின்றது படம், சிறாருக்கு ஒப்பாத பயங்கரக் காட்சிகளை கொண்டிருப்பதால். நீங்கள் சியாமளன் ரசிகர் எனின் எப்படியும் இதைப் பார்ப்பீர்கள். மற்றவர்கள் நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை.

“The Happening” IMDB இணைப்பு

செப்ரெம்பர் 3, 2008

In the Valley of Elah (2007): டேவிட்டும் கோலியாத்தும்

டேவிட் – கோலியாத் கதையைப் பால்யப் பருவத்தில் படித்திருப்பீர்கள்: மாமேரு மலைபோலிருந்த கோலியாத்தை சின்னஞ்சிறு சிறுவன் டேவிட் கவண்கல்லுக் கொண்டு வெற்றியடைந்த கதை. அந்த டேவிட்-கோலியாத் சண்டை நடந்த பள்ளத்தாக்குக்குப் (valley) பெயர்தான் Ella. அந்த புகழ்பெற்ற கதையை பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் சண்டையோடு ஒப்பிட்டு படம் எடுத்திருக்கின்றார்கள். என்றாலும் இந்த புதியகதையில் டேவிட் வெற்றி பெற்றதாகக்காட்டாமல் விடுவதுதான் படத்தின் சிறப்பு அம்சம்.

ஈராக்கிலில் இராணுவ சேவை செய்துவிட்டு நாடு திரும்பும் ஒரு இராணுவ வீரன் Mike திடீரென முகாமிலிருந்து காணாமல் போய் விடுகின்றான். ‘இராணுவத்திலிருந்து தப்பி ஓட்டம்’ என்ற இராணுவத்தின் முடிவை ஏற்க மறுக்கின்றார் Mikiஇன் தகப்பன் Hank (Tommy Lee Jones). இராணுவம் இவரின் முறைப்பாடுகளை அலட்சியம் செய்ய, ஏதாவது ஒரு முடிவு தெரிந்தே தீர வேண்டும் என்ற உறுதியோடு உள்ளூர் காவல்துறையின் உதவியை நாடுகின்றார் Hanks. முதலில் இவரின் முறைப்பாடுகளை புறம்தள்ளினாலும், இவரது வேண்டுகோளில் விடயம் உள்ளதென்று அறிந்தபின் Mikiஇன் தலைமறைவை Hankஓடு இணைந்து துப்புத்துலக்க முனைகின்றார் காவல்துறை அதிகாரி Emily (Charlize Theron). இவர்களது புலனாய்வு வெளிக்கொண்டுவரும் அவலங்களே படத்தின் கதை.

தற்போதைய தகவல்துறையின் பொதுவான போக்கு என்னவென்றால் ஈராக்கில் நடக்கும் போரைக் கண்டிப்பது, ஆனால் அங்கு பணி செய்யும் இராணுவவீரர்களை மாவீரர்களாகக் (Heroes) காட்டுவது. அதை விடுத்து அந்த இராணுவ வீரர்களும் சாதாரண மனிதர்கள்தான், அவர்களை இந்த அநியாயமான போர் எவ்வளவு தூரம் கெடுக்கின்றது என்பதை தெளிவாகவும், விகாரமாகவும் காட்டியிருக்கின்றது இந்தப் படம். அதிலும் இந்தப் படம் உண்மைச் சம்பவங்களை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்டிருப்பதென்பதை எண்ணும்போது சற்றே அதிர்ச்சியாகவும் உள்ளது. படத்தின் இரு பிரதான பாத்திரங்களும் படத்தின் முழுப்பொறுப்பையும் தோளில் தாங்கி அழகாக கொண்டு சென்றிருக்கின்றார்கள். 2007 ஆண்டிற்கான சிறந்த நடிகரிற்கான ஆஸ்காரிற்கு Tommy Lee Jones இந்தப் படத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்டதையும் இங்கு குறிப்பிடவேண்டும். படத்தின் கடைசியில் அந்த கொடி பறக்கவிடும் காட்சியில் சொல்லவந்த செய்தியை அழகாக சொல்லியிருப்பது மிகவும் இரசிக்கக்கூடியதாக இருக்கின்றது. தொய்து போகாத, அழகான படம்; என்றாலும் சிறுவர்களோடு பார்க்க முடியாது.

“In the Valley of Elah” IMDB இணைப்பு

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.